நடுரோட்டில் எரிந்த 108 ஆம்புலன்ஸ்! - நூலிழையில் உயிர் தப்பிய நோயாளி | fire accident of 108 ambulance in karur pallapatti!

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (08/05/2019)

கடைசி தொடர்பு:13:00 (08/05/2019)

நடுரோட்டில் எரிந்த 108 ஆம்புலன்ஸ்! - நூலிழையில் உயிர் தப்பிய நோயாளி

 பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்

நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற 108 ஆம்புலன்ஸ் ஒன்று, நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிய, அதில் பயணித்த நோயாளி, உதவியாளர், டிரைவர் உள்ளிட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினர்.

கரூர் மாவட்டம், பள்ளபட்டி அரசு மருத்துவமனையிலிருந்து குமரேசன் (வயது 50) என்பவரை கரூர் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லும் வழியில், குமரன் கவுண்டன்வலசு  எனும் இடத்தில் TN 20 G 1176 என்ற எண் கொண்ட 108 அவசர ஊர்தியில் பேட்டரி பழுதாகி நடுவழியில் நின்றது. அவசர ஊர்தி ஓட்டுநர் வாகனத்திலிருந்து இறங்கிப் பழுது பார்க்கும் முன்னரே, திடீரென ஆம்புலன்ஸின் முன்பகுதியில் தீப்பிடித்துக்கொண்டது. இதனால், பதறிய ஓட்டுநர் ராஜேந்திரன்,  லாகவமாகச் செயல்பட்டு, நோயாளியைக் கீழே இறக்கிவிட்டார். பின்னர், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். அதற்குள், முன்பகுதியில் மளமளவென தீபற்றிக்கொண்டதால், அருகில் நின்ற பொதுமக்கள் அலறினார்கள். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாகத் தீயை அணைத்தனர். இருப்பினும், அதற்குள் ஆம்புலன்ஸின் ஒரு பகுதி எரிந்துவிட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக அவசர ஊர்தி ஓட்டுநர் மற்றும் உதவியாளர், அதில் பயணித்த நோயாளி ஆகிய மூவரும் உயிர் தப்பினர்.

பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்.

இதுபற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், "பத்துக்கும் மேற்பட்ட 108 அவசர ஊர்தி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், இப்படி இங்கே அவசர ஊர்தி தீ விபத்துக்குள்ளானது. பாவம் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள். இதுபோல் பராமரிப்பு இல்லாத ஆம்புலன்ஸ் வண்டிகளைத்தான் உயிரைப் பணயம் வைத்து ஓட்டிச்சென்று, நோயாளிகளைக் காப்பாற்றிவருகின்றனர். நோயாளிகளின் உயிரோடு விளையாடாமல், அவசர ஊர்தி வாகனங்களை முறையாகப் பராமரித்து இயக்க வேண்டும்" என்றார்கள்.