நளினி விடுதலை! - கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? | could the court give an order to the governor

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (07/05/2019)

கடைசி தொடர்பு:15:55 (07/05/2019)

நளினி விடுதலை! - கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?

அமைச்சரவையின் முடிவை ஏற்பதில் கவர்னர் தாமதம் செய்யக்கூடாது. இப்படி அவர் தாமதம் செய்வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்துவருகின்றனர். 

பன்வாரிலால் புரோகித்

அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசே முடிவுசெய்துகொள்ளலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறியது. அதையடுத்து, ஏழு பேரையும் விடுதலை செய்வதென்று கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை முடிவுசெய்தது. அது தொடர்பான பரிந்துரை கவர்னர் பன்வாரிலால்  புரோஹித்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் முடிவெடுக்காமல் கவர்னர் காலம்கடத்தி வருகிறார்.

மாநில அரசின் பரிந்துரையைத் திருப்பி அனுப்பவோ, நிராகரிக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்றும், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையில் கவர்னர் கையெழுத்திடாமல் காலம்தாழ்த்துவது சட்ட ரீதியில் தவறானது என்றும்  சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்குமாறு கவர்னருக்கு உத்தரவிடக் கோரி நளினி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

நளினி

`கவர்னருக்கு உத்தரவிடும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இருக்கிறதா?' என்று நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் கேட்டோம்.
``கவர்னரே ஒரு முடிவெடுக்கிறார் என்றால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால், இது அமைச்சரவை எடுத்துள்ள முடிவு. அமைச்சரவையின் இந்த முடிவை ஏற்பதில் கவர்னர் தாமதம் செய்யக்கூடாது. இப்படி அவர் தாமதம் செய்வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. 

முன்விடுதலையைப் பொறுத்தவரை மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது. கவர்னரைப் பொறுத்தவரை, மாநில அரசின் பரிந்துரையை ஏற்று கையெழுத்திட வேண்டும், அவ்வளவுதான். இதில் சொந்தமாக அவர் வேறு எந்த முடிவையும் எடுக்க முடியாது. அதில் தாமதம் செய்யவும் கூடாது. `அரசியலமைப்புச்சட்டத்தின்படி செயல்படுவேன்’ என்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கவர்னர், இந்த விவகாரத்தில் தாமதம் செய்வது, அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க