``நீங்கள் துரோகத்துக்கு துணை போகக் கூடாது!” - சூலூரில் டி.டி.வி.தினகரன் பிரசாரம் | TTV Dinakaran campaign for by-election

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (08/05/2019)

கடைசி தொடர்பு:08:40 (08/05/2019)

``நீங்கள் துரோகத்துக்கு துணை போகக் கூடாது!” - சூலூரில் டி.டி.வி.தினகரன் பிரசாரம்

சூலூர் இடைத் தேர்தல் அ.ம.மு.க வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து  டி.டி.வி தினகரன் பிரசாரம்

"நாம் எப்போதும் வடக்கில் இருந்து வருவபர்களுக்குத் தலைவணங்கியதே கிடையாது. அவர்களுக்கு எப்போதும் நாம் பயப்பட மாட்டோம்; அதிகாரத்திற்கு அஞ்ச மாட்டோம். 24-ம் தேதி இந்த ஆட்சி இருக்காது" என்று சூலூர் பிரசாரத்தில் டி.டி.வி. தினகரன் பேசியுள்ளார்.

சூலூர் தொகுதி  அ.ம.மு.க வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து டி.டி.வி. தினகரன்,  இருகூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், "கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள், எப்போதும் துரோகக் கூட்டத்திற்கு துணை நிற்க மாட்டார்கள்  என்பது எனக்குத் தெரியும். அம்மா மறைவிற்குப் பிறகு பன்னீர்செல்வம் முதலமைச்சராகத் தொடரட்டும் என நினைத்து முதலமைச்சராக்கினோம். 

சூலூர் இடைத் தேர்தல் அ.ம.மு.க வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து  டி.டி.வி தினகரன் பிரசாரம்

ஆனால், அவர் பி.ஜே.பி-யின் ஏஜென்டாக செயல்பட்டார்.  அதன்பிறகுதான், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக இருக்கட்டும் என்று பழனிசாமியை முதல்வராக்கினோம். அப்போது சசிகலா நினைத்திருந்தால், என்னை முதல்வராகத் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், பதவிக்காக நாங்கள் ஆசைபடுபவர்கள் இல்லை.  பா.ஜ.க-வின் ஏஜென்டாக இருந்ததால், ஓ.பி.எஸ். ஐ நீக்கினோம். அதன்பிறகுதான், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்கினோம்.

எடப்பாடி பழனிசாமி நான்கு கால் பிராணிபோல எப்படி தவிழ்ந்துவந்து பொதுச்செயலாளர் சசிகலா காலில் விழுந்தார் என்று உங்களுக்குத் தெரியும். பதவியில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என அவர்கள் செய்தது ராஜ தந்திரமா? அதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அரசியலில் அடுத்தடுத்த பதவிகளை அடைய வேண்டும், முதல்வராக வேண்டும் என்று ஆசை இருக்கலாம். அதில் தவறு கிடையாது. ஆனால், பதவி வெறி இருக்கக் கூடாது.  பழனிசாமியின் பதவி வெறி காரணமாகத்தான் இப்போது  இடைத்தேர்தல் வந்தது. சூலூரில் இடைத்தேர்தல் நடக்கிறதென்றால், அது நியாயம். இந்தத் தொகுதி எம்.எல்.ஏ இறந்துவிட்டார். ஆனால், மற்ற தொகுதிகளில்  ஏன் இடைத்தேர்தல்?

சூலூர் இடைத் தேர்தல் அ.ம.மு.க வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து  டி.டி.வி தினகரன் பிரசாரம்

இதற்கு முன்னால் இருந்த முதல்வர்களெல்லாம் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி, இருக்கும் எம்.எல்.ஏ-க்களையும் நீக்குகிறார். எதையாவது செய்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் நோக்கம். தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவுக்கே துரோகம் செய்துள்ளாரே... இவரா நாட்டிற்கு நல்லது செய்யப்போகிறார்? துரோகத்திற்கு துணை போகமாட்டோம் என நிரூபிக்க சூலூர் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

மறைந்த ஜெயலலிதா பி.ஜே.பி-யுடன் கூட்டணி இல்லை என்று முடிவெடுத்து, 'குஜராத் மோடியா இல்லை தமிழகத்தின் இந்த லேடியா?', என்று உங்களிடம் கேட்டார், நீங்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தீர்கள். அம்மா யாருடன் இனிமேல் கூட்டணி கிடையாது என்றாரோ அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்துள்ளார்கள். லேடியா... மோடியா?என கேட்டதால்தான்,  அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது  அம்மாவை பார்ப்பதற்கு மோடி வரவில்லை. இப்போது அவர்களுக்கு  வெற்றிவாய்ப்பு இல்லை என்று தெரிந்துவிட்டது. அதனால்தான், நம் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை நீக்க நடவடிக்கை நோட்டீஸ் கொடுக்கிறார்கள். அவர் இப்போது எங்கே சென்றாலும் நோட்டீஸ் பழனிசாமி என்றுதான் சொல்கிறார்கள். 

சட்டமன்ற உறுப்பினர்களைக் குறைத்து, சட்டத்தில் உள்ள  பொந்துகளின்மூலம் முதல்வர் பதவியை காப்பாற்றிக்கொள்ள எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். அது ஏற்புடையதல்ல. நாம் எப்போதும் வடக்கில் இருந்து வருபவர்களுக்குத் தலைவணங்கியதே கிடையாது. அவர்களுக்கு எப்போதும் நாம் பயப்பட மாட்டோம்; அதிகாரத்திற்கு அஞ்ச மாட்டோம். 24-ம் தேதி இந்த ஆட்சி இருக்காது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க