`தூத்துக்குடி தொகுதியை கனிமொழி தேர்வுசெய்ய நான்தான் காரணம்!' - துரைமுருகன் | Kanimozhi choosed Thoothukudi constituency because of me, says Durai murugan

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (07/05/2019)

கடைசி தொடர்பு:07:58 (08/05/2019)

`தூத்துக்குடி தொகுதியை கனிமொழி தேர்வுசெய்ய நான்தான் காரணம்!' - துரைமுருகன்

``கனிமொழி அரசியலுக்கு வருவதற்கு மட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இந்த தூத்துக்குடி தொகுதியைத் தேர்வு செய்வதற்கும் நான்தான் காரணமாக இருந்தவன்'' என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து, சிலுவைப்பட்டி பகுதியில்  தெற்கு மாவட்டச் செயலாளரும் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தி.மு.க பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.  முதலில் பேசிய கனிமொழி, ``நான் அரசியலுக்கு வரக் காரணமாக இருந்தவர் துரைமுருகன்தான். துரைமுருகன் அவர்கள் மூலமாக என்னை அரசியலுக்கு அழைத்தவர் தலைவர் கருணாநிதி. 

துரைமுருகன்

ஸ்டாலின் முதல்வர் கனவு காண்கிறார் என்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும். ஆனால், அவர்கள் இருவரும் ஒரு நாள் தமிழகத்தின் முதல்வராவோம் என கனவாவது கண்டிருப்பார்களா? ஜெயலலிதா காலைப் பார்த்து வணங்கும் தகுதி மட்டும்தான் அவர்களுக்கு உண்டு. அ.தி.மு.க ஆட்சியில் பெண்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றவாளிகளான தனது கட்சியினரைப் பாதுகாப்பதில்தான் எடப்பாடி அரசு முனைப்பு காட்டுகிறது. புகார் கொடுக்கச் சென்ற பெண்களை அரசே மிரட்டுகிறது. அம்மாவின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது எனச் சொல்கிறார்கள். ஆனால். அந்த அம்மாவின் இறப்பிலேயே மர்மம் உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அந்த மர்மம்குறித்து விசாரணை செய்யப்படும்” என்றார்.

துரைமுருகன்

அடுத்ததாகப் பேசிய துரைமுருகன், ``கனிமொழி பிறந்த  7-வது நாளில் என் இரு கைகளிலும் தூக்கியவன் நான். எனக்கு ஏதாவது மன உளைச்சல் என்றால், நான் அவரிடம் பேசுவேன். அதேபோல, அவருக்கு ஏதாவது மன உளைச்சல் என்றால் என்னிடம் பேசுவார். அவருக்குத் தந்தை, சகோதரன் என எல்லா வகையிலும் நானாக இருக்கிறேன். கனிமொழி அரசியலுக்கு வருவதற்கு மட்டும் நான் காரணமல்ல; இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் கனிமொழி, முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து என்னிடம் பேசியபோது, அந்த விருப்பத்தை வரவேற்றேன்.

கனிமொழி

அவர் போட்டியிடுவதற்கு சென்னையில் சில தொகுதிகள், கன்னியாகுமரி தொகுதி சாதகமாக இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், தூத்துக்குடி தொகுதிதான் அவருக்கு எல்லா வகையிலும் சாதகமாகவும், உதவியாகவும் இருக்கும் என இந்தத் தொகுதியை தேர்வுசெய்ய நான்தான் காரணமாக இருந்தேன்” என்றவர்,

 ``சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் இந்த ஓட்டப்பிடாரம் தொகுதியில் சைக்கிள்களில், தள்ளுவண்டிகளில் குடம் போட்டு தண்ணீர் பிடித்துச்செல்லும் பெண்களைப் பார்க்கிறேன். இதைவிடக் கொடுமை வேறெங்கு உண்டு. காவிரியில் இருந்து நான் காட்பாடிக்கு தண்ணீர் கொண்டுவந்திருக்கிறேன். பக்கத்து மாவட்டமான நெல்லையில் இருந்து தாமிரபரணி தண்ணீரைக் கொண்டுவர இந்த அரசால் முடியவில்லையா? இந்த மக்களை இப்படி ஒரு சூழலுக்குத் தள்ளிவிட்டு எந்த தைரியத்தில் ஓட்டு கேட்க வருகிறார்கள்?  இந்தத் தேர்தல்கள் முடிந்ததும், இந்த ஆட்சியும் முடிவுக்கு வரும்” என்றார்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க