`முடிந்தால் பிடித்துப்பாருங்கள்!’ - விருதுநகர் காவல் துறையை கடுப்பேற்றும் இளைஞர் | Virudhunagar police search youth from border village for various crimes

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (08/05/2019)

கடைசி தொடர்பு:08:24 (09/05/2019)

`முடிந்தால் பிடித்துப்பாருங்கள்!’ - விருதுநகர் காவல் துறையை கடுப்பேற்றும் இளைஞர்

`முடிந்தால் என்னைப் பிடித்துப்பார்க்கட்டும்’ என விருதுநகர் மாவட்ட இளைஞர் ஒருவர், காவல் துறையினரைக் கடுப்பேற்றிவருகிறார்.

விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அம்மன்பட்டியைச் சேர்ந்தவர் அஜீத்குமார் (19). கொலை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ள இவர், கையில் ஆயுதத்தோடு சுற்றிக்கொண்டு, தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டுவருகிறார். `நான் இங்கேதான் இருப்பேன். முடிந்தால் என்னைப் பிடித்துப்பார்க்கட்டும்’ என காவல் துறையினருக்கே சவால்விட்டுவருகிறார். ஆனால், காவல் துறையினரால் பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ``கஞ்சா, மது எனப் போதைக்கு அடிமையான இவர், சிறுவயதிலிருந்தே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார். பெற்றோரும் இவரைக் கண்டுகொள்ளாமல் விட்டதால், இப்போது இவரின் வாழ்க்கையே மாறியுள்ளது. மாவட்டத்தின் எல்லையில் ஊர் அமைந்துள்ளதால், குற்றச் செயல்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆனால், ஊர்க்காரர்களும் காட்டிக்கொடுக்கத் தயாராக இல்லை. பயமா... சொந்தமா..? எது காரணம் எனத் தெரியவில்லை. திருச்சுழி மட்டுமின்றி கமுதி, மண்டலமாணிக்கம், மதுரை ஆகிய பகுதிகளிலும் கொலை, வழிப்பறி, திருட்டு என இவர்மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

விருதுநகர் எஸ்.பி மு.ராசராசன்

எப்போதும் போதையிலேயே இருப்பதாலும் இளவயது என்பதாலும், என்ன பேசுகிறோம் எனப் புரியாமல் பேசுகிறார். கையில் வாள் வைத்துக்கொண்டு மக்களை மிரட்டிச் செல்வதாகப் புகார்கள் வந்துள்ளன. தொடர்ந்து தேடிவருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசனிடம் கேட்டபோது, ``2015-ம் ஆண்டு முதல் இவர்மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. பலமுறை கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளார். குண்டர் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டுள்ளார். பைக்கில் செல்பவர்களை மிரட்டி, பைக்கைப் பறித்துச்செல்வதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். தற்போது, இவரைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தேடிவருகிறோம்’’ என்று தெரிவித்தார்.