க்ளியர் செய்ய மறந்த அதிகாரிகள்.. நள்ளிரவில் வந்திறங்கிய 20 இயந்திரங்கள்.. - சர்ச்சைக்கு ஈரோடு கலெக்டர் விளக்கம்! | erode collector kathiravan explains about 20 vvpat machine controversy

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (08/05/2019)

கடைசி தொடர்பு:19:55 (08/05/2019)

க்ளியர் செய்ய மறந்த அதிகாரிகள்.. நள்ளிரவில் வந்திறங்கிய 20 இயந்திரங்கள்.. - சர்ச்சைக்கு ஈரோடு கலெக்டர் விளக்கம்!

வாக்குப்பதிவு

தேனி தாலுகா அலுவலகத்துக்குப் புதிதாக 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்திறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைப்போலவே, ஈரோட்டுக்கும் 20 மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள் நேற்று நள்ளிரவு வந்ததாகப் பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், ‘ஈரோட்டுக்கு 20 விவிபேட் இயந்திரங்கள்தான் வந்தது என்றும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் எதுவும் வரவில்லை’ என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இருந்தாலும், ‘ஈரோட்டுக்கு விவிபேட் இயந்திரம் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது’ எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், ஈரோடு தொகுதியின் ஒருசில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவின்போது குளறுபடிகள் நிகழ்ந்ததாகவும், அங்கு மறுவாக்குப் பதிவு நடத்துவதற்காகத்தான் விவிபேட் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறினர். வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 20 நாள்களுக்கு மேலாகியுள்ள நிலையில், மறுவாக்குப்பதிவு நடத்த ஈரோடு கலெக்டர் அனுமதி கேட்டிருப்பதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோட்டுக்கு எதற்காக விவிபேட் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. ``எந்தெந்த பகுதிகளில் மறுவாக்குப் பதிவு நடைபெற இருக்கின்றன''  என்ற கேள்விகளை ஈரோடு கலெக்டர் கதிரவனிடம் வைத்தோம். ``ஈரோடு மக்களவைத் தொகுதியில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் (வாக்குச்சாவடி எண்: 238) ஒருசில தவறுகள் நடந்திருக்கின்றன. வாக்குப்பதிவுக்கு முன்பு அந்த வாக்குச் சாவடியில் அதிகாரிகள் மற்றும் கட்சிக்காரர்கள் செய்த 50 மாதிரி வாக்குகளை க்ளியர் செய்ய மறந்துவிட்டனர். இதனால், அவற்றோடு சேர்த்து மக்களுடைய வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன. 

வாக்குப்பதிவு

அதுமட்டுமல்லாமல், இந்த வாக்குச்சாவடியில் பதிவான மொத்த வாக்குகளோடு, டெஸ்ட் செய்த 50 மாதிரி வாக்குகளும் இருந்திருக்க வேண்டும். ஆனால், அதிலும் 9 வாக்குகள் குறைவாக இருந்தன. இந்தக் குளறுபடியால். அந்த ஒரு வாக்குச் சாவடியில் மறுபடியும் வாக்குப்பதிவு செய்ய வேண்டிய சூழல் உண்டானது. இதுசம்பந்தமாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறேன். அவரிடமிருந்து மறுவாக்குப் பதிவு நடத்துவது சம்பந்தமான எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை. எப்போது அறிவிப்பு வந்தாலும், வாக்குப்பதிவு செய்வதற்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவையான அளவு இருக்கின்றன, ஆனால், விவிபேட் இயந்திரங்கள்தான் இல்லை. எனவேதான் கோவையிலிருந்து முன்னெச்சரிக்கையாக அவற்றை வாங்கி வைத்திருக்கிறோம். மற்றபடி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை” என்றார்.

குளறுபடி நடைபெற்ற வாக்குச்சாவடியில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மொத்தம் 736 வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அழிக்காமல் விட்ட மாதிரி வாக்குகள் 50-ஐயும் சேர்த்தால், அந்த வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 786 என இருக்க வேண்டும். ஆனால், 777 வாக்குகள்தான் மொத்தமாகப் பதிவாகியிருக்கின்றன. இதில் 9 வாக்குகள் என்ன ஆனது என்று தெரியவில்லை. வாக்குப்பதிவு இயந்திரத்திலும் ஏதோ ஒரு கோளாறு நடந்திருக்கிறது என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.