`ஒருமணி நேரம் மின்தடை; 3 நோயாளிகள் உயிரிழப்பு?' - மதுரை அரசு மருத்துவமனை டீன் விளக்கம் | Madurai government hospital death issues

வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (08/05/2019)

கடைசி தொடர்பு:12:31 (08/05/2019)

`ஒருமணி நேரம் மின்தடை; 3 நோயாளிகள் உயிரிழப்பு?' - மதுரை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்

மதுரை அரசு மருத்துவமனையில் மக்கள்

``மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடை காராணமாக 3 நோயாளிகள் இறக்கவிக்லை. அவர்களது நோய்த்தன்மை காரணமாகத்தான் இறந்துள்ளர்'' என மருத்துவமனை முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவமனையில் குவிந்த பெண்கள்

மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் மாநகரில் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. அதில் அரசு இராசாசி மருத்துவமனை கட்டடங்களிலும் மின்சாரம் தடை ஏற்பட்டது. மாலை 6.20 முதல் 7.20 வரை சுமார் 1 மணி நேரம் மின்சாரம் முழுமையாகத் தடைபட்டது. இதனால் மருத்துவமனை விபத்துக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன், மல்லிகா, பழனியம்மாள் 3 நோயாளிகளுக்கும் வென்டிலேட்டருக்கு மின்சாரம் வராததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்ததாகப் புகார் வந்தது. அதே சமயம் மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரும் பழுதடைந்ததால் நோயாளிகளுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.  இறந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனை டீன் வனிதா

இதுகுறித்து இன்று விளக்கம் அளித்த அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் வனிதா, "மதுரை அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர்கள் 2 மணி நேரம் பேட்டரியில் இயங்கக்கூடியது. ஜெனரேட்டர் பழுதடைந்த சமயத்தில்கூட அவை இயங்கியது. 1 மணி நேரத்தில் மின்சாரமும் வந்துவிட்டது. குறிப்பிட்ட தீவிர பிரிவில் மொத்தம் 10 நபர்கள் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தனர். அனைவருக்குமே முறையாக வென்டிலேட்டர் செயல்பட்டது. 3 நபர்கள் மட்டும் நோய்த்தன்மை காரணமாக இறந்தனர். அவர்களது மரணத்துக்கும் மின்தடைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை'' எனத் தெரிவித்தார்.