`வாக்குப்பதிவு இயந்திரங்களை இடமாற்றம் செய்தது ஏன்? - தேர்தல் பிரிவு டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா விளக்கம் | DGP for Tamil Nadu elections Ashutosh Shukla speaks about shifting EVMS

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/05/2019)

கடைசி தொடர்பு:21:04 (08/05/2019)

`வாக்குப்பதிவு இயந்திரங்களை இடமாற்றம் செய்தது ஏன்? - தேர்தல் பிரிவு டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா விளக்கம்

``தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியே வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டி இடமாற்றம் செய்யப்பட்டது. இது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது'' என தேர்தல் பிரிவு டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து, தேர்தல் பிரிவு டி.ஜி.பி அசுதோஸ் சுக்லா ஆய்வு மேற்கொண்டார். ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல்  பிரிவு டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து அவர்  செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் 132 இடங்களில் 257 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 63 பறக்கும்படை குழுக்கள், 27 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 71 இடங்களில் 73 வாக்குச்சாவடிகள் அங்கு நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், முந்தைய தேர்தல்களில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதன்  மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இத்தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்தொகுதிக்கு உட்பட்ட 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மூன்று கம்பெனி துணை ராணுவப் படையினர் காவல் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

அவரிடம் தேனியில் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டது குறித்து கேட்டதற்கு. ``தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. இதில் விதி மீறல்கள் எதுவும் இல்லை. இது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளனர்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க