`சங்கத்தின் பணம் 20 கோடி எங்கே?’- கணக்குக் கேட்ட உறுப்பினருக்கு அ.தி.மு.கவினரால் நடந்த துயரம் | 'where is association's 20 crore rupees!' - question raised association member attacked by admk persons

வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (09/05/2019)

கடைசி தொடர்பு:11:13 (09/05/2019)

`சங்கத்தின் பணம் 20 கோடி எங்கே?’- கணக்குக் கேட்ட உறுப்பினருக்கு அ.தி.மு.கவினரால் நடந்த துயரம்

அ.தி.மு.க.வினரால் தாக்கப்பட்ட சங்க உறுப்பினர்

ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் சங்கக் கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் மீது ரூ.20 கோடி முறைகேடு செய்தது குறித்து விளக்கம் கேட்ட சங்க உறுப்பினரை, அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மார்க்கெட்டில் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தில் சங்கத்தின் தலைவராக அ.தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி பி.பி.கே.பழனிச்சாமி என்பவரும், செயலாளராக முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் முருகசேகரும், பொருளாளராக வைரவேல் என்பவரும் இருந்து வருகின்றனர். இந்தச் சங்கத்தில் சங்க உறுப்பினர்களாக மொத்தம் 807 பேர் உள்ளனர். இந்தச் சங்கத்தில் ரூ.20 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாகச் சங்க உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்திருந்தனர். இதற்காக நேற்று ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் தலைவர் பி.பி.கே. பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கணக்கு ஒப்படைக்கும் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு எஸ்.பியிடம் புகார் அளிக்க வந்த ராமமூர்த்தி

இந்தக் கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள் சங்க வியாபாரிகளுக்காக வாங்கிய இடத்தின் பத்திர நகல், சங்க வங்கிக் கணக்கின் பேங்க் ஸ்டேட்மென்ட், மார்க்கெட் குத்தகைக் கணக்கு, சங்க உறுப்பினர்களுக்கு மாத வட்டி கணக்கு, ஈரோடு பெரியமாரியம்மன் தீர்த்த நன்கொடையின் 5 ஆண்டு கணக்கு, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பில் வசூல் செய்த கணக்கு ஆகியவற்றைக் கேட்டனர். இதில், சங்கத்தினுடைய கணக்கு வழக்கினைக் கேட்ட சங்க உறுப்பினரான தக்காளி மண்டி உரிமையாளர் ராமமூர்த்தி என்ற தர்மபுரியான் (58) என்பவரை அவரது கடைக்கு சென்று சங்க தலைவரின் மகன்கள் சிலர் அடித்து உதைத்துள்ளனர்.

 இதனையடுத்து பாதிக்கப்பட்ட ராமமூர்த்தி கிழிந்த சட்டையுடன் ஈரோடு எஸ்.பியிடம் புகார் அளிக்க வந்தார். இதுகுறித்து  ராமமூர்த்தி கூறுகையில், ``சங்க பொதுக்குழு கூட்டத்தில் சங்கக் கணக்கு கேட்டதற்கு சங்கத் தலைவரின் மகன்களான மணிகண்டன், ஹரி, வினோத், தலைவரின் மச்சான் ஜெகதீஸ்வரன் ஆகியோர் என்னை அடித்து உதைத்து, சட்டையைக் கிழித்தனர். மேலும் என்னையும் எனது மகன்களையும் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அவர்களிடமிருந்து தப்பித்து எஸ்.பி அலுவலகத்திற்கு ஓடி வந்து விட்டேன். எனக்கும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளித்து, என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சங்க வரவு செலவுகள் கணக்கு தற்போது வரை முறையாகத் தரப்படவில்லை. சங்கத்தில் ரூ. 20 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இதையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.