`தி.மு.க-வுடன் கூட்டணியா?’- தங்க தமிழ்ச்செல்வன் கருத்துக்கு தினகரன் விளக்கம் | TTV Dinakaran campaign for by-election

வெளியிடப்பட்ட நேரம்: 10:07 (09/05/2019)

கடைசி தொடர்பு:11:46 (09/05/2019)

`தி.மு.க-வுடன் கூட்டணியா?’- தங்க தமிழ்ச்செல்வன் கருத்துக்கு தினகரன் விளக்கம்

சூலூர் இடைத்தேர்தல் அ.ம.மு.க வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து டி.டி.வி.தினகரன் பிரசாரம்

சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளரை ஆதரித்து, நேற்று இரண்டாவது நாளாக சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்தார், டி.டி.வி. தினகரன். எடப்பாடி பழனிசாமியையும் மோடியையும் விமர்சித்துப் பேசிய அவர், ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க-வுடன் கூட்டணி வைப்போம் என்று தங்க தமிழ்ச்செல்வன் பேசியதற்கு விளக்கம் கொடுத்தார்.

சூலூர் தொகுதியின் பல்வேறு இடங்களில் பேசிய டி.டி.வி.தினகரன், "நாங்கள் பதவி வெறிபிடித்தவர்கள் அல்ல. நான் நினைத்திருந்தால் அன்றே முதல்வராகியிருக்க முடியும். நாங்கள் எத்தனை பேரையோ முதல்வராக்கியிருக்கிறோம். எடப்பாடி பெரிய பில்கேட்ஸ்போல காதோடு மைக் மாட்டி வருகிறார். 23-ம் தேதி யாருக்கு சாவுமணி அடிக்கப்போகுது'னு பார்ப்போம்.

ஒரு எட்டப்பனைத்தான் நான் பார்த்திருக்கிறேன். இப்போது இரண்டு எட்டப்பன்களை நான் பார்க்கிறேன். அ.தி.மு.க-வில்  துரோகம் இருப்பதால்தான். நாங்கள் அ.தி.மு.க-வை எதிர்க்கவேண்டிய சூழல். அ.தி.மு.க அலுவலகத்தில் மோடி படத்திற்கு என்ன வேலை? அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்மந்தம்? தமிழகத்தைப் பிடித்துள்ள  துரோகக் கும்பலை துடைத்தெறியவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. 18 தொகுதி இடைதேர்தலிலும் எடப்பாடி பழனிசாமிக்கு டெபாசிட் காலியாகிவிடும். அவரின் துரோகத்தை தமிழக மக்கள்  ஏற்க மாட்டார்கள். ஜெயலலிதா எனது நண்பர்னு மோடி சொல்கிறார். ஆனால், மருத்துவமனையில் அம்மா அனுமதிக்கப்பட்டிருந்தபோது வந்து பார்த்தாரா? அந்த மோடியைத்தான் இவர்கள் தங்கள் 'டாடி' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் முதலமைச்சரில் ஆரம்பித்து அமைச்சர்கள் வரை எல்லோரும் வளையல் போடுவதுபோல கையெல்லாம் கயிறு கட்டியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு பயம். 

சூலூர் இடைத்தேர்தல் அ.ம.மு.க வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து டி.டி.வி.தினகரன் பிரசாரம்

ஜெயலலிதா இருக்கும்போது, விவாசாயிகளைப் பாதிக்கின்ற எந்தத் திட்டத்தையும் அனுமதித்தது கிடையாது. ஆனால், இப்போது அப்படியா... ஜெயலலிதா நீட் தேர்வை எதிர்த்தார். ஆனால், இவர்கள் நீட் தேர்வை அனுமதித்துவிட்டார்கள். மோடிக்கு பயந்து விவசாயிகளுக்கு  எதிரான திட்டங்களைக் கொண்டுவந்துள்ளனர். ஜிஎஸ்டி யால் பெரும்பாலான தொழில்கள் நசுங்கியிருக்கின்றன. மோடியுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி, சட்டம் ஒழுங்கை கவனிக்கவில்லை. இதற்கு உதாரணம்தான் பொள்ளாச்சி சம்பவம். 

ஜெயலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்கக் கூடாது என்று சொன்ன தே.மு.தி.க-வுடனும், ஜெயலலிதாவை குற்றவாளி என்று சொன்ன பா.ம.க-வுடனும்  கூட்டணி வைத்துள்ளார்கள். ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தினால், மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார், எடப்பாடி பழனிசாமி. அவரை இப்போது எல்லோரும் நோட்டீஸ் பழனிசாமி என்றுதான் சொல்கிறார்கள். முதல்வர் பதவியில் அமரவைத்த சசிகலாவுக்கு தூரோகம் செய்தவர்கள், எப்படி மக்களுக்கு நன்மை செய்வார்கள்? 

இந்த ஆட்சியைத் தூக்கி எறிவதற்கு நல்ல நேரம் வந்துள்ளது. ஒரு ஆட்சிக்கு முடிவுகட்டுவதற்குத்தான் கூட்டணி. தங்க தமிழ்ச்செல்வன் என்ன சொன்னார்... நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க-வும் சேர்ந்துதான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும் என்று எதார்த்தத்தை சொன்னார்.  நாங்கள் தி.மு.கவுடன் கூட்டணி என்று சொல்வது. அவர்கள் சொல்வதுபடி பார்த்தால், ஒரு ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதற்காகத்தான் கூட்டணி.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆனைமலை- நல்லாறு திட்டம் கொண்டு வரப்படும். சம்பந்திகளுக்கும் மாமன், மைத்துனர்களுக்கும் கான்ட்ராக்ட்  கொடுக்க மாட்டோம். அதுவும் விவசாயத்தை அழித்து 10,000 கோடி திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம்" என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க