`வந்தது வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல’ - ஈரோடு சர்ச்சைக்கு அதிகாரிகள் விளக்கம் | evm machine controversy in erode...

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (08/05/2019)

கடைசி தொடர்பு:17:30 (08/05/2019)

`வந்தது வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல’ - ஈரோடு சர்ச்சைக்கு அதிகாரிகள் விளக்கம்

தேனி தாலுகா அலுவலகத்திற்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் போல, ஈரோட்டிற்கும் 20 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்திருப்பதாக வெளியாகிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரம் மாதிரிப்படம்

கோவையிலிருந்து தேனி தாலுகா அலுவலகத்திற்கு நேற்றிரவு 50 புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றி தில்லுமுல்லு செய்வதற்காகத் தான் புதிதாக வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேனி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கினர். இதைப்போலவே, நேற்று இரவு ஈரோட்டிற்கும் 20 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்திருப்பதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மறுவாக்குப் பதிவு கோரி எந்தக் கட்சியினரும் கோரிக்கை வைக்காத நிலையில், ஈரோட்டிற்கு எதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன என அரசியல் கட்சியினர் பலரும் சந்தேகத்தை எழுப்பினர்.

அதுமட்டுமல்லாமல், கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தினுள் கொண்டு சேர்த்துவிட்டதாகவும் தகவல்கள் நாலாபுறமும் றெக்கைக் கட்டிப் பறந்தன. ஆனால், ‘ஈரோட்டிற்கு வந்தது 20 விவி பேட் எந்திரங்கள் தானே தவிர, வாக்குப்பதிவு எந்திரங்கள் அல்ல’ என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும், ‘ஈரோடு தொகுதியின் ஒருசில வாக்குச்சாவடிகளில் குளறுபடிகள் நடந்திருப்பதால், அங்கு மறுவாக்குப் பதிவு நடத்த வாய்ப்பிருக்கிறது. இதுசம்பந்தமாக ஈரோடு கலெக்டர், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். மறுவாக்குப் பதிவிற்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாவட்டத்தில் ஏற்கெனவே தேவையான அளவிற்கு ஸ்டாக் இருப்பதால், தேவையான விவி பேட் இயந்திரங்களை மட்டுமே கோவையிலிருந்து வாங்கியிருக்கிறோம். மற்றபடி இதில் எந்தத் தில்லுமுல்லுகளும் நடக்கவில்லை’ என்றனர்.

இதற்கிடையே, ஈரோடு தொகுதிக்கு மறுவாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது என்ற தகவல் காட்டுத் தீயாய்ப் பரவ, விஷயம் தெரியாமல் ‘இந்த முறை ஈரோட்டுக்கு ரோஸ் கலர் நோட்டு உறுதி’ என ஒரு கூட்டம் உற்சாகத்தில் மிதக்கிறது.