`பைரி’ பட கெட்டப்பே சிக்கலை ஏற்படுத்திவிட்டது - எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா குறித்து பகிரும் நண்பர் | Friend shares about writer francis kiruba

வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (07/05/2019)

கடைசி தொடர்பு:14:54 (07/05/2019)

`பைரி’ பட கெட்டப்பே சிக்கலை ஏற்படுத்திவிட்டது - எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா குறித்து பகிரும் நண்பர்

எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவுடன் கவித்ரன்

எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா, `பைரி'  என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்துக்காகத்தான் நீளமான முடி, தாடி வளர்த்திருந்தார். அதுவே அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா, ஒருவரை கொலை செய்துவிட்டார் என்ற தகவல் காட்டுத் தீ போல பரவியது. இறுதியில் பிரான்சிஸ் கிருபா, கொலை செய்யவில்லை. உயிருக்குப் போராடிய அறிமுகம் இல்லாத நபருக்கு உதவிதான் செய்தார் என்று தெரிந்ததும் அவரை விடுதலை செய்தனர் போலீஸார். 

 மே 5-ம் தேதி எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபாவுக்கு மறக்க முடியாத நாளாக மாறியிருக்கிறது. மது அருந்திவிட்டு கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்குச் சென்ற எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா, அங்கு வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்தியில் மரண ஓலமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார். உடனடியாக அவரின் தலையை தன்னுடைய மடியில் வைத்துக் கொண்ட பிரான்சிஸ் கிருபா, தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துள்ளார். அதைப்பார்த்த மற்றவர்களின் கண்களுக்கு அது தவறாகத் தெரிந்தது. 

 பிரான்சிஸ் கிருபாவின் உருவத் தோற்றமும் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது. மடியில் கிடந்தவரின் மூச்சு நின்றுபோனதால் ஆத்திரத்தில் உதவி செய்த பிரான்சிஸ் கிருபாவை அங்குள்ளவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதோடு கோயம்பேடு காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர். போலீஸாரும் அவசர அவசரமாக அடையாளம் தெரியாத ஒருவரை நெல்லையைச் சேர்ந்த பிரான்சிஸ் கிருபா கொலை செய்துவிட்டதாகக் கருதினர். 

 பிரான்சிஸ் கிருபா

பிரான்சிஸ் கிருபா, பிரபல எழுத்தாளரும் கவிஞரும் என்ற தகவல் தெரிந்ததும் கோயம்பேடு போலீஸார் ஒருகணம் ஷாக்காகிவிட்டனர். அதன்பிறகு பிரான்சிஸ் கிருபாவிடம் நடந்த விசாரணையின் கோணம் மாறியது. இந்தச் சமயத்தில் பிரான்சிஸ் கிருபாவின் நட்பு வட்டாரத்தில் இருக்கும் கவித்ரன் என்பவர் காலையிலேயே காவல் நிலையத்துக்குச் சென்றார். அவரிடம் பேசினோம். 

 ``புறா பந்தயத்தை மையப்படுத்திய சினிமா `பைரி' . இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரான்சிஸ் கிருபா நடிக்கிறார். அதற்காகத்தான் அந்த கெட்டஅப்பில் கடந்த 4 மாதங்களாக அவர் இருந்துவருகிறார். இலக்கியத்துக்காக அவர் திருமணமே செய்யவில்லை. 

சென்னை கே.கே.நகரில் தனியாக வசித்துவரும், அவரின் உலகமும் தனிமைதான். நட்பு வட்டாரத்தோடு மட்டும் இலக்கியம் சார்ந்து பேசுபவர். காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தியபோது வியாசர்பாடியைச் சேர்ந்த ஒருவரின் செல்நம்பரை அவர் கொடுத்துள்ளார். அதில் தொடர்பு கொண்ட போலீஸாருக்கு கவிஞர் பால்முகிலின் நம்பர் கிடைத்துள்ளது. அவர்தான் எனக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக நான், பால்முகிலன் மற்றும் பைரி  படத்தின் ஹீரோ சையத் மஜித் ஆகியோர் காவல் நிலையத்துக்குச் சென்றோம்.

பிரான்சிஸ் கிருபா

அங்கு லாக்அப்பில் பிரான்சிஸ் கிருபா அமர்ந்திருந்தார். அவரிடம் பேசினோம். அவருக்கு ஆறுதல் கூறினோம். பிறகு பிரேத பரிசோதனை அறிக்கை, சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பிரான்சிஸ் கிருபாவை போலீஸார் விடுவித்தனர். அவரை காரில் வீட்டுக்கு அழைத்துச் சென்றோம். இரவு சாப்பிட்டு விட்டு அவர் தூங்கச் சென்றார். அதன்பிறகுதான் நாங்கள் வீட்டுக்குக் கிளம்பினோம்,

பிரான்சிஸ் கிருபாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள பத்தினிபாறை கிராமம் ஆகும். அவரின் சகோதரர்களுக்கு திருமணமாகிவிட்டது. பிரான்சிஸ் கிருபாவின் அப்பாவுக்கு 100 வயது. அவர், படுத்தபடுக்கையாக வீட்டில் இருக்கிறார். அப்பாவையும் சகோதரர்களையும் சந்திக்க கிருபா செல்வார். நாகர்கோவிலில் இலக்கிய வட்டாரத்தில் பிரான்சிஸ் கிருபாவுக்கு தொடர்பு உள்ளது. அவரின் அடுத்த கவிதை தொகுப்பு விரைவில் வரவுள்ளது. அழகர்சாமியின் குதிரை, வெண்ணிலா கபடிகுழு, குரங்கு பொம்மை என 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். பைரி படத்தில்கூட கவித்ரனான நானும் பிரான்சிஸ் கிருபாவும் இணைந்து பாடல் எழுதியுள்ளோம். 

 எழுத்தாளர் கவின்மலர்

பிரான்சிஸ் கிருபாவை கவிஞர் பால் முகில் கடையில் பார்க்கலாம். பால்முகில் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இதனால் ஒரே பகுதி என்பதால் இருவரின் நட்பும் நீடித்துவருகிறது. பைரி படத்துக்காக எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா வைத்த கெட்டஅப்பே அவருக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது" என்றார். 

 பிரான்சிஸ் கிருபா குறித்து முகநூலில் பல தகவல்களை உடனுக்குடன் பதிவு செய்து கொண்டிருந்தார் எழுத்தாளர் கவின்மலர். அவரிடம் பேசினோம் ``எனக்கும் தோழர் பிரான்சிஸ் கிருபாவுக்கும் கடந்த 2006-ம் ஆண்டு முதல் நட்பு உள்ளது. காவல் நிலையத்தில் பிரான்சிஸ் கிருபா இருக்கும் தகவல் கிடைத்ததும் அங்குச் சென்றேன். அப்போது அவரைச் சந்தித்து பேசினேன். அவரின் அருகில் காவலர் ஒருவர் அமர்ந்திருந்தார். நான் அவரிடம் பேசியபோது இரண்டு பெண் காவலர்கள் அங்கு வந்துவிட்டனர். பிரான்சிஸ் கிருபாவிடம் சாப்பிட்டீர்களா என்று கேட்டேன். அதற்கு ஆமாம் என்று கூறினார். தொடர்ந்து இது என்ன காரணம் என்று கேட்டதற்கு சிரித்தார். அதன்பிறகு அவர், வெளியில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறினார். காவல் நிலையத்திலிருந்து அவர் வெளியில் வந்தபோது அவரிடம் எதுவும் நாங்கள் பேசவில்லை. வீட்டிலிருக்கும் அவரை இன்று மாலை சந்திக்கவுள்ளேன்" என்றார். 

இன்று காலை தூங்கி எழுந்த பிரான்சிஸ் கிருபாவைச் சந்திக்க அவரின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்களுடன் காலை, மதிய உணவு சாப்பிட்டார். அப்போது சகஜமாகவும் கவித்துவமாகவும் மகிழ்ச்சியாக அரட்டை அடித்துள்ளார் பிரான்சிஸ் கிருபா. அவரின் முகத்திலிருந்த காயங்களின் வீக்கமும் குறைந்துவிட்டதாக கவிஞர் கவித்ரன் தெரிவித்தார்.