`சூறைக்காற்றுடன் மழை; திடீரென கேட்ட வெடிச் சத்தம்!' - திருவள்ளூர் மின்சார ரயில் பயணிகள் அதிர்ச்சி | train service interrupts in tiruvallur over heavy rain

வெளியிடப்பட்ட நேரம்: 21:54 (07/05/2019)

கடைசி தொடர்பு:22:07 (07/05/2019)

`சூறைக்காற்றுடன் மழை; திடீரென கேட்ட வெடிச் சத்தம்!' - திருவள்ளூர் மின்சார ரயில் பயணிகள் அதிர்ச்சி

பாதியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்

மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்து கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. கடந்த நான்கு நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஏறக்குறைய 101 டிகிரி வெப்பம் காணப்பட்டது. மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்த்தனர். மேலும், கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடியின் நீர் மட்டமும் குறைந்துவிட்டது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீரின் அளவும் குறைந்துவிட்டதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று திருவள்ளூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான திருவூர், செவ்வாப்பேட்டை, அரண்வாயல், வேப்பம்பட்டு, புட்லூர், திருவள்ளூர் புல்லரம்பாக்கம்  ஆகிய பகுதிகளில் மதியம் சுமார் மூன்று முப்பது மணி அளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையில் அரண்வாயல் மற்றும் முருக்கஞ்சேரி பகுதிகளில் சாலையோரம் இருந்த 17 மின்சாரக் கம்பங்கள் உடைந்து சாலையில் விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்ததால், 5 கிலோமீட்டருக்கு மேலாக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் 45  நிமிடங்கள் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின்சார ரயில்

அதேபோல சென்னையில் இருந்து மதியம் 2.40 மணிக்கு திருவள்ளூர் புறப்பட்டு வந்த மின்சார ரயில் செவ்வாப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது ரயில் நிலையத்திலிருந்த மரம் உடைந்து உயர் அழுத்த மின்சார கம்பி மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தடைப்பட்டு ரயில் செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. மின்சார கம்பி மீது மரம் விழுந்தால் பயங்கரமான வெடிச் சத்தம் கேட்டது. இதனால் ரயிலில் இருந்தப் பயணிகள் அலறியடித்து ஓடினார்கள். அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர் ரயில் போக்குவரத்து சரி செய்யப்பட்டு திருவள்ளூர் புறப்பட்டுச் சென்றது. அரண்வாயல் பகுதிகளில் சாலையில் மின்சாரக் கம்பிகள், மின்கம்பங்கள் விழுந்து கிடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பழுதை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள்

சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரபாகர், ``நான் திருவள்ளூர் ரயிலில் போய்க்கொண்டு இருந்தேன். நான்கு மணி இருக்கும். அப்போது வண்டி செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றது. அந்தநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்துகொண்டிருந்தது. அந்தநேரத்தில் ரயில் நிலையத்தில் இருந்த புங்க மரக்கிளை உடைந்து ரயில் மீது விழுந்தது. அப்போது ரயிலில் டமாரென வெடிச் சத்தம் கேட்டது. அப்போது ரயிலில் இருந்தவர்கள் பதறி அடித்து எகிறிக் குதித்து ஓடினார்கள். பொதுமக்களின் சத்தம் கேட்டதும் ரயில் நிறுத்தப்பட்டது. நீண்டநேரமாக ரயில் புறப்படவில்லை. பின்னர் மின்சார கோளாறு ஏற்பட்டது என்று சொன்னார்கள்'' என்று பதற்றத்துடன் விவரித்தார்.