`வசதிகள் போதுமானதாக இல்லை' - கேரள விருந்தினர் மாளிகைக்கு மாறிய சந்திரசேகர ராவ்! | Telingana CM visits kanyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2019)

கடைசி தொடர்பு:08:06 (09/05/2019)

`வசதிகள் போதுமானதாக இல்லை' - கேரள விருந்தினர் மாளிகைக்கு மாறிய சந்திரசேகர ராவ்!

கன்னியாகுமரி வந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தனியார் ஹோட்டலில் அரை மணி நேரம் தங்கியிருந்துவிட்டு, ஹோட்டல் பிடிக்கவில்லை எனக் கூறி கேரள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சந்திரசேகர ராவ்


தேர்தல் முடிவுகளுக்கு முன்பு மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். பல்வேறு  மாநில முதல்வர்களையும் எதிர்கட்சியினரையும் நேரில் சந்தித்து, மூன்றாவது அணிகுறித்து பேசிவருகிறார். இந்த நிலையில், நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தித்தார். இன்று, சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தனது குடும்பத்தினருடன் வந்தார். மாலையில், சூரிய அஸ்தமனத்தை குடும்பத்தினருடன் கண்டுகளித்தார். பின்னர், முக்கடல் சங்கமிக்கும் பகுதியைப் பார்வையிட்டார். நாளை காலை சூரிய உதய காட்சியைப் பார்த்துவிட்டு, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும், பின்னர் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் ராமேஸ்வரம் செல்வதாகவும் கூறப்படுகிறது.

சந்திரசேகர ராவ்

கன்னியாகுமரிக்கு தனது குடும்பத்தினர்களுடன் வந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர தங்கும் விடுதியில் அறைகள் ஓதுக்கப்பட்டன. அதிரடிப்படை வீரர்கள், ஜாமர்கருவி பொருத்தப்பட்ட வாகனம் என உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த  சந்திரசேகரராவ், கடற்கரைச் சாலையில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதியில் உள்ள வசதிகள் போதுமானதாக இல்லை எனக் கூறியிருக்கிறார். உடனே ஒட்டல் நிர்வாகம் முதல்வருடன் பேசி, ஏற்கெனவே தங்கிய வி.வி.ஐ.பி-க்களின் விபரத்தை எடுத்துகூறி, முதல்வரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், உங்களுக்காக என்னுடைய லைஃப் ஸ்டைலை விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு, அங்கிருந்து அரை மணி நேரத்தில் காலிசெய்துவிட்டு கடற்கரைச் சாலையில் உள்ள கேரள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். ரூம் பிடிக்கல என்று காரணங்கள் கூறினாலும் நக்சலைட் மிரட்டல் போன்ற காரணங்களால் பாதுகாப்பு கருதியே அறைகள் மாறியதாகவும் கூறப்படுகிறது. சந்திரசேகர ராவ் ஹோட்டல் அறை மாறிய சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.