`பணம் கொடுப்பதில் உடன்பாடில்லை!'- சுயேச்சைக்கு பிரசாரம் செய்த சூலூர் ம.தி.மு.க பிரமுகர் நீக்கம் | MDMK Person works for Independent candidate in Sulur by election

வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (08/05/2019)

கடைசி தொடர்பு:11:42 (08/05/2019)

`பணம் கொடுப்பதில் உடன்பாடில்லை!'- சுயேச்சைக்கு பிரசாரம் செய்த சூலூர் ம.தி.மு.க பிரமுகர் நீக்கம்

சூலூர் இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளருக்காகப் பிரசாரம் செய்துவரும் ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர், அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சூலூர்

சூலூர் இடைத்தேர்தல், வருகின்ற 19-ம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க சார்பில் பொங்கலூர் பழனிச்சாமி, அ.தி.மு.க-வில் கந்தசாமி, அ.ம.மு.க-வில் சுகுமார், நாம் தமிழர் கட்சியில் விஜயராகவன், மக்கள் நீதி மய்யம் கட்சியில் மயில்சாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களோடு, சமூக ஆர்வலர் பிரபாகரன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மறைந்த எம்.எல்.ஏ கனகராஜின் தம்பி கந்தசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால், செ.ம.வேலுசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல, பொங்கலூர் பழனிச்சாமி வேட்பாளராக அறிவித்ததில் தி.மு.க உடன்பிறப்புகளும் சற்று வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில்,  ம.தி.மு.க-வின் சூலூர் வடக்கு ஒன்றியச் செயலாளராக இருக்கும் ஆனந்தகுமார், பொங்கலூர் பழனிச்சாமிக்கு வேலைசெய்ய விருப்பம் இல்லாததால், சுயேச்சையாக நிற்கும் பிரபாகரனுக்கு ஆதரவாக வேலைபார்த்துவருகிறார். இதையடுத்து, இந்த விஷயத்தை தி.மு.க-வினர் வைகோ-வின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, ஆனந்தகுமாரை கட்சியைவிட்டு நீக்க வைத்துவிட்டனர்.

வைகோவுடன் ஆனந்தகுமார்

இதுகுறித்து ஆனந்தகுமாரிடம் பேசினோம். “நான் ம.தி.மு.க-வில் 25 ஆண்டுகளாக இருந்துவருகிறேன்.  தலைவரிடம் எதையெல்லாம் பார்த்து ஈர்க்கப்பட்டு வந்தோமோ அவையெல்லாம் இப்போது இல்லை. ஆனாலும், நான் நாடாளுமன்றத் தேர்தல் வரை கட்சிக்காகப் பணியாற்றிவந்தேன். தேர்தல் என்பது ஜனநாயகம். அதைப் பணநாயகமாக அணுகுவதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. தற்போது, தி.மு.க-வில் பணத்தைப் பிரதானமாக வைத்து இயங்கிவருகின்றனர். எனக்கு அதில் உடன்பாடில்லை.

மேலும், தேர்தல் பணிக்காக வெளியூர் ஆள்களை நியமித்திருக்கிறார்கள். அவர்களின் அணுகுமுறையும் சரியில்லை. தொகுதியைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. இது எங்கள் சொந்தத் தொகுதி. இந்தத் தொகுதியின் பிரச்னை பற்றி அவர்களைவிட எங்களுக்குத்தான் நன்கு தெரியும். பணத்துக்கு வேலை பார்ப்பதைவிட, எங்களது பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பவர்களை ஆதரிப்பது சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அவிநாசி அத்திக்கடவு திட்டம் தொடங்கி, எங்கள் தொகுதியின் பல்வேறு பிரச்னைகளுக்கு பிரபாகரன் போராட்டம் நடத்தி சிறை சென்றிருக்கிறார்.

பிரபாகரனுக்காக பிரசாரம் செய்யும் ஆனந்தகுமார்

இதனால், தலைமையிடம் சொல்லிவிட்டு பிரபாகரனுக்காகப் பிரசாரத்தில் ஈடுபட்டேன். ம.தி.மு.க-வில் சூழ்நிலை மாறிவிட்டது. எதையும் புரிந்துகொள்ளும் நிலையில் தலைவரும் இல்லை. எனது கருத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக, கட்சியில் இருந்து நீக்கியதாகக் கூறியிருக்கிறார்கள். அது, எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இவ்வளவு பெரிய பண முதலைகள் மோதும் இடத்தில், சாமான்யர்களின் குரலாக ஒலிக்கவும், பண விநியோகத்தை ஆதரிக்கக் கூடாது என்பதற்காகத்தான் பிரபாகரனுக்காக வேலைபார்க்கிறேன்” என்று முடித்தார்.