100 ஆண்டுகளாக சிதிலமடைந்த சோழர்கால கோயில் - மீட்டுக்கொடுத்த பாம்புப் புற்று | king Chola Period Temple Renovated after 100 years in Nagai

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (08/05/2019)

கடைசி தொடர்பு:19:00 (08/05/2019)

100 ஆண்டுகளாக சிதிலமடைந்த சோழர்கால கோயில் - மீட்டுக்கொடுத்த பாம்புப் புற்று

நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள கோனேரிராஜபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசர்வமங்கள மோகனகுஜாம்பிகா சமேத ஸ்ரீகயிலாசநாத சுவாமி ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (மே 10-ம் தேதி) வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

temple

 

தேவாரம் பாடிய நாயன்மார்கள் மூவரால்  நாவாரப் பாடல்பெற்ற பல தலங்களுக்கு மத்தியில் சிறப்பு மிக்க கிராமம் கோனேரிராஜபுரம். கி.பி.1117 -ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்டது. காலப் போக்கில் சிதிலமடைந்துவிட்ட ஆலயத்துக்குக் கடந்த நூறு வருடங்களாகவே திருப்பணிகள் நடைபெறவில்லை. கும்பாபிஷேகமும் நடைபெறவில்லை.

temple

 

நித்திய பூஜைகள்கூட நடைபெறாமல் இருந்தது. மேலும், பாம்புப் புற்றுடன் கூடிய அம்பாள் சந்நிதி மட்டும்தான், இந்தத் திருக்கோயில் இருந்ததற்கான சாட்சியாக இருந்தது. எனவே, கிராமவாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டனர். அதன்படி ஸ்ரீகயிலாசநாதர் பெருமான், ஸ்ரீசர்வ மங்கள மோகனகுஜாம்பிகையுடன் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதிருச்செந்தூர் செந்தில்வேலன், ஸ்ரீநர்த்தன விநாயகர், ஸ்ரீரகுமாயி சமேத பாண்டுரங்க சுவாமி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர், ஸ்ரீநாகர், நந்தி, பலிபீடம் ஆகிய மூர்த்தங்களுக்கு தனித்தனிச் சந்நிதிகள் அமைத்து பெருமானுக்கு கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுற்றுச்சுவர் இவற்றுடன் பஞ்சவர்ண கலாபங்கள் தீட்டச்செய்து பூரணமாகத் திருப்பணியை பூர்த்தி செய்துள்ளனர். இந்தக் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நிகழும் ஸ்ரீவிகாரி வருடம், சித்திரை மாதம் 27-ம் தேதி (10.5.19) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்குமேல் 10.00 மணிக்குள் நடைபெறுகிறது.

 

இதுபற்றி திருப்பணிக்குழுவைச் சேர்ந்த மோகனரங்கனிடம் பேசினோம். ``காஞ்சி மகா பெரியவர், எங்கள் ஊர்க்காரர்கள் யாரைப் பார்த்தாலும் `உங்கள் ஊரில் நாகப்புற்று, நாகலிங்கமரம், நாகர்குளம் அமைந்துள்ள கயிலாசநாதர் ஆலயத்தைப் புதுப்பித்து வழிபாடு செய்தால்தான் உங்கள் கிராமம் சிறப்பாக இருக்கும். விவசாயம் செழிக்கும்' என்று அருளாசி வழங்குவார்களாம். பல ஆண்டுகளாக சிதலமடைந்து பாம்புப் புற்றுடன் கூடிய அம்பாள் சந்நிதி மட்டுமே இருந்தது. இத்தனை ஆண்டுகளாக கோயிலைப் பாதுகாத்து வந்ததும் அந்தப் பாம்புதான் என நம்புகிறோம். தற்போதும் அந்தப் பாம்புக்கும் புற்றுக்கும் எவ்வித இடையூறும் செய்யாமலே திருப்பணிகளை பூர்த்தி செய்திருக்கிறோம். மகா கும்பாபிஷேகம் டாக்டர் சிவஸ்ரீ சுவாமிநாத சிவாசாரியார் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, பக்தகோடிகள் அனைவரும் மகா கும்பாபிஷேகத்தின் அங்கமாக நடைபெற உள்ள நான்கு கால யாகசாலை பூஜைகளையும், மகா கும்பாபிஷேகத்தையும் தரிசித்து பிறவிப் பயனை அடைந்து எல்லாம் வல்ல ஸ்ரீசர்வ மங்கள மோகனகுஜாம்பிகா சமேத ஸ்ரீ கயிலாசநாத சுவாமியின் அருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்" என்றார்.