`அன்பா, அமைதியா பேசக்கூடியவர்!' - எழுத்தாளர் கலை இலக்கியா மறைவால் தேனியில் சோகம் | Writer Kalai Ilakiya passed away

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (07/05/2019)

கடைசி தொடர்பு:18:20 (07/05/2019)

`அன்பா, அமைதியா பேசக்கூடியவர்!' - எழுத்தாளர் கலை இலக்கியா மறைவால் தேனியில் சோகம்

தமிழின் பெண் எழுத்தாளர்கள் வரிசையில் அறியப்படும் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் கலை இலக்கியா. தேனி மாவட்டம் ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கலை இலக்கியாவின் இயற்பெயர் ச.இந்திரா. சிறுவயதில் இருந்தே எழுத்தின் மீது கொண்ட தீராத காதலால், சிற்றிதழ்களில் வாயிலாக தன் எழுத்துலகை விரிவாக்கிக்கொண்டார்.

கலை இலக்கியா

கட்டுரையாளர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என பல்வேறு தளங்களில் இயங்கி தமிழ் எழுத்துலகில் தனக்கென நீங்கா இடம் பிடித்த கலை இலக்கியா, தமிழ்நாடு முற்போக்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இமைக்குள் நழுவியவள், என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன் என்கிற கவிதை தொகுப்பும், படிக்க பின்பற்ற காதலும் வீரமும் என்கிற கட்டுரைத்தொகுப்பும் கவனம் பெற்றது. தொடர் எழுத்துப்பணி, சமூகப்பணி என இயங்கிக்கொண்டிருந்த கலை இலக்கியா, புற்றுநோய் பாதிப்பு காரணமாக, மதுரையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு திடீரென மரணமடைந்தார்.

கலை இலக்கியா

அவரது உடல், சொந்த ஊரான தேனிக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கலை இலக்கியாவின் திடீர் மரணம், அவருடன் எழுத்துலகிலும், சமூக செயல்பாட்டு உலகிலும் இணைந்து பணியாற்றிய அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய தேனியைச் சேர்ந்த கலை இலக்கிய செயற்பாட்டாளர்கள், ``ரொம்பவும் அன்பாகவும், அமைதியாகவும் பேசக்கூடியவர். அனைவருக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். சமீபத்தில்கூட தேனியில் நடைபெற்ற சாதனைப் பெண்களுக்கு விருது கொடுக்கும் நிகழ்ச்சியில் அவருக்கு விருது கொடுக்கப்பட்டது. அவரின் இழப்பு எங்களை மிகவும் பாதித்துள்ளது” என்றனர் வருத்தத்தோடு. கலை இலக்கியாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.