இறந்தவர்களைச் சிரித்த முகத்துடன் அடக்கம் செய்யும் மக்கள்! - புதுக்கோட்டையில் ஓர் அதிசய கிராமம் #MyVikatan | Meivazhi Salai village which spreads true equality

வெளியிடப்பட்ட நேரம்: 21:19 (08/05/2019)

கடைசி தொடர்பு:12:15 (10/05/2019)

இறந்தவர்களைச் சிரித்த முகத்துடன் அடக்கம் செய்யும் மக்கள்! - புதுக்கோட்டையில் ஓர் அதிசய கிராமம் #MyVikatan

சாதி, மத பேதமில்லாத 'மெய்வழிச்சாலை' அதிசய கிராமம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. இங்கு சாதி, மத பேதம் யாரும் பார்ப்பதில்லை. கீரியும், பாம்புமாக எப்போதும் மோதிக்கொள்ளும் சாதிக்காரர்கள் இங்கு அண்ணனும், தம்பியுமாக, மாமனும் மச்சானாக, பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்து ஒன்றுகூடி வாழ்ந்து வருகின்றனர். புதுக்கோட்டை அருகே சித்தன்னவாசலுக்கு பக்கத்தில் இருக்கிறது மெய்வழிச்சாலை கிராமம்.

மெய்வழிச்சாலை கிராமம்

இந்தக் கிராமத்தில்தான் பல்வேறு ஆச்சர்யங்கள் கொட்டிக்கிடக்கிறது. கிராமத்துக்குள் நுழைந்தவுடன் பெரிய வாயிற் கதவு நம்மை வரவேற்கும். மெய்வழிச்சாலைக்குள் வெளியூர்க்காரர்கள் அவ்வளவு எளிதில் சென்றுவிட முடியாது. கிராமத்துப் பெரியவர்களின், கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூறி அதில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே கிராமத்துக்கு உள்ளே செல்ல முடியும்.

மெய்வழிச்சாலை கிராமம்

பணம் அதிகமாக இருந்தாலும், எந்த ஆடம்பரத்துக்கும் இவர்கள் இடம் கொடுப்பதில்லை. கிராமம் முழுவதும் எங்கும் நேர்த்தியான கூரைக்குடில்கள். வீடுகளில் மின்சார வெளிச்சம் கிடையாது. அனைவரும் மெய்வழி மதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். சிறுவர்கள் தொடங்கி முதியவர்கள் வரையிலும் அனைத்து தரப்பினரும் தலையில் எந்த நேரமும் வெள்ளை டர்பன் அணிந்திருக்கின்றனர். தலையில் டர்பன் அணியாமல் மறந்தும் இருப்பதில்லை. மெய்வழி மதத்தைத் தலைமுறை தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கின்றனர்.

மெய்வழிச்சாலை கிராமம் 

மெய்வழி மதத்தைப் பின்பற்றும் எந்தச் சமூகத்தினராக இருந்தாலும் அவர்களை தங்களோடு சேர்த்துக்கொள்கிறார்கள். இங்கு பசுமை போர்த்திய மரங்களுக்கு நடுவே பொன்னுரங்க தேவாலயம் இருக்கிறது. இன்றளவும், இங்குள்ள ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்து வெளியூரில் இருந்து பலரும் மெய்வழிச்சாலையை நாடி வருவதாகவும் கூறுகின்றனர்.

மெய்வழிச்சாலை கிராமம்

ஆண்களுக்கு, இணையாகப் பெண்கள் இங்கு நடத்தப்படுவதுதான் கூடுதல் ஆச்சர்யம். குறிப்பாக, மனிதனாகப் பிறந்த எல்லாருக்கும் இறப்புக்குப் பிறகு மறுபிறப்பு இருக்கிறது என்று தீர்க்கமாக இவர்கள் நம்புகின்றனர். அதனால்தான் இவர்கள் குடும்பத்தில் யார் இறந்து போனாலும், அழுவதே இல்லை. இடுகாடு வரையிலும் சென்று இறந்தவர்களைச் சிரித்த முகத்துடன் அடக்கம் செய்துவிட்டு வந்துவிடுகின்றனர். கணவனை இழந்த பெண்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை. கணவனை இழந்த பெண்கள் தாலியைக் கழட்டுவதில்லை. பூ பொட்டு வைத்துக்கொள்கின்றனர். கணவன் இறந்த பிறகும் இந்த ஊர் பெண்கள் தீர்க்கசுமங்கலியாகவே வாழ்கின்றனர்.