`ஜூலை மாதத்திற்குள் 28 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படும்!’ - அமைச்சர் செங்கோட்டையன் | In July, 28 lakh laptops will be provided to students says Minister Sengottaiyan

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (08/05/2019)

கடைசி தொடர்பு:08:00 (08/05/2019)

`ஜூலை மாதத்திற்குள் 28 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படும்!’ - அமைச்சர் செங்கோட்டையன்

”நடப்பாண்டில், 28 லட்சம் லேப்டாப்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. வரும் ஜூலை மாதத்திற்குள் அவை வழங்கப்படும்”  என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

செங்கோட்டையன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வந்தார். கோயிலில் சுவாமி தரிசனம்செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. வரும் கல்வியாண்டில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் வரும் ஜனவரி 1-ம் தேதி துவங்கப்படும். அதேபோல,      7 ஆயிரம் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும்.

9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பறைகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, இணையதள வசதியும் ஏற்படுத்தப்படும்.  மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அனைத்துப் பள்ளிகளிலும் நூலகம் தொடங்கப்படும். அரசு சார்பில் இ-லைப்ரரி கொண்டுவரப்பட்டு கம்ப்யூட்டர் மூலம் பதிவுசெய்தவற்றைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு 15 லட்சத்து 40 ஆயிரம் லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன.

லேப்டாப்

அதேபோல் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஸ்மார்ட் லேப்டாப் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதுவரை 37 ஆயிரம் லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 28 லட்சம் லேப்டாப்கள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதுவும் ஜூலை மாதத்திற்குள்ளாகவே வழங்கப்படும். மாணவர்களின் நலனுக்காக, கல்விக்காக தனி சேனல் தொடங்க உள்ளோம். போகோ மூலம் பள்ளியை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான முதற்கட்டப் பணிகள்  தொடங்கியுள்ளன. 

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, ஒன்றிலிருந்து 8-ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் சீருடை வழங்கப்பட உள்ளது. மூன்று கட்டமாக, பள்ளியின் பாடத்திட்டம் புதிதாக மாற்றப்பட உள்ளது. இந்த ஆண்டு, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வரை புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது.  பொதுவாக, புதிய பாடத்திட்டத்தை மாற்ற 2 ஆண்டுகள் ஆகும். ஆனால் 2 ஆண்டுகளில் நடக்கக்கூடிய பணியை ஏறத்தாழ 14 மாதங்களில் மாற்றி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க