`தர்மயுத்தம் என்றார்; பதவி வந்ததும் அமைதியாகிவிட்டார்’ - துணை முதல்வரை சாடிய திருநாவுக்கரசர் | thiruvanavukkarasar slams OPS in his campaign

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (09/05/2019)

கடைசி தொடர்பு:08:57 (09/05/2019)

`தர்மயுத்தம் என்றார்; பதவி வந்ததும் அமைதியாகிவிட்டார்’ - துணை முதல்வரை சாடிய திருநாவுக்கரசர்

``மக்கள் ஓட்டு போட்டு முதல்வரானவர்தான் ஜெயலலிதா. ஆனால், எம்.எல்.ஏ-க்கள் ஓட்டு போட்டு முதல்வர் ஆனவர்தான் எடப்பாடி பழனிசாமி. மோடி ஆட்சியுடன் தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியையும் அகற்ற வேண்டும்” என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வல்லநாட்டில், தி.மு.க தேர்தல் காரியாலயத்தைத் திறந்து வைத்தார் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர். தொடர்ந்து, தி.மு.க வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ``நாடாளுமன்றத் தேர்தல் முடிவிற்குப் பிறகு, கடந்த 5 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிவந்த மோடியின் ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது. தேர்தல் முடிவை நினைத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார் மோடி. ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் 1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ள மோடி, மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சனம்செய்கிறார். மோடியின் பேச்சை மக்கள் வெறுப்போடு பார்க்கிறார்கள். மோடி அகற்றப்படுவது உறுதியாகிவிட்டது.

பிரசாரம்

நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களின் முடிவு, தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர இருக்கிறது. தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத் தளபதிகளான வெள்ளையத்தேவன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோர் பிறந்தமண் இது. ஜெயலலிதாவை நம்பித்தான் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், எம்.எல்.ஏ-க்கள் ஓட்டு போட்டு ஆட்சிக்கு வந்தவர்தான் எடப்பாடி. அ.தி.மு.க-வில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், தினகரன் என மூன்று கோஷ்டிகளாகப் பிரிந்துகிடக்கிறார்கள். சட்டமன்றத்தில் இதில் எந்தக் கோஷ்டிக்கும் பெரும்பான்மை கிடையாது.

ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்து தர்மயுத்தம் செய்த பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் உள்ளது எனச் சொன்னவர், துணை முதல்வர் பதவி கிடைத்ததும் அமைதியாகிவிட்டார். பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரையும் டெல்லியிலிருந்து மோடி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார். இடைத்தேர்தல்களில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தால் ஜெயிக்கலாம் என எடைத் தேர்தல்களாக நினைக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். மத்தியில் மோடி அரசு அகற்றப்படுவது போல தமிழகத்தில் எடப்பாடி அரசையும் அகற்ற வேண்டும்” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க