`எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்!' - செந்தில் பாலாஜிக்கு எதிராகக் களமிறங்கிய 8 அமைச்சர்கள் | 8 ADMK ministers work against Senthil Balaji in Aravakurichi

வெளியிடப்பட்ட நேரம்: 16:44 (07/05/2019)

கடைசி தொடர்பு:17:06 (07/05/2019)

`எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்!' - செந்தில் பாலாஜிக்கு எதிராகக் களமிறங்கிய 8 அமைச்சர்கள்

செந்தில்பாலாஜி

தமிழகத்தில் நடைபெற உள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி மட்டும் பரபரப்பாகவே உள்ளது. இந்தத் தொகுதியில் ஆளுங்கட்சிக்கு சிக்கல் என உளவுத்துறை சிக்னல் காட்டியதால் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 8 அமைச்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 

39 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் தமிழகத்தில் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தீவிர வாக்குசேகரிப்பில் ஆளுங்கட்சியினரும் எதிர்கட்சியினரும் ஈடுபட்டுவருகின்றனர். சூலூர் தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்த சூழலில், அரவக்குறிச்சி தொகுதி ஆளுங்கட்சிக்குப் பாதகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

ஜெயலலிதா உயிரோடு இருந்த காலக்கட்டத்தில் போயஸ் கார்டனில் தனிப்பட்ட செல்வாக்குடன் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலா, டி.டி.வி.தினகரன் அணியில் இருந்தார் செந்தில் பாலாஜி. டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக செந்தில் பாலாஜி தி.மு.க-வில் இணைந்தார். அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே வேட்பாளராக கருதப்பட்டார். அதோடு தி.மு.க. ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவியும் அவருக்கு கிடைக்கும் என்று அவரின் ஆதரவாளர்கள் சொல்லிவருகின்றனர். 

செந்தில்பாலாஜி 

இந்த நிலையில், அ.தி.மு.க-வினருக்கும் தினகரனுக்கும் எதிரியான செந்தில்பாலாஜியை இந்தத் தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்று இரண்டு கட்சியினரும் தீவிரமாக வேலை பார்த்துவருகின்றனர். ஆனால், அவர்களின் தீவிர பிரசாரம் தொகுதியில் எடுபடவில்லை. தொகுதியைக் கைப்பற்றும் ரேஸில் செந்தில் பாலாஜி முன்னிலையில் இருக்கிறார். அதை உளவுத்துறையும் மோப்பம் பிடித்து ஆளுங்கட்சிக்குத் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் செந்தில் பாலாஜியை எப்படியாவது வீழ்த்த ஆளுங்கட்சி தரப்பில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. 

பள்ளப்பட்டியில் உள்ள முஸ்லிம் ஓட்டுகளை கவரும் வகையில் வக்ஃபு வாரியத் தலைவரும் எம்.பியுமான அன்வர்ராஜா, அமைச்சர் நிலோபர் கபில், கட்சியின் மூத்த நிர்வாகி தமிழ்மகன் உசேன் மற்றும் ஜெ.எம்.பஷீர் உட்பட முஸ்லிம் நிர்வாகிகள் களமிறக்கப்பட்டனர். அப்போது அமைச்சர் தங்கமணி, பள்ளப்பட்டியில் உள்ள முஸ்லிம் மக்களிடம் ஓட்டு கேட்டபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து அமைச்சர் மற்றும் முஸ்லிம் நிர்வாகிகள் திரும்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து, முஸ்லிம் ஓட்டுகளைப் பெற அ.தி.மு.க-வில் உள்ள முஸ்லிம் நிர்வாகிகள் மசூதிகளுக்குச் சென்றும் ஜமாத் தலைவர்களைச் சந்தித்தும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். 

செந்தில்பாலாஜி 

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், ``அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று செந்தில் பாலாஜிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கட்சித் தலைமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதிதான் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. செந்தில் பாலாஜிக்கு எதிராக 8 அமைச்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அதோடு தென்சென்னை நிர்வாகிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் அரவக்குறிச்சியில் மாறி, மாறி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்தவர்களுடன் கைகோத்த செந்தில்பாலாஜி, தற்போது தி.மு.க.வில் இணைந்துள்ளார். தி.மு.க-வில் இணைந்தவுடன் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டதால் உட்கட்சியில் கோஷ்டிப் பூசல் நிலவுகிறது. அதைப்பயன்படுத்தி செந்தில் பாலாஜியை எப்படியாவது தோற்கடிக்க திட்டமிட்டுள்ளோம். அதோடு எதிரிக்கு எதிரி நமக்கு நண்பர் என்ற ரீதியில் அ.ம.மு.க-வினரும் செந்தில் பாலாஜிக்கு எதிராக வேலை பார்த்துவருகின்றனர். அவர்களுக்கு மறைமுக உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று நம்புகிறோம். அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டோம்.

மேலும், கட்சித் தலைமை அரவக்குறிச்சி தொகுதியில் எந்தப் பூத்தில் தி.மு.க-வைவிட அ.தி.மு.க.வுக்கு குறைவான ஓட்டுகள் கிடைக்கிறதோ சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் மிகவும் கவனத்துடன் பொறுப்பாளர்கள் செயல்பட்டுவருகின்றனர். அதிக ஓட்டுகளை வாங்கி கொடுக்கும் பொறுப்பாளர்களை மற்ற தொகுதிகளைவிட சிறப்பாக கவனிக்கவும் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இதனால் அரவக்குறிச்சியில் இரட்டை இலை துளிர்க்கும்" என்றார் நம்பிக்கையுடன் 

செந்தில்பாலாஜி 

அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. ஆகிய இரண்டு தரப்பிலிருந்து வீசப்படும் அஸ்திரங்களை சமாளிக்க தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியும் சில யுக்திகளைக் கடைப்பிடித்துவருவதாக அவருக்கு வேண்டப்பட்டவர்கள் தெரிவித்தனர். அதாவது, செந்தில் பாலாஜிக்கு எதிராக செயல்படும் தி.மு.க-வினரின் பட்டியல் ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தபிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் உறுதியளித்ததோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதனால் மற்றவர்கள் செந்தில் பாலாஜியை வெற்றி பெற வைக்க வேலை பார்த்துவருகின்றனர்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணத்தால் நிறுத்தப்பட்டதைப் போல அரவக்குறிச்சி தொகுதியிலும் இரண்டாவது முறையாக அந்தத் தவறு நடக்காமலிருக்க கவனமாக தி.மு.க-வினர் செயல்பட்டுவருகின்றனர். ஆனால், தேர்தலில் தோல்வி உறுதி என கடைசி நேரத்தில் தெரியவந்தால் அரவக்குறிச்சி இடைத்தேர்தலையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நிறுத்தவும் காய் நகர்த்தப்பட்டுவருகிறதாம். இதனால் அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையமும் அ.தி.மு.க-வினரும் உன்னிப்பாக கவனித்துவருகின்றனர். தடைகளைத் தாண்டி அரவக்குறிச்சியில் உதயசூரியன் உதிக்குமா என்பது மக்களின் கையில் மட்டுமல்லாமல் காலமும் கைகூட வேண்டும். 

பள்ளப்பட்டி சேவல் சண்டையைப் போல தி.மு.க-வுக்கும் அ.தி.மு.கவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.