`கணவனுக்கு 2 வது திருமணம்' - மாமனாரை எரித்துக் கொலை செய்த மருமகள்! | Daughter in law killed his Uncle in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 18:07 (08/05/2019)

கடைசி தொடர்பு:18:07 (08/05/2019)

`கணவனுக்கு 2 வது திருமணம்' - மாமனாரை எரித்துக் கொலை செய்த மருமகள்!

கொலை நடந்த இடம்

கணவருக்கு 2வது திருமணம் செய்து வைத்த ஆத்திரத்தில் மாமனாரை தீ வைத்து எரித்துக் கொலை செய்தார் மருமகள். இந்தச் சம்பவத்தில் மருமகளும் அவரின் அம்மாவும் தற்போது சிறைக்கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ளது நெமிலி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சபாபதி. சில தினங்களுக்கு முன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் மீது பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். உடலில் தீ பிடித்து எரிவதைப் பார்த்த சபாபதி அலறி துடித்தார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். பிறகு சபாபதியை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை நடந்த இடம்  

இதுகுறித்து கனகம்மாள்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். சபாபதி தூங்கிய கட்டில் எரிந்ததை போலீஸார் ஆய்வு செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து சபாபதியின் மருமகள் காயத்ரி அவரின் அம்மா கலைவாணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சபாபதி, கூலி வேலை செய்துவந்தார். அவரின் மகன் பிரபாகரன். இவருக்கும் சென்னை மாதவரத்தைச் சேர்ந்த காயத்ரிக்கும் 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். காயத்ரி தன்னுடைய தாய்வீட்டில் வசித்துவந்தார். திருமணம் முடிந்தபிறகும் மகன் தனிமையில் வாழ்வதைப்பார்த்து சபாபதி மற்றும் குடும்பத்தினர் வருந்தினர். இதனால் காயத்ரியுடன் பலதடவை பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. 

 கொலை நடந்த இடம்

இதையடுத்துதான் பிரபாகரனுக்கு இன்னொரு திருமணம் செய்துவைக்க வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்தனர். அதன்படி பெண் பார்த்து சில தினங்களுக்கு முன் திருமணத்தையும் நடத்தினர். இந்தத் தகவல் காயத்ரிக்கு தெரியவந்தது. உடனே அவரும் கலைவாணியும் நெமிலிக்குச் சென்று சபாபதியிடம் தகராறு செய்தனர். அப்போது சபாபதியும், `நீதான் என் மகனுடன் வாழவில்லை. அதற்காக அவர் எத்தனை காலத்துக்கு தனிமரமாக வாழ முடியும். நான் கண் மூடுவதற்குள் அவனுக்கு ஒரு நல்லதை செய்துபார்க்க வேண்டும் என்றுதான் திருமணம் செய்துவைத்தேன்' என்று கூறியுள்ளார்.

கொலை நடந்த இடம்

இதனால் ஆத்திரமடைந்த காயத்ரி, சபாபதியை கொலை செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டார். இதற்காக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அம்மாவுடன் காயத்ரி அங்குச் சென்றார். அப்போது சபாபதி வீட்டின் வெளியில் கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அதைப்பார்த்த காயத்ரி மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் காயத்ரியையும் அவரின் அம்மா கலைவாணியையும் கைது செய்துள்ளோம். அவர்களும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்"என்றனர். 

  கொலை வழக்கை விசாரிக்கும் காவல் நிலையம்

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சபாபதி, போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ``சம்பவத்தன்று நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது, உடலில் தண்ணீர் தெளித்ததுபோல இருந்தது. உடனே கண்விழித்துப் பார்த்தபோது காயத்ரியும் அவரின் அம்மாவும் அங்கு நின்றுகொண்டிருந்தனர். என் உடலில் மீது அவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றியது தெரிந்ததும் கட்டிலிருந்து எழுந்து தப்பிக்க முயன்றேன். ஆனால் அதற்குள் காயத்ரி என் உடலில் தீ வைத்துவிட்டார். இதனால் அலறி துடித்தேன். என் சத்தம் கேட்டு என்னைக் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். என் மகனுடன் காயத்ரி வாழவிரும்பவில்லை என்றதால்தான் அவனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்தேன். அதற்குதான் என்னை பழிவாங்கி விட்டாள் காயத்ரி" என்று கூறியுள்ளார். 

மகனுக்கு திருமணம் செய்து வைத்த ஆத்திரத்தில் முதல் மருமகள் மாமனாரை கொலை செய்த சம்பவம் நெமிலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.