வாவ்.. இந்தக் காதணிக்கு கோடிகள் கொட்டிக் கொடுக்கலாம்! - நீலகிரி பழங்குடிப் பெண்களின் அழகியல் #MyVikatan | Nilgiri tribal women hearings is 100 percent natural 

வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (07/05/2019)

கடைசி தொடர்பு:12:19 (10/05/2019)

வாவ்.. இந்தக் காதணிக்கு கோடிகள் கொட்டிக் கொடுக்கலாம்! - நீலகிரி பழங்குடிப் பெண்களின் அழகியல் #MyVikatan

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், பணியர், காட்டு நாயக்கர் என ஆறுவகை பண்டைய பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இன்றளவும் தங்கள் உணவு, உடை, பழக்கவழக்கங்கள் போன்றவற்றை முடிந்தவரைப் பின்பற்றி வருகின்றனர்.

 மஞ்சாடிக்குறு

கூடலூர் பந்தலூர் பகுதிகளில் வாழும் பணியர் மக்கள்,­­­ வனம் சார்ந்தே வாழ்ந்துவருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் ஆப்பிரிக்க பழங்குடிகளைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் இவர்கள் ஆப்பிரிக்க பழங்குடிகள் எனக் கூறப்பட்டாலும் இன்றளவும் நிரூபிக்கப்படவில்லை. அவர்களின் சால் எனப்படும் வீடுகளும் செம்மண்ணில் சுவர் எழுப்பி மூங்கிலால் கூரை அமைக்கின்றனர்.

 மஞ்சாடிக்குறு

பணியர்களின் அணிகலன்கள் இன்னும் ஆச்சர்யமானவை. அதிலும் குறிப்பாக, பணியர் பெண்கள் பயன்படுத்தும் காதணிகள் முற்றிலும் காட்டில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அழகிய கம்மல் தயாரிக்கின்றனர். மஞ்சாடிக்குறு எனும் கொடியில் வளரும் காய்களைப் பறித்துவந்து பதப்படுத்தி ஒரு வகை ஓலைகளில் தேன் கூட்டில் கிடைக்கும் மெழுகினை எடுத்து இந்தக் காய்களை ஓலைகளில் நேர்த்தியாக ஒட்டுகின்றனர். சற்று பெரிய வட்ட வடிவில் மிக அழகாக இந்த மஞ்சாடிக்குறு காதணிகளைச் செய்து அணிகின்றனர். பணியர் பெண்கள் மிகவும் விசேஷமான ஒன்றாக இந்தக் காதணியைக் கருதுகின்றனர். இந்தக் காதணிகளை திருவிழா நாள்களில் பயன்படுத்துகின்றனர். பாரம்பர்ய காதணியை தங்களின் சொத்தாகவே கருதி பணியர் பெண்கள் பயன்படுத்திவருகின்றனர்.