பட்டாம்பூச்சிகளைப் பார்க்க ஶ்ரீரங்கத்துக்குச் சிறகடிக்கும் குட்டீஸ் பட்டாளம்! #MyVikatan   | Children will love this trichy Butterfly Park

வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (08/05/2019)

கடைசி தொடர்பு:12:14 (10/05/2019)

 பட்டாம்பூச்சிகளைப் பார்க்க ஶ்ரீரங்கத்துக்குச் சிறகடிக்கும் குட்டீஸ் பட்டாளம்! #MyVikatan  

லீவு விட்டாலே திருச்சிவாசிகள், குடும்பத்தோடு திருச்சி மலைக்கோட்டை, முக்கம்பு, கல்லணை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று சந்தோசமாக இருந்துவிட்டுச் செல்வது வழக்கம். ஆனால் திருச்சியில் புதிதாக களைகட்டும் பகுதியாக மாறியிருக்கிறது ஶ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா.

பட்டாம் பூச்சி பூங்கா
 

கடந்த 2012-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பாதுகாக்கவும், அதன் இனத்தைப் பெருக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவிக்கப்பட்ட இந்தப் பூங்கா, ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 15கி.மீ. ஸ்ரீரங்கத்திலிருந்து 7கி.மீ. முக்கொம்பிலிருந்து 6 கி.மீ தூரத்திலும், திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூர் நடுக்கரை கிராமத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 25ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவை தமிழ்நாடு அரசு வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. எப்போதும் பசுமையாக காட்சியளிக்கும் இந்த வண்ணத்துப்பூச்சிப் பூங்காவுக்கு, சுற்றுலாப் பிரியர்கள், மாணவர்கள், குழந்தைகள் எனப் பலரும் செல்பி மழை பொழிகிறார்கள்.
பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள், முட்டையிடுதல், புழு வளருதல், தேன் குடித்தல் என அதன் வாழ்க்கைச் சக்கரத்துக்காக ஒவ்வொரு தாவரத்தையும் தேர்வுசெய்யும். அப்படி வரும் வண்ணத்துப்பூச்சிகள் வருகைக்காக, பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்த சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, கொரட்டல் ஏரியா, கொன்றை, மேரி கோல்டு பூச்செடிகள், செண்பக மரம் மகிழம் மரம் எனச் சுமார் முந்நூற்றுக்கும் மேற்பட்ட வகை வகையான தாவரங்கள் உள்ளன.

பட்டாம் பூச்சி பூங்கா
 

கூடவே புல்வெளிகள், குழந்தைகள் விளையாட தனியிடம், கொஞ்சம் இளைப்பாறிக்கொள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் மாதிரி குடில்கள், செயற்கை நீரூற்றுகள், பார்வையாளர்கள் வலம்வர நடைபாதை, வண்ணத்துப்பூச்சிகளின் மூல உருவத்தில் குகை வழிப்பாதைகள். மரங்கள் மற்றும் செடிகளுடன் கூடிய நட்சத்திரவனம். புல்தரைகள், குழந்தைகள் விளையாட்டுத் திடல்கள். அழகிய நடை பாலங்கள், பூங்காவில் உள்ள நட்சத்திரவனம், பல்வேறு நீர்த் தாவரங்கள் அடங்கிய குட்டைகள், பிரமாண்ட வண்ணத்துப்பூச்சி சிலைகள், வண்ணத்துப்பூச்சிகளுக்கு பல்வேறு இடங்களில் உள் அரங்குகள் அனைத்தும் அசத்தல். பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகளில்,உயரத் தண்ணி பீய்ச்சி அடிக்க, அந்தத் தண்ணீர் பார்வையாளர்கள் மீது, பனித்துளியைப் போல் விழுந்து பரவும்.

பட்டாம் பூச்சி பூங்கா
 

திரும்பும் திசையெங்கும் பசுமையாகவும், ரம்மியமான அழகாகவும் உள்ள இந்தப் பூங்காவுக்கு நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு 10 ரூபாய். சிறியவர்களுக்கு 5 ரூபாய். அரசுப் பள்ளி மாணவர்கள் குழுவாக வந்தால் கட்டணமில்லை. தினமும் காலை 9மணி முதல் மாலை 6மணி வரை மட்டுமே பூங்கா திறந்திருக்கும். பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் செவ்வாய்க்கிழமை மட்டும் தற்போது அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.