விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம்? | Special Schools drop out strength increased in Virudhunagar district

வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (09/05/2019)

கடைசி தொடர்பு:17:51 (09/05/2019)

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம்?

"மாணவர்களின் எண்ணிக்கைக் காரணம்காட்டி குமாரலிங்கபுரம், மம்சாபுரம், மொட்டமலை, தமிழ்பாடி ஆகிய நான்கு இடங்களில் இருந்த சிறப்பு மையங்களைத் திட்ட அலுவலர் திடீரென மூடிவிட்டார். இதனால் இந்த மையங்களில் கல்வி பயின்ற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது."

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம்?

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வந்த நான்கு சிறப்புப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்து, அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டமாகும். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் 1987-ம் ஆண்டு இங்கே சிறப்புப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்தியா முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்குக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சிவகாசி வட்டாரத்தில் 10, சாத்தூர் வட்டாரத்தில் 4, அருப்புக்கோட்டை வட்டாரத்தில் ஒன்று, ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில் ஒன்று, ராஜபாளையம் வட்டாரத்தில் ஒன்று உட்பட மொத்தம் 22 தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகள் (மையங்கள்) செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் 9 முதல் 14 வயது வரையுள்ள மாணவர்கள் 540 பேர் படித்து வருகின்றனர். இரண்டு களப்பணியாளர்கள் உட்பட 75 பணியாளர்கள் இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். மாணவர்களுக்கு மாதம்தோறும் அரசு ரூ.400 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

பள்ளி இடைநிற்றல்

இந்நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக் காரணம்காட்டி குமாரலிங்கபுரம், மம்சாபுரம், மொட்டமலை, தமிழ்பாடி ஆகிய நான்கு இடங்களில் இருந்த சிறப்பு மையங்களைத் திட்ட அலுவலர் திடீரென மூடிவிட்டார். இதனால் இந்த மையங்களில் கல்வி பயின்ற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இப்படியிருந்தால் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்கிறார்கள் அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள்.

இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கூறும்போது, "23.07.2013 முதல் நாராயணசாமி என்பவர் திட்ட இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார். அவர் பதவியேற்றதிலிருந்து போலி பில் மூலம் முறைகேடு, நிதி கையாடல் போன்ற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன. தனக்கு வேண்டப்பட்ட ஊழியர்களை ஒரு மாதிரியும், பிற ஊழியர்களை வேறு மாதிரியாகவும் நடத்துகிறார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தொழிலாளர் துறை ஆணையருக்கு நாராயணசாமியின் முறைகேடுகள் குறித்து புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கடந்த 6 மாதங்களாக, அந்த மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை. வாடகை கட்டடங்களுக்கு வாடகையும் செலுத்தவில்லை.

மையம்

தற்போது மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் கூறி நான்கு மையங்கள் மூடப்பட்டுள்ளன. வழக்கமான மாணவர்களைப்போல சிறப்புப் பள்ளி மாணவர்களை நாம் கருத முடியாது. இங்கே பயிலும் மாணவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இங்கு பயிலும் மாணவர்களின் உழைப்பை நம்பி அந்தக் குடும்பம் உள்ளதால் அந்த மாணவர்கள் அவ்வப்போது வேலைக்கும் செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த மாணவர்களை வீட்டுக்குச் சென்றே நாங்கள் அழைத்து வருவோம். 'தினந்தோறும் அவர்கள் பள்ளிக்கு வருவார்கள்' என எதிர்பார்க்க முடியாது. இதுபோன்ற எதார்த்தங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சராசரியாக 15 மாணவர்கள்வரை தினமும் மையத்துக்கு வந்துகொண்டுதான் இருந்தனர்.

நாராயணசாமிஆனால், ஒருமுறை மட்டுமே வந்து பார்வையிட்டுச் சென்ற அதிகாரி, மாணவர்களின் எண்ணிக்கைக் குறைவாக இருப்பதாகக் கூறி 4 மையங்களை மூடிவிட்டார். இப்போது இங்கே பயிலும் மாணவர்கள் எங்கே செல்வார்கள்? மீண்டும் வேலைக்குத்தான் செல்வார்கள். இதனால் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். குமாரலிங்கபுரத்தில் மையம் தொடங்கி 5 மாதம்தான் ஆகிறது. அதற்குள் மூடிவிட்டனர். மொட்டமலையில் உள்ள மையத்தில் படிப்பவர்கள் நரிக்குறவர் இன மாணவர்கள். இப்போது அந்த மையங்களை மூடினால் அவர்கள் எங்கே செல்வார்கள்? இந்த மையங்களுக்குத் தேர்வு விடுமுறை எல்லாம் கிடையாது. ஆனால், மாணவர்களின் பெற்றோரிடம் தற்போது விடுமுறை எனச் சொல்லி வைத்துள்ளோம்" எனத் தெரிவித்தனர்.

இதுகுறித்து திட்ட அலுவலர் நாராயணசாமியிடம் கேட்டபோது, "சிறப்புப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் அரசு ரூ.400 உதவித்தொகை வழங்குகிறது. ஒரு மையம் இரண்டு ஆண்டுகள்தான் இருக்கும். ஒரு மாணவன் இரண்டு ஆண்டுகள் மட்டும்தான் இந்த மையத்தில் படிக்க முடியும். அடுத்து அவர்களைப் பள்ளியில் சேர்த்துவிடுவோம். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் வேறு ஒரு இடத்தில் மையத்தைத் தொடங்குவோம். விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 100 மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு மையத்தில் குறைந்தது 15 மாணவர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது மூடப்பட்டுள்ள 4 மையங்களிலும் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் அந்த மையங்களை மூடியுள்ளோம்" என்றார்.

இதுகுறித்து கருத்து கேட்பதற்காக மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்தை நேரிலும் தொலைபேசியிலும் பலமுறை தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால், அவர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.


டிரெண்டிங் @ விகடன்