``வெட்கத்தை விட்டு உங்களிடம் சொல்கிறேன்..!"- பிரசாரத்தில் கண்கலங்கிய ஸ்டாலின் | stalin emotional in election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (08/05/2019)

கடைசி தொடர்பு:14:49 (08/05/2019)

``வெட்கத்தை விட்டு உங்களிடம் சொல்கிறேன்..!"- பிரசாரத்தில் கண்கலங்கிய ஸ்டாலின்

ஸ்டாலின் பிரசாரம்

``கருணாநிதிக்கு நினைவிடம் கட்ட இடம் வழங்க மறுத்த கயவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற சூழ்நிலை உருவாகும்" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் புன்னம்சத்திரத்தில் தேர்தல் பரப்புரையில் ஆவேசமாகப் பேசினார்.
 

மக்களிடம் ஸ்டாலின் பிரசாரம்

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் கடைவீதி, தளவாபாளையம், புன்னம்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களிடையே பேசிய மு.க.ஸ்டாலின், ``கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை வெற்றி பெறச் செய்ய நீங்கள் எல்லாம் வாக்களித்ததுபோல, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜியையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். முத்தமிழ் அறிஞர் கருணாநிதி மறைந்தபோது, அவருக்கு நினைவிடம் கட்ட இடம் தர மறுத்த ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு, நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்ற பிறகு, அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகே இடம் வழங்கியது. நான் உங்களிடம் வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன், `கருணாநிதி மறைந்தபோது எடப்பாடியின் கைகளைப் பற்றிக்கொண்டு, அண்ணாவின் நினைவிடத்துக்கு அருகே கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் வழங்குங்கள், நான் அவருடைய மகனாகக் கேட்கவில்லை.

செந்தில் பாலாஜிக்கு ஆதரவு கேட்டு ஸ்டாலின் பிரசாரம்

தமிழகத்தில் நான்கு முறை முதல்வராக இருந்தார் கருணாநிதி என்ற முறையில் கேட்கவில்லை. இந்தியாவின் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டவர்களை தேர்வு செய்ததில் முக்கியமான பங்கு வகித்தவர் கருணாநிதி. கோவையில் செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் கருணாநிதி. அதைவிட, உங்களின் தலைவர் எம்.ஜி.ஆருக்கு தலைவராக இருந்தவர் கருணாநிதி' என்று கேட்டுதான் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கும் இடம் ஒதுக்கக் கோரி வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசு அதை நிராகரித்தது. நீதிமன்றம் சென்று கருணாநிதிக்கு நினைவிடம் கட்ட அனுமதி பெற்றோம்'' என்று பேசியபோது அவரது கண்கலங்கியது. மேலும், `அப்படிப்பட்ட கயவர்களுக்கு தமிழகத்தில் இனி இடமில்லை என்ற சூழ்நிலை உருவாகும்' என்று ஆவேசத்துடன் பேசினார் ஸ்டாலின்.