`வீடியோ எடுத்து பணம் பறிக்கத் திட்டமிட்ட ஊழியர்!’ - நிதி நிறுவன அதிபர் கடத்தலின் அதிர்ச்சி பின்னணி | Police investigation on Vellore Kidnap issue

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (08/05/2019)

கடைசி தொடர்பு:16:40 (08/05/2019)

`வீடியோ எடுத்து பணம் பறிக்கத் திட்டமிட்ட ஊழியர்!’ - நிதி நிறுவன அதிபர் கடத்தலின் அதிர்ச்சி பின்னணி

வேலூரில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் பத்திரமாக மீட்கப்பட்டார். ஒரு பெண்ணுடன் அவர் உல்லாசமாக இருப்பதைப் போன்ற வீடியோதான் கடத்தல் பின்னணியின் காரணம் என்று போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

திருவள்ளூர்

வேலூர் வேலப்பாடியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் நந்தகுமார் (26). வேலூர் கிரீன் சர்க்கிள் சாலையோரம் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் நிதி நிறுவனம் நடத்திவருகிறார். நேற்று மாலை இரண்டு பைக்குகளில் வந்த 5 பேர் கும்பல், நிதி நிறுவனத்துக்குள் புகுந்தனர். அந்தக் கும்பலில் வாட்ட சாட்டமாக இருந்த ஒருவர், நந்தகுமாரை மிரட்டி தோளில் கைபோட்டபடி வெளியே அழைத்துச்சென்றார். பின்னர், அவரைப் பைக்கில் கடத்தினர். இந்தக் காட்சிகள், அங்குப் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களில் தெள்ளத் தெளிவாகப் பதிவாகியிருந்தன.

உடனடியாக நந்தகுமாரின் குடும்பத்தினர், வேலூர் வடக்கு போலீஸில் புகார் அளித்தனர். எஸ்.பி பிரவேஷ்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டார். கடத்தல் கும்பலைப் பிடிக்கவும், நிதி நிறுவன அதிபரைப் பத்திரமாக மீட்கவும் வேலூர் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே, நிதி நிறுவன அதிபரின் பெற்றோருக்கு போன் செய்த கடத்தல் கும்பல் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர். கடத்தல் கும்பல் பேசிய செல்போன் எண்ணை போலீஸார் ஆய்வு செய்ததில், ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியில் அவர்கள் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

கடத்தல் கும்பல்

போலீஸார் அங்கு விரைந்துசென்றனர். நேற்றிரவு 10 மணியளவில் நிதி நிறுவன அதிபர் நந்தகுமார் பத்திரமாக மீட்கப்பட்டார். தப்பி ஓடிய கடத்தல் கும்பலைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தப் பரபரப்புச் சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``நிதி நிறுவனத்தில் பெண் ஒருவருடன் நந்தகுமார் உல்லாசமாக இருந்துள்ளார். அந்தக் காட்சிகள் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்ததாகத் தெரிகிறது. இதை அங்கு வேலை செய்யும் நபர் யாரோ பார்த்திருக்கிறார். அந்தக் காட்சிகளைக் கைப்பற்றிப் பணம் பறிப்பதற்காகக் கடத்தல் கும்பலிடம் கொடுத்திருக்கிறார்.

நிதி நிறுவனத்துக்குள் புகுந்த கும்பல், உல்லாச வீடியோவைக் காட்டி மிரட்டியதால் எதுவும் பேசாமல் நந்தகுமார் பைக்கில் ஏறிச் சென்றுள்ளார். மேல்விஷாரம் பகுதியில் பதுங்கிய கும்பல், நந்தகுமாரின் பெற்றோரை 5 லட்சம் ரூபாய் எடுத்துவருமாறு மிரட்டியிருக்கிறார்கள். நந்தகுமாரின் பெற்றோரிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பி போலீஸாரும் பின்தொடர்ந்து சென்றோம். போலீஸ் நடமாட்டத்தைப் பார்த்ததும், நிதி நிறுவன அதிபரை அங்கேயே விட்டுவிட்டுக் கடத்தல் கும்பல் பைக்கில் தப்பிச்சென்றுவிட்டனர். கடத்தல் கும்பல் விரைவில் பிடிபடுவார்கள். நிதி நிறுவன அதிபர் நந்தகுமாரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.