`45,000 வாக்காளர்களின் பெயர் எப்படி நீக்கப்பட்டது?’- விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம் | madras hc is order election commission to explain for removal of 45 thousand voters

வெளியிடப்பட்ட நேரம்: 16:52 (08/05/2019)

கடைசி தொடர்பு:16:52 (08/05/2019)

`45,000 வாக்காளர்களின் பெயர் எப்படி நீக்கப்பட்டது?’- விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 45 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 உயர்நீதிமன்றம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் தூத்தூர், சின்னத்துறை, கடியப்பட்டினம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, இடலாக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கடுமையாக கொந்தளித்தனர். `ஜனநாயக கடமையைக்கூட தங்களால் செய்யமுடியவில்லை' என்று வேதனை தெரிவித்தனர். தமிழ் மீனவர் கூட்டமைப்பு சார்பில், `இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

தேர்தல் ஆணையம்


ஒகி புயல் தாக்கியபோது அரசு  பாராமுகமாக இருந்ததால், மக்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சம் காரணமாக வாக்காளர் பட்டியலிலிருந்து அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. மீனவர் கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவில், ``அதிக அளவில் வாக்காளர் நீக்கப்பட்ட பகுதிகளில் மறுதேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக விளக்கமளிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.