‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு; ஆளும்கட்சிக்கு சேவை!’ - சந்தேகம் எழுப்பும் திருமாவளவன் | 'Serving the ruling party; Voting machines are misused! '- Thirumavalavan

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (09/05/2019)

கடைசி தொடர்பு:08:59 (09/05/2019)

‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு; ஆளும்கட்சிக்கு சேவை!’ - சந்தேகம் எழுப்பும் திருமாவளவன்

``‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடந்திருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஆளும்கட்சிக்கு சேவைசெய்யும் அமைப்பாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது’’ என திருமாவளவன் கடுமையாகச் சாடியிருக்கிறார்.


திருமாவளவன்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த தேவரிஷி குப்பம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘‘தேனி மாவட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் சர்ச்சைக்குரிய வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே மதுரையில் பெண் அதிகாரி ஒருவர் வாக்கு எண்ணிக்கை அறைக்குள் புகுந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஏதோ செய்துகொண்டிருந்ததாக புகார் எழுந்தது. தற்போது, தேனிக்கு சர்ச்சைக்குரிய முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டுள்ள தகவலை எதிர்க்கட்சிகள் புகாராகத் தேர்தல் ஆணையத்தில் கூறியிருக்கிறார்கள். இதற்கு, தலைமை தேர்தல் அதிகாரிதான் விளக்கமளிக்க வேண்டும். அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்.

மோடி தான் மீண்டும் பிரதமர் என்று அமித் ஷா உள்ளிட்டோர் திரும்பத் திரும்பச் சொல்வதன்மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் மூலம் தில்லுமுல்லு செய்ய முயற்சி செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுவாக எழுந்திருக்கின்றன. எனவே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு தள்ளிப்போடுகிறது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணிகுறித்து தெரிவிப்போம். தேர்தல் ஆணையம் என்பது ஆளும் கட்சிக்கு சேவைசெய்யும் அமைப்புதான். ஆளும் கட்சி விரும்புவதை நிறைவேற்றித் தரக்கூடிய ஒரு சேவை அமைப்பாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அந்த ஆணையம் எப்போது சுயமாகச் செயல்படுகிறதோ அன்றுதான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்’’ என்றார்.