`மே 23-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமறைவாகிவிடுவார்கள்!'- யாரைச் சொல்கிறார் ஜெயக்குமார் | Minister D.Jayakumar talks about by election

வெளியிடப்பட்ட நேரம்: 16:14 (08/05/2019)

கடைசி தொடர்பு:16:14 (08/05/2019)

`மே 23-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமறைவாகிவிடுவார்கள்!'- யாரைச் சொல்கிறார் ஜெயக்குமார்

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுடன், தமிழகத்தின் இடைத்தேர்தல்கள் முடிவுகளும் வருகிற மே 23-ம் தேதி வெளியாக இருக்கின்றன. அ.தி.மு.க ஆட்சி தொடருமா அல்லது கலைக்கப்படுமா இரண்டில் எது நடக்க இருக்கிறது என ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், ஆட்சியைக் கலைப்பதில் தி.மு.க-வுக்குப் போதிய எம்.எல்.ஏ-க்கள் இல்லையென்றால் அவர்களுடன் இணைந்து ஆட்சியைக் கலைக்கத் தயாராக இருக்கிறோம் என அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசினார். இன்னொருபுறம், தி.மு.க பல வியூகங்களையும், கூட்டணிக் கணக்குகளையும் போட்டுப் பார்த்து தாங்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளில் இருப்பதாக அறிவாலயப் பட்சிகள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஆட்சி அமைப்பதில் தி.மு.க காண்பித்துவரும் மும்முரத்தைப் பார்த்தால் எடப்பாடியின் முதல்வர் பதவி கத்தரி வெயில் முடிவதற்கு முன் முடிந்து விடுமா என்கிற சந்தேகம் எழவே, அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்துப் பேசினேன்.

ஜெயக்குமார்

``நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்,  ஒவ்வொரு தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்திலும் இது தி.மு.க-வினர் சொல்வதுதான். சொல்வதோடு மட்டுமின்றி முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே போஸ்டர்கள் அடிப்பது. பதவியேற்பு நிகழ்வுக்கு அரங்கம் புக் செய்வது என பரபரப்பாக இருப்பார்கள். ஆனால், தேர்தல் முடிவு வெளியாகும் நாளன்று மதியம் 1 மணிக்கு மேல் தி.மு.க-வினர் யார் யார் எங்கிருக்கிறார்களென்றே தெரியாது. கடந்த பத்து வருடமாக அவர்கள் இதைச் செய்து நல்ல பயிற்சியில் இருக்கிறார்கள்.

ஆகவே, இம்முறை காலை 11 மணிக்கே தலைமறைவாகிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். எதோ அதிக இடம் தி.மு.க வெற்றி பெற்றுவிடுவது போலவும், கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து எங்கள் ஆட்சியை அகற்றிவிடுவது போலவும் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயம் தெளிவாகச் சொல்கிறேன். ஆண்டிகள் ஒன்று சேர்ந்து மடம் கட்ட முடியுமே தவிர கோட்டை கட்ட முடியாது. 2021 வரை மக்கள் எழுதிக்கொடுத்த சாசனம் அம்மாவின் ஆசி பெற்ற ஆட்சி. இதை யாராலும் அசைக்க முடியாது" என்றார்.