`அந்த 11 பேர்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ - சபாநாயகருக்கு முத்தரசன் கேள்வி | the speaker why did not take action against 11 mla's? asks mutharasan

வெளியிடப்பட்ட நேரம்: 07:33 (08/05/2019)

கடைசி தொடர்பு:07:33 (08/05/2019)

`அந்த 11 பேர்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ - சபாநாயகருக்கு முத்தரசன் கேள்வி

”ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக 3 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிப்பதற்காக நோட்டீஸ் அனுப்பிய சபாநாயகர், சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரிய தீர்மானத்தில் ஆளும்கட்சிக்கு எதிராக வாக்களித்த 11 பேர்மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

முத்தரசன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தல் முடிவு தங்களுக்குப் பாதகமாக இருக்கும் என்பதால்தான், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக 3 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிப்பதற்கான நடவடிக்கையை சபாநாயகர் மூலமாக, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் பழனிச்சாமி. சபாநாயகர் நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். ஆனால், இவர் நடுநிலையாக நடந்துகொள்ளவில்லை என்கிறபோது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என தி.மு.க கூறியுள்ளது சரியானதுதான்.

ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள், ஆளும் கட்சிக்கு எதிராகச் செயல்படுவதுடன் மற்றொரு அணிக்கு ஆதரவாகவும் இருக்கின்றனர். தேர்ந்தெடுத்த கட்சிக்குத் துரோகம் செய்வதால், இந்நடவடிக்கையை எடுக்கிறோம் எனக் கூறுகிறது ஆளும்கட்சி தரப்பு. இதில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்கள், 11 பேர் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர்.  அந்த 11 பேரில் ஒருவர் துணை முதல்வராகவும்,  ஒருவர் அமைச்சராகவும் இருக்கின்றனர். ஏன் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை?

தனபால்

இந்தத் தேர்தல் தீர்ப்பு என்பது பா.ஜ.க, அ.தி.மு.க-வுக்கு எதிராகவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு சாதகமாகவும் அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடுமில்லை. ஆட்சி மாற்றம் என்பது தவிர்க்க முடியாது. வரும் மே மாதம் 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, பா.ஜ.க-வோடு சேர்ந்த காரணத்தால்தான் இந்தத் தோல்வியை நாங்கள் ஏற்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர்களோடு நாங்கள் சேரவில்லை என்றால், நாங்கள் வெற்றிபெற்றிருக்கிறோம் என்று அ.தி.மு.க-வும், அதே போல பா.ஜ.க-வினரும் அ.தி.மு.க-வுடன் சேர்ந்ததால்தான் நாங்கள் தோற்றுப்போனோம். இல்லையென்றால், நாங்கள் வெற்றிபெறுவோம் என்று அவர்களும் மாறி மாறி அறிக்கை விடுவார்கள்.

தி.மு.க-வுக்கும் தினகரனுக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. தங்களை தற்காத்துக் கொள்வதற்காக தி.மு.க-வும், தினகரனும் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள் என ஒரு பொய்யான தகவல் கூறிவருகிறார்கள் அ.தி.மு.க அமைச்சர்கள்.  எடப்பாடி பழனிசாமி, தினகரன், சசிகலா ஆகியோருக்கு இடையேதான் ரகசிய கூட்டு உள்ளதாகத் தகவல் உள்ளது. அதன் காரணமாகத்தான் ஓ.பி.எஸ்ஸுக்கு எந்தவித அதிகாரமும் செல்வாக்கும் இல்லாமல் மடக்கிவைத்துள்ளாக சொல்லப்படுகிறது.

தங்களது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஜனநாயகத்திற்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்வார், அதற்கு மோடி அரசு துணை நிற்கும். இதனைத் தாண்டியும் ஜனநாயகம் காப்பாற்றப்படும். தேர்தலுக்குப் பின் மோடி ஆட்சி இருக்காது. நல்ல மாற்று ஆட்சி இருக்கும். அது எவ்வாறு அமையும் என்பது தேர்தல் முடிவுக்குப் பின் தெரியும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க