`திரிசூலம் மலையில சிக்னல் காட்டுது; பிடிக்க முடியல!'- போலீஸை அலையவிடும் இளம்பெண் | Police Search Chennai women Based on Doctor Complaint

வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (08/05/2019)

கடைசி தொடர்பு:18:00 (08/05/2019)

`திரிசூலம் மலையில சிக்னல் காட்டுது; பிடிக்க முடியல!'- போலீஸை அலையவிடும் இளம்பெண்

 செல்போன் சிக்னல் வைத்து இளம்பெண்ணை தேடும் போலீஸ்

சென்னை திருவான்மியூரில் உள்ள வி.வி.ஐ.பி ஒருவரை ஏமாற்றிய வீட்டு வேலைக்கார இளம்பெண்ணை தேடி போலீஸார் நொந்துபோய்விட்டனர். அந்தப் பெண்ணின் செல்போன் சிக்னல் காட்டும் பகுதிக்கு போலீஸார் செல்வதற்கு முன் அவர் தப்பிவிடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் தனிப்படை போலீஸ் டீம் மீதே சந்தேகம் எழுந்துள்ளது. 

சென்னை திருவான்மியூரில் குடியிருக்கும் வி.வி.ஐ.பி ஒருவருக்கு 48 வயது. அவரின் வீட்டில் உள்ளவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்றுவிட்டனர். இதனால் வி.வி.ஐ.பி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனால், ஆன் லைன் மூலம் வீட்டு வேலைக்கு பெண்ணைத் தேடினார். அப்போது சித்ரவள்ளி என்ற பெயரில் வி.வி.ஐ.பியிடம் இளம்பெண் ஒருவர் அறிமுகமாகினார். அவர், வி.வி.ஐ.பி வீட்டில் சில நாள்கள் வீட்டு வேலைகளைச் செய்தார். இந்தச் சூழ்நிலையில், வீட்டு வேலை செய்த பெண், பணம் கேட்டு மிரட்டுவதாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் வி.வி.ஐ.பி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் அந்தப் பெண்ணை சில நாள்களாகத் தேடிவருகின்றனர். ஆனால் பிடிக்க முடியவில்லை. 

இந்தச் சூழ்நிலையில் வீட்டு வேலை செய்த பெண் விவகாரம் வி.வி.ஐ.பி வீட்டில் பூதாகரமாக வெடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெண்ணைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார், பெண்ணின் செல்போன் சிக்னல் மூலம் அவரைத் தேடிவருகின்றனர். போலீஸார் செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன் அந்தப் பெண் எஸ்கேப் ஆகிவிடுவது வாடிக்கையாக இருந்துவருகிறது. இதனால் அவரைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறிவருகின்றனர். 

 செல்போன் சிக்னல் மூலம் இளம்பெண்ணை தேடும் போலீஸ்

இதுகுறித்து தனிப்படை டீமில் உள்ள போலீஸார் கூறுகையில், ``புகார் கொடுத்தவர், காவல் துறையில் உள்ள உயரதிகாரிகளுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். இதனால் தனிப்படையில் உள்ள எங்களிடம் அவரின் விவரங்களைத் தெரிவிக்கவில்லை. வி.வி.ஐ.பியை ஏமாற்றிய இளம் பெண்ணைத் தொடர்ந்து தேடிவருகிறோம். முதலில் தேவி என்று பெயரை அந்தப் பெண் கூறியுள்ளார். சித்ரவள்ளி என்று வி.வி.ஐ.பியிடம் கூறியிருக்கிறார். இதனால் அவரின் உண்மையான பெயர் என்னவென்று தெரியவில்லை. இளம்பெண்ணின் செல்போன் சிக்னல் ஜமீன்பல்லாவரம், திரிசூலம் ஆகிய பகுதிகளில் காட்டியது. இதனால் அந்தப் பகுதிகளில் தேடினோம். ஆனால் நாங்கள் செல்வதற்குள் அவர் தப்பிவிடுகிறார்.

இதனால் நாங்கள் வரும் தகவல் அவருக்கு முன்கூட்டியே தெரிகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இளம்பெண்ணுக்கு தகவல் கொடுக்கும் காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடு யாரென்று தெரியவில்லை. அந்த நபரை முதலில் பிடித்துவிட்டால் தலைமறைவாக இருக்கும் அந்தப் பெண் எளிதில் சிக்கிவிடுவார். 

இதற்கிடையில் நேற்று அந்தப் பெண்ணின் செல்போன் சிக்னல் திரிசூலம் மலைப்பகுதியில் காட்டியது. மலைப்பகுதி என்பதால் சிக்னலை கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது. செல்போன் சிக்னல் காட்டும் பகுதிக்குச் செல்லும்போது சரியான இடம் தெரியாமல் திரும்பிவரும் சூழல் ஏற்படுகிறது. மலையையொட்டி உள்ள பகுதியில்தான் அந்தப் பெண் பதுங்கியிருக்கலாம் என்று அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகிறோம். விரைவில் அந்தப் பெண்ணைப் பிடித்துவிடுவோம்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``புகார் கொடுத்தவரிடம் விசாரித்தபோது வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக முதலில் தெரிவித்தார். உண்மையில் வி.வி.ஐ.பி-யும் அந்தப் பெண்ணும் சம்பந்தப்பட்ட வீடியோ இருக்கிறதா என்பது தெரியவில்லை. மேலும் புகார் கொடுத்தவர், சில தகவல்களை மட்டுமே தெரிவிக்கிறார். இதுதான் அந்தப் பெண்ணை பிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. செக் மற்றும் பணத்தை வாங்கியதாக எங்களிடம் புகார் கொடுத்தவர் கூறியுள்ளார். ஆனால் எதற்காக செக் கொடுத்தார் என்ற கேள்விக்கான விடை அவரிடம் இல்லை. எதையும் மறைக்காமல் முழுத் தகவலைத் தெரிவித்தால்தான் அதன்அடிப்படையில் விசாரணை நடத்த முடியும்.

அதோடு அந்தப் பெண் குறித்த முழுதகவல்களும் இல்லை. ஆன் லைனில்தான் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதுதான் இந்தச் சம்பவத்தில் சிக்கலுக்கு முக்கிய காரணம். வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவோர் குறித்த முழு விவரம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் வேலை செய்பவர்களால் சிக்கல் ஏற்படும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, வீட்டு வேலைக்கு அமர்த்துபவர்களின் முழுவிவரங்களைக் கேட்டறிந்தபிறகு பணியமர்த்துங்கள்" என்றார். 

இந்தச் சூழ்நிலையில் வி.வி.ஐ.பி வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு உதவிய நபர் யாரென்று முதலில் தெரியவில்லை. தற்போது அவர் குறித்த ரகசிய தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. அந்த நபரை இன்று பிடித்திடுவோம் என்ற நம்பிக்கையில் போலீஸார் உள்ளனர். ஆனால், அவரும் போலீஸாருக்கு டிமிக்கி காட்டினால் சிக்கல்தான் என்கின்றனர் தனிப்படை போலீஸார்.