ஆன்லைனில் வாடகை வீடு பிடிக்கும் கும்பல்! - வேலூரில் கேரள வாலிபர் கைது, 4 பேர் மீட்பு | In vellore Kerala youngsters arrested

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (08/05/2019)

கடைசி தொடர்பு:13:11 (08/05/2019)

ஆன்லைனில் வாடகை வீடு பிடிக்கும் கும்பல்! - வேலூரில் கேரள வாலிபர் கைது, 4 பேர் மீட்பு

வேலூரில் ‘மசாஜ் சென்டர்’ பெயரில் பாலியல் தொழில் நடத்திய கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நான்கு இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.

வாடகை வீடு குறித்து வேலூர் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார் விளக்கம்

வேலூர் கொசப்பேட்டை நல்லான்பட்டறைத் தெருவில் இளைஞர் ஒருவர் வீடு வாடகைக்கு எடுத்து ‘மசாஜ் சென்டர்’ நடத்திவந்தார். அறிமுகமில்லாத இளம்பெண்கள் இங்கு அடிக்கடி வந்துசென்றனர். இதுபற்றி வேலூர் தெற்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அழகுராணி தலைமையிலான போலீஸார், மசாஜ் சென்டருக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு நான்கு இளம்பெண்கள் இருந்தனர். விசாரணையில், கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியைச் சேர்ந்த ஷபீக் (28) என்பவர், மசாஜ் சென்டர் பெயரில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, ஷபீக்கை கைது செய்த போலீஸார், நான்கு இளம்பெண்களையும் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 

இதுதொடர்பாக வேலூர் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘மசாஜ் சென்டர் என்கிற பெயரில் வீடுகளை வாடகைக்கு எடுத்து ஆன்லைன் மூலமாகவோ, நேரடியாகவோ வாடிக்கையாளர்களை அழைத்து, பாலியல் தொழில் போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. எனவே, பொதுமக்கள் தவறான மசாஜ் சென்டர்களைப் பயன்படுத்த வேண்டாம். தவறான மசாஜ் சென்டர் நடத்துபவர்கள் மற்றும் இதுபோன்ற செயல்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்திருக்கிறார்.