`காதலித்தோம்... பிரிந்தோம்... தற்கொலை செய்வோம்'! - நீதிமன்றத்தில் தாய், சிறுமி கண்ணீர்  | sexual harassment case filed against inspector

வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (08/05/2019)

கடைசி தொடர்பு:14:33 (08/05/2019)

`காதலித்தோம்... பிரிந்தோம்... தற்கொலை செய்வோம்'! - நீதிமன்றத்தில் தாய், சிறுமி கண்ணீர் 

நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்த சிறுமி, அவரின் அம்மா

புழல் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 17 வயது சிறுமிக்கு இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாக திருவள்ளூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னையை அடுத்த சூரபேட் பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமி, திருவள்ளூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி பரணிதரன், வரும் 10-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தார். முன்னதாக, கடந்த 26.11.2018ல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 17 வயது சிறுமி புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ``நான்  10-ம் வகுப்பு படித்துவிட்டு அம்மாவுடன் வீட்டில் இருக்கிறேன். எனக்கு ஒரு சகோதரியும் தம்பியும் உள்ளனர். என் அம்மாவின் முதல் கணவர் ஹேமந்த்துக்கு,  நீதிமன்றம் மூலம் கடந்த 31.05.2017ல் விவாகரத்தாகிவிட்டது. பிறகு, ஜெயகரன் என்பவரை அம்மா, இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். அதற்காக எங்களிடம் சம்மதம் கேட்டார். எங்களுக்கு வேறு யாருடைய ஆதரவும் இல்லாததால், நானும் என் சகோதரியும் தம்பியும் சம்மதம் தெரிவித்தோம். ஜெயகரன் என்பவருடன் கடந்த 5.10.2017ல் அம்மாவுக்கு இரண்டாவது திருமணம், வடபழனி கோயிலில் நடந்தது. இருவரும் நல்ல கணவன்-மனைவியாக வாழ்ந்துவந்தனர். இருவருடைய பணத்தில் அம்பத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கினோம்.

எங்கள் குடும்பத்தில் அனைவரும் சந்தோஷமாக இருந்தோம். பிறகு, கார் மற்றும் நகைகளை வாங்கினோம். ஜெயகரன் என் அம்மா மீது அன்பாக இருக்கிறார் என நினைத்தேன். ஆனால் என் அம்மா மீது அன்பாக இருப்பதைப் போல நடித்து, எனக்கு பாலியல் ரீதியாக நிறைய துன்புறுத்தல்களைச் செய்துவந்தார்.` நீ உன் அம்மாவைப் போல அழகாக இருக்கிறாய்' என்று ஜெயகரன் கூறினார். அவரின் இத்தகைய பேச்சுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இந்தச் சூழ்நிலையில், ஜெயகரனுக்கு வேறு ஒருபெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் எங்கள் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. கடந்த 28.5.2018ல் ஜெயகரன் மற்றும் அவரின் நண்பர், 10 வக்கீல்கள் வீட்டுக்கு வந்தனர். லேப் டாப், செல்போன்கள், பென் டிரைவ்கள், கார் ஆகியவற்றை எடுத்துச்சென்றனர். இவ்வளவு நாள்களாக எங்களுக்கு செலவு செய்த பணத்தை திரும்பக் கேட்டார் ஜெயகரன். மேலும், ரவுடிகள் மூலம் எங்களை வீட்டிலிருந்து வெளியேற்ற முயற்சி செய்தார்.

நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த சிறுமி அவரின் அம்மா

இதுகுறித்து 9.6.2018ல் அம்மா, அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். எங்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்று அம்பத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தோம். அதன்பிறகு, நாங்கள் சூரபேட் பகுதிக்கு வாடகை வீட்டுக்கு சென்றோம். இந்த நிலையில், 24.11.2018ல் ஜெயகரன் தூண்டுதலின் பேரில் விவாகரத்து பெற்ற ஹேமந்த் மற்றும் அவரின் உறவினர்கள் எங்களிடம் தகராறு செய்தனர். உடனடியாக அம்மா காவல் கட்டுப்பாட்டு அறை 100-க்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். புழல் காவல் நிலையத்திலிருந்து வந்த போலீஸார், என்னையும் அம்மாவையும் அழைத்துச்சென்றனர். இன்ஸ்பெக்டர் நடராஜன், ஜெயகரன் ஆன் லைனில் உங்கள்மீது புகார் கொடுத்துள்ளார். அதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறினார். விசாரணையின்போது இன்ஸ்பெக்டர் தகாதவார்த்தைகளால் பேசினார். மேலும், அம்பத்தூர் வீட்டை ஜெயகரனின் பெயரில் எழுதிகொடுக்கவில்லை என்றால் ஜெயிலில் என்னையும் அம்மாவையும் அடைத்துவிடுவதாகக் கூறினார். மேலும், என்னை தனியாக அவரின் அறையில் வைத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அப்போது, நான் அவமானத்தால் கண் கலங்கினேன்" என்று குறிப்பிட்டுள்ளது. 

இதுகுறித்து 17 வயது சிறுமி கூறுகையில், ``என் அம்மாவின் இரண்டாவது கணவர், முதல் கணவர் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு வந்து தகராறு செய்தனர். அப்போது, அம்மாவின் நிர்வாண வீடியோவை என்னிடம் காட்டுவதாகக் கூறினர். இதனால், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. சூரபேட்டை வீட்டிலும் தகராறில் ஈடுபட்டனர். இதனால், காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தேன். ஆனால், எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்ற போலீஸார், அங்கு தவறாகப் பேசினர். இன்ஸ்பெக்டர் அறையில் ஜெயகரன், இன்ஸ்பெக்டர், நான் என மூன்று பேர் மட்டுமே இருந்தோம். அப்போது இன்ஸ்பெக்டரின் அநாகரிக செயல்களால் அவமானமடைந்தேன். அதை நான் எதிர்த்துக் கேட்டபோது, `இது போலீஸ் நிலையம். நான் வைப்பதுதான் சட்டம்' என்று இன்ஸ்பெக்டர் கூறினார். பாதுகாப்பு கொடுக்கக்கூடிய காவல் நிலையத்தில் எனக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. இன்ஸ்பெக்டரின் பேச்சை ஜெயகரன் ரசித்துக்கொண்டிருந்தார். எனவேதான், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஜெயகரன், இன்ஸ்பெக்டர் நடராஜ் ஆகியோர்மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன்" என்றார். 

 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த சிறுமியின் அம்மா

சிறுமியின் அம்மா கூறுகையில், ``நான், அலுவலகம் ஒன்றில் நேர்முகத் தேர்வுக்கு சென்றபோதுதான் ஜெயகரனைச் சந்தித்தேன். இருவரும் பேசினோம். அப்போது அவர் என்னை காதலிப்பதாகக் கூறினார். அதன்பிறகு, அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டேன். ஆரம்பத்தில், எங்களின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. ஜெயகரன், அமெரிக்காவில் பணியாற்றுகிறார். இந்தச் சமயத்தில் அவரின் செயல்பாடுகள் எனக்குப்பிடிக்கவில்லை.  அதனால் பிரிந்துவிட்டோம். புழல் காவல் நிலையத்தில் என் பெண்ணை தனியாக விசாரித்த இன்ஸ்பெக்டர் தவறாகப் பேசியுள்ளார். ஜெயகரனுக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்றார் கண்ணீர் மல்க. 

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் நடராஜிடம் கேட்டதற்கு, ``என் மீது  பொய்ப் புகார் கொடுத்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதற்குப் பின்னணியில் வழக்கறிஞர்கள் சிலர் உள்ளனர். என்மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுசெய்ய வழிவகை இல்லை. என் மீது தவறு இருந்தால், துறைரீதியாக நடவடிக்கை எடுத்திருப்பார்கள். இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனர். அரைமணி நேரம்தான் விசாரித்தேன். அப்போதுகூட பெண் சப்-இன்ஸ்பெக்டர் இருந்தார். நீதிமன்றத்தில் என்னிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிப்பேன்" என்றார் தைரியமாக.

 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த சிறுமியின் அம்மா

இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டாவது கணவர்மீது புகார் கொடுத்த பெண்குறித்து விசாரித்தபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஜெயகரன், அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், என்னை மனைவியுடன் (சிறுமியின் அம்மா)  சேர்த்துவைக்குமாறு கூறியிருந்தார். அதன்பேரில் நாங்கள் இருவரிடமும் விசாரித்தோம். அப்போது அந்தப் பெண், ஜெயகரனுடன் வாழ விரும்பவில்லை என்று கூறினார். சிறுமியின் அம்மாவின் முதல் கணவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல இரண்டாவது கணவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால், எங்களிடம் சிறுமி தரப்பினர் குறித்த முழுவிவரம் உள்ளது. சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் நடராஜ், தன்தரப்பு விளக்கத்தை உயரதிகாரிகளிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். எனவே, சிறுமி தரப்பினர் தனிப்பட்ட முறையில் இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்துள்ளனர். சிறுமியின் அம்மா குறித்து இன்னொரு முக்கியத் தகவல் ஒன்று ஆதாரத்துடன் உள்ளது. அந்தத் தகவல் மட்டும் வெளியானால், உண்மை எல்லோருக்கும் தெரிந்துவிடும். அதைத்தான் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் விரைவில் சமர்பிக்க உள்ளார்" என்றனர். 

இதற்கிடையில், சிறுமி தரப்பினர் பேசிய ஆடியோக்களும் வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன. அதில் ``நீ ஒன்றும் பண்ண முடியாது. அவன் ஆம்பளை... அவன் வருவான், நீ ஆம்பளை என்றால் வா'' என்று ஒரு ஆடியோ முடிவடைகிறது. இன்னொரு ஆடியோவில் ''அந்த வீடு நீ கஷ்டப்பட்டு சம்பாதித்ததாகவே இருக்கட்டும். உன் காசாகவே இருக்கட்டும். ஆனால், ஒரு பொம்பளகிட்டு இருந்து அபகரிக்கிறியே நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? முடிந்தால் நீதிமன்றத்தில் வாதாடி இருக்க வேண்டியதானே. ஏன் மூன்றாவது நபரிடம் செல்கிறாய். ஏன் புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறாய். இத்தனை வருஷம் அவனாலே ஒன்றும் செய்ய முடியவில்லை. முடிந்தால் ஏதாவது செய்துபாரு'' என்று அந்த ஆடியோவில் சிறுமியின் அம்மா பேசுகிறார். அடுத்த ஆடியோவில், ''அவன் அம்மா இருக்கும்போதே இன்னொரு பெண்ணுடன் பழகினான். நீயும் அப்படித்தான் இருக்கிறாய். நீயெல்லாம் பேசலாமா" என்று முடிகிறது. 

ஜெயகரனிடம் பேச முயன்றோம். அவரின் தரப்பு விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம். 

நீதிமன்றத்தில் நடைபெற உள்ள வழக்கு விசாரணையின்போது என்னென்ன உண்மைகள் வெளிவரப்போகிறதோ!