வண்டலூர் பூங்காவில் வெளிநாட்டு மரங்கள்... நாட்டு மரங்களுக்கு ஆபத்தா?! | Exotic plants invading Vandalur zoo poses risk to native plants

வெளியிடப்பட்ட நேரம்: 09:42 (09/05/2019)

கடைசி தொடர்பு:09:42 (09/05/2019)

வண்டலூர் பூங்காவில் வெளிநாட்டு மரங்கள்... நாட்டு மரங்களுக்கு ஆபத்தா?!

சென்னையைச் சுற்றிப் பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்படுகின்றன. புயல், சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது அவற்றால் ஏன் தாக்குப்பிடித்து நிற்கமுடிவதில்லை? ஏனென்றால், அவை இந்த நிலவியல் அமைப்பில் நன்றாக வளர்ந்தாலும் அவை இந்த மண்ணோடு அவ்வளவு சிறப்பான உறவுகொண்டிருப்பதில்லை.

வண்டலூர் பூங்காவில் வெளிநாட்டு மரங்கள்... நாட்டு மரங்களுக்கு ஆபத்தா?!

ண்டலூர் பூங்காவை ஆக்கிரமிக்கும் வெளிநாட்டுத் தாவரங்கள் பற்றிய பிரச்னைக்குள் போகும்முன் அயல் தாவரங்கள், இயல் தாவரங்கள் போன்ற பதங்களைப் பற்றிய ஒரு புரிதலுக்கு வருவோம்.

மனிதர்களை அயல் நாட்டான், உள் நாட்டான் என்று வேறுபடுத்துவதுபோல் மற்ற உயிரினங்களையும் தாவரங்களையும் எப்படி உங்களால் வகைப்படுத்த முடிகிறது? மனிதர்களுக்குத்தான் நாடுகளும் எல்லைகளும். காட்டுயிர்களுக்கோ தாவரங்களுக்கோ அந்த எல்லைகளே கிடையாது. அவற்றைப் பொறுத்தவரை எல்லை நிர்ணயிக்கப்படுவது அவை வாழ்வதற்குத் தகுந்த சூழல் நிலவும் நிலவியலைப் பொறுத்தே அமைகின்றன. ஓர் உயிரினமோ தாவரமோ எப்போது நன்றாக வளரத் தொடங்கும். அதற்கு உகந்த தட்பவெப்பநிலை, நிலவியல் அமைப்பு, உணவு கிடைப்பதற்கான சூழல் போன்றவை இருந்தால் அவற்றின் இருப்பு செழித்தோங்கும். அப்படியிருந்தும் அந்த மாதிரியான சூழலில் வளரும் சில உயிரினங்களையும் தாவரங்களையும் நாம் ஆக்கிரமிப்புத் தாவரங்களாகவும் அயல் தாவரங்களாகவும் கூறுகிறோம். இங்குதான் குழப்பங்கள் எழுகின்றன. ஏன் ஒரு தாவரத்தை அயல் தாவரமென்று அந்நியப்படுத்த வேண்டும்? எப்போது அத்தகைய அயல் தாவரம் ஆக்கிரமிப்புத் தாவரமாக மாறுகின்றது?

சென்னையைச் சுற்றிப் பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்படுகின்றன. புயல், சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது அவற்றால் ஏன் தாக்குப்பிடித்து நிற்கமுடிவதில்லை? ஏனென்றால், அவை இந்த நிலவியல் அமைப்பில் நன்றாக வளர்ந்தாலும் அவை இந்த மண்ணோடு அவ்வளவு சிறப்பான உறவுகொண்டிருப்பதில்லை. உள்ளூர் தாவரங்கள் மண்ணோடு கொண்டிருக்கும் பிடிப்பு அவற்றிடம் இருப்பதில்லை. இதனால், வேர்களில் நிலத்தோடு உறுதியான பிடிமானமின்றிச் சாய்ந்துவிடுகின்றன. அத்தகைய அயல் தாவரங்களால் நமக்கும் சூழலுக்கும் எந்தவிதப் பயனும் இருக்கப் போவதில்லை. அதோடு இவை இந்த நிலத்தில் வாழும் பறவைகள், தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் போன்ற தாவரம் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு எந்தவிதப் பயனையும் அளிக்காது. 

தாவரங்கள்

இந்த அயல் தாவரங்கள் எப்போது ஆக்கிரமிப்புத் தாவரங்களாக மாறுகின்றன? இந்த மண்ணுக்குப் பொருந்தாத தாவரத்தை வளர்க்கையில் அது எந்தவிதப் பயனையும் தராததோடு மட்டுமன்றி, அவை விரைவாக வளர்வதாகவும் அதிகமான மண் மற்றும் நீர்ச் சத்துகளை உறிஞ்சுவதாகவும் இருந்தால்...!

இயல் தாவரங்கள் வளர்வதைவிட விரைவாக வளர்வதாகவும் அதிகச் சத்துகளை உறிஞ்சுவதாகவும் அயல் தாவரம் இருந்தால், அது உள்ளூர் தாவரங்களுக்குப் போதுமான ஊட்டச்சத்துகளையும் எடுத்துக்கொள்ளும். அதனால், இயல் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுக் காலப்போக்கில் இவற்றின் சத்துகளையும் உறிஞ்சிய அயல் தாவரம்தான் அவை இருந்த இடமெங்கும் காட்சியளிக்கும். நிலத்துக்குரிய தாவரங்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி அல்லது அழித்து தம்மைப் பரவலாக்கிக் கொள்ளும் அயல் தாவரங்கள் ஆக்கிரமிப்புத் தாவரமாக மாறுகின்றன. 

இப்போது வண்டலூர் பூங்காவிற்கு வருவோம். ஓர் அயல் தாவரம் ஆக்கிரமிப்புத் தாவரமாக மாறுவது சில சமயங்களில் இயற்கையாகவும் பல சமயங்களில் செயற்கையாகவும் நடைபெறுகின்றன. அயல் தாவரங்களால் இங்கு வாழும் உயிரினங்கள் எதற்கும் பயன் விளையாது. அவை பெரும்பாலும் அழகான வண்ணமயமான பூக்களுக்காகவும், அழகான தோற்றத்திற்காகவும் வளர்க்கப்படுகின்றன. அந்த மாதிரியான அயல் தாவரங்களின் வருகை சமீபகாலங்களில் சென்னையின் முக்கிய வனப்பகுதியான வண்டலூர் பூங்காவில் அதிகரித்துள்ளது.

வண்டலூர் பூங்காவில் மகாகனி (Mahogany), சொர்க்க மரம் (Paradise Tree), பத்தோடியா (African Tulip tree), பூவிளம்பி (Fijian Logan) போன்ற வெளிநாட்டு மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. இதுபோல் வளர்க்கப்படும் மரங்களில் பெரும்பாலானவை நிழல் தரும் மரங்கள்கூட கிடையாது. வண்டலூர் நடைபாதைகளில் இத்தகைய சுமார் இருநூறு வெளிநாட்டு அயல் தாவரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. பத்தோடி என்றழைக்கப்படும் ஆப்பிரிக்க துலிப் மரங்கள் பல இடங்களில் தோட்டத் தாவரங்களாகவும் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன. இதனால், உள்ளூர்த் தாவரங்கள் வளர்வது தடுக்கப்படுகிறது. இயல் தாவரங்களின் இடத்தை இவை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. டபேபியா ரோசியா என்றழைக்கப்படும் மர வகை அமெரிக்காவைச் சேர்ந்தது. இது நிழல்கூடத் தருவது கிடையாது. இதன் பயனென்று பார்த்தால், நடைபாதைகளில் பிங்க் நிறத்தில் அழகான பூக்களோடு தோற்றப்பொலிவோடு காட்சியளிக்கும். மகாகனி என்ற மர வகை, ஆப்பிரிக்காவிலிருந்து வெட்டுமரமாகக் கொண்டுவரப்பட்டது. ஆப்பிரிக்க துலிப் மரக் குடும்பத்தைச் சேர்ந்த நைல் துலிப் என்ற மர வகை பிரகாசமான மஞ்சள் நிறப்பூக்களைக் கொண்டது. மேலும் இதுபோன்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மரங்கள் வண்டலூர் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. அதோடு இவை அங்கிருக்கும் நர்சரிகளிலும் விற்பனைக்கு உள்ளன.

வண்டலூர் பூங்கா

மகாகனி (Mahogany)

காடுகளைப் பொறுத்தவரை மனிதக் கால்தடம் படாத பகுதிகள் என்று சில இருக்கும். அவை, இயற்கையான சூழலைத் தன்னுள் பாதுகாத்து வைத்திருக்கும். அதுமாதிரியான பகுதிகள் வண்டலூரிலும் உள்ளன. அத்தகைய வனப்பகுதியில் இப்படியான அயல் தாவரங்களை வளர்த்து வைக்கிறோம். அதை ஏதாவது உயிரினம் கொண்டுசென்று காட்டுக்குள் போட்டுவிட்டால், அங்கும் அவை முளைக்கும். அங்கும் அவற்றின் பரவல் தொடங்கிவிடும். உதாரணத்திற்கு, ஒருவேளை ஏதேனும் ஒரு பறவை தற்செயலாகப் பத்தோடியா என்ற ஆப்பிரிக்க மரத்தின் விதையைக் கொண்டுசென்று போட்டுவிட்டால், காட்டுக்குள்ளும் பத்தோடியாவின் இனப்பெருக்கம் தொடங்கிவிடும். அது அங்கிருக்கும் இயல் தாவரங்களை அழித்து பரவத் தொடங்கும். இது அந்நிலப்பகுதியின் தாவரப் பன்மையையே பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானது.

வண்டலூர் பூங்காவில் அதிகரித்துவரும் அயல் தாவரங்களின் எண்ணிக்கை குறித்துப் பல சூழலியல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சூழலியல் ஆர்வலர், வண்டலூர் வனத்துறையிடம் அயல் தாவரங்கள் குறித்துப் புகார் தெரிவித்திருந்தார். அதற்கு, ``வர்தா புயலுக்குப் பிறகு சுமார் இருபதாயிரம் நாட்டு மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும் அயல் தாவரங்கள் அழகுக்காக வளர்க்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை நீக்கவேண்டியதில்லை என்பதால் நடவடிக்கை தேவையில்லை" என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் தாவரங்களைப் பாதுகாக்கும் பெட்டகமாகவும், கடலோரக் காடுகளான உலர்ந்த பசுமைமாறாக் காடாகவும் செயல்படவேண்டிய வண்டலூர் பூங்கா. அதன் முதன்மையான முக்கியமான பணி, நாட்டு மரங்களையும் உயிரினப் பன்மையையும் பாதுகாக்க வேண்டியதே. அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சுற்றுலாத் துறை முன்னேற்ற நோக்கத்தில் மட்டுமே செயல்படுவது வேதனையளிக்கிறது. தமிழகத்தின் இயல் தாவரங்களிலேயே அழகான பூக்களைக் கொண்ட பல மூலிகைப் பயன்களையுடைய மரங்கள் இருக்க, அயல் தாவரங்களுக்கான தேவை அங்கே ஏன் வருகின்றது. அவற்றால் ஏற்படும் சிக்கல்கள் குறித்த புரிதலின்மையையே இது காட்டுகின்றது. வண்டலூர் வன மேலாண்மையில் ஆய்வாளர்களின் பங்குக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இதுமாதிரியான புரிதலின்மையைத் தவிர்த்திருக்கலாம்.

வண்டலூர் பூங்கா

சொர்க்க மரம் (Paradise tree)

வண்டலூர் பூங்காவில் வளர்க்கப்பட்டிருக்கும் தாவரங்கள் அங்கு பரவுவது மட்டுமன்றி, வருகை தரும் பார்வையாளர்களால் மற்ற இடங்களுக்கும் பரவுகின்றன. வண்டலூருக்கு வருகை தரும் ஒரு பார்வையாளர், அங்கிருக்கும் அயல் தாவரத்தின் அழகால் ஈர்க்கப்பட்டு அதை அங்கிருக்கும் நர்சரியிலேயே வாங்கிச் சென்று தாம் வாழும் பகுதிகளிலும் வளர்க்கிறார். அதன்மூலம் அந்த மரங்கள் அங்கும் பரவுகின்றன. அதோடு, இதுமாதிரியான தேசியப் பூங்காக்களில் இப்படியான மரங்களைப் பார்க்கும் பலரும் அதை நாட்டு மரமென்று தவறாகப் புரிந்துகொண்டும் பல இடங்களில் நடுகின்றனர். இப்படியாக ஒருசிலரின் புரிதலின்மை இத்தகைய தவறான புரிதலுக்கும் வழிவகுக்கின்றன. இயல் தாவரங்களின் வளர்ச்சியில் அயல் தாவரங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துத் தாவரவியல் ஆய்வாளர் கு.வி.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது,

தாவரவியலாளர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி``எனக்குத் தெரிந்து மூலிகைத் தாவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல் தெரியவில்லை. சென்னையைச் சுற்றி இப்போதே அயல் தாவரங்கள்தான் பல இடங்களில் வளர்க்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் நன்கு பிரகாசமான அழகு மிகுந்த மரங்களாகவே வளர்க்கப்படுகின்றன. அயல் தாவரங்களால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படுமென்று இதுவரை அறிவியல்பூர்வ ஆய்வுகள் முழுமையாக நடத்தப்படவில்லை. ஆனால், அயல் தாவரங்களை வைப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவை இந்த நிலவியல் அமைப்புக்குத் தாக்குப்பிடித்து நிற்பதில்லை. சின்ன புயல் அடித்தாலும் வேரோடு சாய்ந்துவிடும். வர்தா புயலின்போது சென்னையில் வீழ்ந்துகிடந்த பெரிய மரங்களில் பெரும்பாலானவை அயல்நாட்டுத் தாவரங்களே. உதாரணமாகப் பல இடங்களில் நாம் பார்க்கக்கூடிய குல்முஹர் என்ற மரம். அடர்ந்த ஆரஞ்சு நிறத்தில் இலைகளைவிட அதிகமான பூக்களோடு இருக்கும். இது வேகமாகச் சூறாவளிக் காற்று அடித்தாலே விழுந்துவிடும். 

நம்முடைய கிழக்குக் கடலோரங்களில் இந்தியாவுக்கே உரித்தான குறிப்பிட்ட காடுகள் இருக்கின்றன. அவைதாம் உலர்ந்த பசுமைமாறாக் காடுகள். அதாவது இலையுதிர் காலத்திலும் இலைகளை உதிர்க்காமல் பசுமையாகவே காட்சியளிக்கக்கூடிய காடுகள். இந்தக் காடுகளில் வளரும் தாவரங்கள் நம் மண்ணுக்குப் பழக்கப்பட்டவை. அவற்றை நட்டு வளர்த்தால் எவ்வளவு புயல் அடித்தாலும் தாக்குப்பிடித்து நிற்கும், நின்றிருக்கிறது. கடுமையான காற்றடித்தாலும் கிளைகள்தான் முறியுமே தவிர மரம் சாயாது. அதேசமயம் அவை கோடைக்காலத்திலும் நமக்கு நல்ல நிழல் மற்றும் குளிர்ச்சியைத் தரும். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகப் புன்னை மரங்களைச் சொல்லலாம். அவை ஆழமாக வேரூன்றி மண்ணை இறுக்கமாகப் பிடித்து வைக்கிறது. அழகான மலர்கள் பூக்கின்றன. பல மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன. இது சென்னை நிலப்பரப்புக்கு உகந்த மரம். இந்தத் திறன் அயல் தாவரங்களுக்குக் கிடையாது, மொத்தமாகச் சாய்ந்துவிடும். வண்டலூர் பூங்காவிலும் இருக்கும் அயல் தாவரங்கள்கூட இந்தச் சிக்கல்களுக்கு விதிவிலக்கல்ல. அவற்றையும் அகற்றிவிட்டு அங்கு உலர்ந்த பசுமைமாறாக் காடுகளுக்கான மரங்களை வளர்ப்பதே நல்லது. அங்கு இன்னொரு முரணும் உள்ளது. மக்கள் நாட்டு மரங்களிடமிருந்து விலகிவிட்டார்கள். அவர்களுக்கு நாட்டு மரங்களைப் பற்றித் தெரிவதில்லை. அயல் தாவரங்களின் மீதான ஈர்ப்புதான் இதற்குக் காரணம். அதைச் சரிசெய்யவும் போதுமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

அயல் தாவரங்கள்

ஆப்பிரிக்க துலிப் மரத்தின் மலர்

2017-ம் ஆண்டின் கணக்குப்படி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே 110 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய காடுகளை ஆக்கிரமிப்புத் தாவரங்களால் ஆக்கிரமித்துள்ளன. கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயல் தாவரங்கள் ஏற்கெனவே அயல் தாவரங்களால் வாழ்விடத்தை இழந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் நம் நிலத்தின் தனித்தன்மை வாய்ந்த உலர்ந்த பசுமைமாறாக் காடுகளும் அவற்றின் இயல்பை இழந்துகொண்டிருப்பது ஆபத்தானது. இயல் தாவரங்கள் நம் சூழலைப் பாதுகாப்பதிலும் இயற்கைப் பேரிடர்களின்போது பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகின்றன. அவை தரும் பலன்களையும் அவற்றின் தேவைகளையும் நாம் உணரவேண்டும். வனத்துறை இதையுணர்ந்து அயல் தாவரங்களையும் நீக்கவும் அந்த இடங்களுக்கு இயல் தாவரங்களைக் கொண்டுவரவும் உரிய நடவடிக்கைகளையும் விரைவில் எடுக்கவேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்