ஹைட்ரோ கார்பன் திட்டம்... அமைதி காக்கும் முதல்வர்! | Why is Edappadi Palanisamy silent on Hydro carbon project?

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (08/05/2019)

கடைசி தொடர்பு:20:30 (08/05/2019)

ஹைட்ரோ கார்பன் திட்டம்... அமைதி காக்கும் முதல்வர்!

"ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர்களும் இப்போது ஏன் வாய்திறக்காமல் இருக்கிறார்கள்?" - கே.பாலகிருஷ்ணன்

ஹைட்ரோ கார்பன் திட்டம்... அமைதி காக்கும் முதல்வர்!

நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பிரசார இயக்கம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவுசெய்துள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏன் வாய் திறக்காமல் இருக்கிறார் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 ஹைட்ரோ கார்பன் குறித்து பாலகிருஷ்ணன்

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான முயற்சிகளை இரு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மோடி அரசு மேற்கொண்டது. தமிழக அரசும் அதற்கு ஆதரவாகச் செயல்பட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் டெல்டாவில் விவசாயம் பாழாகிவிடும், வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுவிடும், தமிழகம் பாலைவனமாகிவிடும் என்ற கவலையை விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினர் தெரிவித்தனர். அவர்கள் பல போராட்டங்களையும் நடத்தினர். அதையடுத்து, இத்திட்டத்தை மத்திய அரசு நிறுத்திவைத்தது. தற்போது இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது. இது டெல்டா மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய  வைத்துள்ளது. 

இதை எதிர்த்துக் கடந்த மாதம் வேதாரண்யம் அருகே காரியாபட்டினத்தில் மனிதச்சங்கிலி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை கிராம மக்கள் நடத்தினார்கள். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பிரசார இயக்கம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. 

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் கேட்டோம். அவர், ``ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றும் நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் மூலம் நாடு முழுவதும் 22 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கவுள்ளனர். காவிரி வளநாடாகிய டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோ கார்பன் திட்டம் பாலைவனமாக்கிவிடும். அதனால்தான், அத்திட்டத்தை எதிர்த்து நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் தன்னெழுச்சியாக மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். அப்போது பதுங்கிய மத்திய அரசு, இப்போது அத்திட்டத்துக்கு அனுமதி அளித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. 

எடப்பாடி பழனிசாமி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர்களும் இப்போது ஏன் வாய்திறக்காமல் இருக்கிறார்கள்? மக்களின் எதிர்ப்பையும் மீறி, இத்திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தப் பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது எங்களின் முக்கியமான கோரிக்கை. பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்துக்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த முடிவுசெய்துள்ளோம். 

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாகப்பட்டினத்தில் மே 7-ம் தேதி நடைபெற்றது. எங்கள் கட்சியின் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, காரைக்கால், கடலூர் ஆகிய மாவட்டங்களின் செயலாளர்களும், மாநிலக்குழு உறுப்பினர்களும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. நானும் அதில் பங்கேற்றேன். டெல்டா மாவட்டங்களை ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் அழிவிலிருந்து பாதுகாப்பது தொடர்பாகவும், இத்திட்டத்துக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்துவது குறித்தும் விரிவாக ஆலோசித்தோம். 

முதற்கட்டமாக வரும் ஜூன் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பேரழிவைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இயக்கங்களை நடத்த முடிவுசெய்துள்ளோம். இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பு, அனைத்துக் கிராமங்களிலும் பிரசாரம் என்று திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகு, அடுத்தகட்டப் போராட்டம் பற்றி முடிவுசெய்வோம்” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்