இப்படியொரு மருத்துவமனையைக் கண்டிப்பா பார்த்திருக்கமாட்டீங்க.. மன்னார்குடி ஆச்சர்யம்#MyVikatan | Cardiologists Bharathi Selvan in Mannargudi creates a different atmosphere for his patients 

வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (08/05/2019)

கடைசி தொடர்பு:20:19 (08/05/2019)

இப்படியொரு மருத்துவமனையைக் கண்டிப்பா பார்த்திருக்கமாட்டீங்க.. மன்னார்குடி ஆச்சர்யம்#MyVikatan

பாரதி மருத்துவமனை

இந்தப் புகைப்படங்களை பாருங்கள். இது ஒரு மருத்துவமனை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. இங்கு வரும் நோயாளிகளுக்கு இது மருத்துவமனை என்ற எண்ணமே வராது.  நீண்ட நேரம் காத்திருந்தாலும் சலிப்பு தோன்றாது. மாமல்லபுரத்தில் இருப்பது போன்ற அழகிய கலைநயங்கள். பார்ப்பதற்குக் கற்களில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் போலவே இவை காட்சி அளிக்கின்றன. 
மருத்துவமனைகளில் வழக்கமாக இருக்கூடிய மருந்து நிறுவனங்களின் காட்சிப் படங்களோ, மருத்துவ வாசகங்களோ இங்கு இல்லை. ஆனால், நோயாளிகளின் கூட்டமோ அலைமோதுகிறது. ஏழை எளிய மக்கள், பெரும் பணக்காரர்கள், அரசியல் பிரபலங்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இங்கு சிகிச்சைக்கு வருகிறார்கள். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைந்துள்ளது இந்த அழகிய மருத்துவமனை. இதன் பெயர், `பாரதி இதயநோய் மருத்துவமனை’. 

பாரதி மருத்துவமனை
 

தமிழன்னையின் சிலை, நவீன மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரேட்டர்ஸின் சிலை ஆகியவை நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. இவை மட்டுமா ? இன்னும் நீள்கிறது வியப்பு. தமிழரோடு தமிழில் பேசுவோம். குழந்தைகளுக்குத் தமிழ் பெயர் சூட்டுவோம். கடவுளைத் தமிழில் வழிபடுவோம் என இங்கு எழுதப்பட்டுள்ள வாசகங்களை வேறு எந்த ஒரு அலோபதி மருத்துவமனையிலாவது நாம் பார்த்ததுண்டா. இந்த மருத்துவமனையின் உரிமையாளரும், பிரபல இதயநோய் மருத்துவருமான பாரதிச்செல்வன், இங்கு வரும் நோயாளிகளிடம் முழுக்க முழுக்க தமிழில்தான் பேசுகிறார். இவர் வேட்டி- சட்டையுடன் தோற்றமளிப்பது கூடுதல் சிறப்பு. 

பாரதி மருத்துவமனை
 

ஒளவையார், வள்ளலார், வேலுநாச்சியார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் படங்களும் இந்த மருத்துவமனையின் தனித்துவ அடையாளங்கள். ``சத்து டானிக், எதாவது எழுதிக் கொடுங்கள் டாக்டர்'' என  இவரிடம் நோயாளிகள் கேட்டால், ``காய்கறி, கீரை, பழங்கள், சிறுதானியங்கள் நிறைய சாப்பிடுங்கள். இதில்தான் நிறைய சத்துகள் இருக்கு. டானிக் எல்லாம் வேண்டாம்” எனச் சொல்வதோடு மட்டுமல்லாமல், எதில் என்னென்ன சத்துகள் இருக்கு எனத் துல்லியமாகப் பட்டியலிடுவார். குறைந்த கட்டணத்தில் மனிதநேயத்தோடு சிகிச்சை அளித்து, மக்களின் இதயத்தில் இடம்பிடித்ததால், மக்கள் மருத்துவர் என்ற அடைமொழியுடன் இவர் அழைக்கப்படுகிறார். 
ஆயுத பூஜையின்போது இங்குள்ள தமிழன்னை சிலை முன்பு, ஸ்டெதஸ்கோப், இ.சி.ஜி உள்ளிட்ட மருத்துவக் கருவிகளை வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். `இந்தக் கருவிகளை சிறப்பாகவும் துல்லியமாகவும் பயன்படுத்துவோம். பணியில் நேர்மையாகவும் நோயாளிகளிடம் அன்பாகவும் நடந்துகொள்வோம்' என இங்குள்ள பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பார்கள். 

பாரதி மருத்துவமனை
 

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நேரத்தில், நெருக்கடிக்கு ஆளான நோயாளிகளிடம் அப்போது பணம் வாங்கிக்கொள்ளாமல், ``எப்ப முடியுமோ அப்பக் கொண்டுவந்து கொடுங்க'' எனச் சொல்லி நெகிழவைத்தவர்.  மருத்துவத்துறையில் மட்டுமல்லாமல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், காவிரி உள்ளிட்ட போராட்டங்களிலும் தீவிரமாக இயங்கக்கூடியவர் மருத்துவர் பாரதிசெல்வன். இவரே வீதியில் இறங்கி நோட்டீஸ் கொடுப்பார். ``டாக்டரே நேரடியா வந்து நோட்டீஸ் கொடுக்குறாரு. எப்படி போகாமல் இருக்கிறது எனப் பலரும் போராட்டக் களத்துக்கு வந்துவிடுகிறார்கள்.