குழந்தையை தத்துக் கொடுப்பதாக ரூ. 5 லட்சம் மோசடி! - ஈரோட்டில் அதிர்ச்சி | 5 lakhs cheat in the name of child, complaint registered

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (08/05/2019)

கடைசி தொடர்பு:09:30 (08/05/2019)

குழந்தையை தத்துக் கொடுப்பதாக ரூ. 5 லட்சம் மோசடி! - ஈரோட்டில் அதிர்ச்சி

ராசிபுரம் குழந்தைக் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், குழந்தையைத் தத்தெடுத்துக் கொடுப்பதாகக் கூறி, பல லட்சங்களைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டார்கள் என ஈரோட்டில் ஒரு பகீர் புகார் கிளம்பியிருக்கிறது.

குழந்தை

ஈரோடு மாவட்டம், வேப்பகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது உறவினர்களான மதுரையைச் சேர்ந்த தியாகராஜன் - மகேஸ்வரி  தம்பதியர், நீண்ட காலமாக குழந்தைப்பேறு இல்லாமல் தவித்துவந்திருக்கின்றனர்.  அதனால், தனக்குத் தெரிந்தவர்களிடம் குழந்தையைத் தத்தெடுப்பது பற்றி விசாரித்து வந்த சுந்தருக்கு, ஈரோடு எல்லப்பாளையத்தைச் சேர்ந்த கணேஷ் - ரேவதி தம்பதியர் மற்றும் வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த இடைத்தரகரான பாலகிருஷ்ணன் ஆகியோர் அறிமுகமாகியிருக்கின்றனர்.

 இவர்கள் மூவரும் சேர்ந்து, சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த ராணி என்பவரது ஒரு மாத பெண் குழந்தையை  மே   2018-ல் சுந்தரிடம் ரூ.4,50,000 -க்கு கொடுத்திருக்கின்றனர். சுந்தர், அந்தக் குழந்தையை தன்னுடைய உறவினர்களான மதுரைத் தம்பதியினரிடம் கொடுத்திருக்கிறார். ஒரு மாதத்திலேயே, குழந்தையைக் கேட்டு குழந்தையின் தாயார் அடம்பிடிப்பதாகவும் குழந்தையைக் காட்டிவிட்டு திரும்பக் கொண்டுவந்துவிடுகிறோம் என்றும் சொல்லி, குழந்தையை திரும்ப வாங்கியிருக்கின்றனர். பின்னர் ஒருசில சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மதுரை தம்பதியினரிடம் கறந்து, அதன்பிறகு குழந்தையைத் திரும்பக் கொடுத்திருக்கின்றனர்.

அதேபோல, மறுபடியும் 2018 அக்டோபர் மாதம் குழந்தையைக் கேட்டு அவரது தாயார் அடம்பிடிப்பதாகக் கூறி, புரோக்கர்களான கணேஷ், ரேவதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் குழந்தையை வாங்கியிருக்கின்றனர். அதன்பிறகு, குழந்தையைப் பணம் கொடுத்து வாங்கிய மதுரைத் தம்பதியினரிடம் ஒப்படைக்காமல் ஏதேதோ காரணங்களைச் சொல்லி ஒப்பேற்றியிருக்கின்றனர். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த மதுரை தம்பதியினர், ‘குழந்தையைக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, குழந்தைக்காக நாங்கள் கொடுத்த பணத்தையாவது திரும்பத் தாருங்கள்’ எனக் கேட்டிருக்கின்றனர். அதற்கு புரோக்கர்கள் மூவரும், ‘எங்களுக்கு அதிகாரிகள் மற்றும் அரசியல் தரப்பில் பெரிய தொடர்பு இருக்கிறது. பணத்தைக் கொடுக்க முடியாது. உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்’ என மிரட்டியிருக்கின்றனர்.

இதில், மதுரைத் தம்பதி உடைந்துபோயிருக்கின்றனர். இதையடுத்து, அவர்களது உறவினரான ஈரோட்டைச் சேர்ந்த சுந்தர், ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் ‘குழந்தையைத் தத்துக் கொடுப்பதாகக் கூறி, ரூ.4,50,000 பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டனர்’ எனப் புகார் கொடுத்திருக்கிறார்.

புகார் அளித்த சுந்தர்

இதுகுறித்து புகாரளித்த சுந்தர் கூறுகையில், “குழந்தையின் பெற்றோர் சம்மதத்தோடும், குழந்தையைத் தத்தெடுப்பதற்கான உரிய ஆவணங்களையும் வழங்குவதாகக் கூறித்தான் எங்களிடம் பணம் பெற்று குழந்தையைக் கொடுத்தார்கள். அதன்பிறகு, பலமுறை குழந்தையைத் தத்தெடுத்ததற்கான ஆவணங்களைக் கேட்டபோது, ஏதேதோ காரணங்களைக் கூறி காலதாமதம் செய்தனர். இதற்கிடையே, குழந்தையை அவரது தாயார் பார்க்க வேண்டுமென கேட்பதாகக் கூறி வாங்கிச்சென்று, இப்போது கொடுக்க மறுக்கின்றனர். இதனால், மதுரையைச் சேர்ந்த என்னுடைய உறவினரான தியாகராஜன் - மகேஸ்வரி தம்பதியினர் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றனர். குழந்தையைத் தத்தெடுத்துக் கொடுப்பதாகக் கூறி எங்களிடம் 5 லட்சத்தைப் பெற்று மோசடி செய்த கணேஷ், ரேவதி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 குழந்தையைத் தத்தெடுத்துக் கொடுப்பதாகக் கூறி ஈரோட்டில் அரங்கேறியுள்ள மோசடிச் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.