`திடீரென கொண்டுவரப்பட்ட 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள்!' - தேனியில் பரபரப்பு | Opposition parties staged protest in theni

வெளியிடப்பட்ட நேரம்: 21:21 (07/05/2019)

கடைசி தொடர்பு:22:02 (07/05/2019)

`திடீரென கொண்டுவரப்பட்ட 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள்!' - தேனியில் பரபரப்பு

தேனி மாவட்டம் தாலுகா அலுவலகத்துக்குப் புதிதாக 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டதை அறிந்த எதிர்க்கட்சியினர். தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சியினர் போராட்டம்

தேனி மக்களவைத் தொகுதியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், அ.ம.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் போட்டியிட்டனர். ரவீந்திரநாத்குமார் தரப்பில் அதிகம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இருந்தபோதும் எந்தவித பிரச்னையும் இன்றி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு குளறுபடிகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சிகள் சந்தேகமடைந்துள்ள சூழலில், திடீரென 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

எதிர்க்கட்சியினர் போராட்டம்

இதையறிந்த காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்தப் புதிய இயந்திரங்களை வைத்து வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடி செய்ய ஆளும் தரப்பு திட்டமிடுகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இதற்கு விளக்கம் அளித்த அதிகாரிகள், சில இடங்களில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டால், அதற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை. அதற்காகவே இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன என்கின்றனர். இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி நிர்வாகிகள், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடினர். சம்பவம் அறிந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, எதிர்க்கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தாசில்தார் கமலராஜன்,``கோயம்புத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்டது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படியே கொண்டுவரப்பட்டிருக்கிறது'' என்றார். ஆனால், அவரது விளக்கத்தை எதிர்க்கட்சியினர் ஏற்றுக்கொள்ளாமல் வாக்குப்பதிவு இயந்திரங்களை திறந்துகாட்ட வேண்டும் என்று கூறி முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு எஸ்.பி பாஸ்கரனும் வந்து பாதுகாப்புப் பணிகளைப் பார்வையிட்டு வருகிறார்.