தேர்தல் ரிசல்ட்டுக்குப் பின் இந்த ஆட்சி முடிந்துவிடுமா? - ராமேஸ்வரத்தில் தரிசனம்செய்த தம்பிதுரை பதில் | The ADMK government will continue even after the election result

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (09/05/2019)

கடைசி தொடர்பு:14:00 (09/05/2019)

தேர்தல் ரிசல்ட்டுக்குப் பின் இந்த ஆட்சி முடிந்துவிடுமா? - ராமேஸ்வரத்தில் தரிசனம்செய்த தம்பிதுரை பதில்

``பெரியார்,  அண்ணா  வழி வந்த திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிதான் அ.தி.மு.க. அதன் ஆட்சியை யாராலும் அகற்ற முடியாது'' என்று ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம்செய்த பின் தம்பிதுரை தெரிவித்தார்.

ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த தம்பிதுரை
 

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம்செய்ய வந்திருந்தார். கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடிய பின்னர், சுவாமி - அம்பாள் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''பெரியார், அண்ணா வழியில் வந்த திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சிதான் அ.தி.மு.க. அத்தகைய அ.தி.மு.க-வின் ஆட்சி அம்மாவின் ஆட்சியாக நடந்துவருகிறது. இந்த  நிலையான ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஒ.பி.எஸ்ஸும் சிறப்பாக வழிநடத்திவருகிறார்கள். மக்கள், இரட்டை இலை, ஆட்சி என எல்லாம் எங்கள்பக்கம் இருக்கையில், இந்த ஆட்சியை யாராலும் அகற்ற முடியாது. அம்மாவுக்குத் துணையாக பல்வேறு நிலைகளில் பணியாற்றியவன் நான். மக்கள் கொடுத்த அம்மாவின் ஆட்சிக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. அதனை முழுமையாக நிறைவுசெய்வதுடன், அடுத்து வரும் தேர்தலிலும் வென்று அ.தி.மு.க-வின் ஆட்சியே நீடிக்கும்.

நாடாளுமன்றத் தேர்தலில், 40 இடங்களிலும் இடைத்தேர்தல் நடைபெறும். அனைத்துத் தொகுதிகளிலும் நாங்கள் முழு வெற்றி பெறுவோம். வாக்கு இயந்திரங்களை இடமாற்றம் செய்வது வழக்கமானது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதைத் தவிர்த்து அந்த விசயத்தில் எந்த மாயாஜாலமும் நடப்பதாக நான் நினைக்கவில்லை. தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படும் கட்சியாக அ.தி.மு.க இருக்கும். சிலர் அரசியல் செய்வதற்காகவும், விளம்பரம் தேடிக்கொள்வதற்காகவும் இந்த ஆட்சி முடிந்துவிடும் எனச் சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன்'' என்றார்.