`யானைகளை அனுப்ப மாட்டோம்'- களையிழக்குமா புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழா? | Elephant Owners Threaten to Boycott Festivals in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (09/05/2019)

கடைசி தொடர்பு:15:40 (09/05/2019)

`யானைகளை அனுப்ப மாட்டோம்'- களையிழக்குமா புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழா?

யானைகளை வரும் 11-ம் தேதி முதல் விழாக்களுக்கு அனுப்புவதில்லை என கேரள யானை உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். எனவே, கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவுக்கு யானைகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருச்சூர் பூரம் விழா

கேரள மாநிலத்தின் திருச்சூர் பூரம் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். திருவம்பாடி, பாறமேக்காவு தேவசம்போர்டுகள் சார்பில் திருச்சூர் பூரம் திருவிழா வரும் 11-ம் தேதி தொடங்கி நடக்கிறது. வரும் 13-ம் தேதி பிரசித்திபெற்ற பூரம் திருவிழா நடக்கிறது. பூரத்தின் போது நூற்றுக்கணக்கான யானைகள் புடைசூழ சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கும். இந்த நிகழ்வைக் காண நாடுமுழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்சூரில் கூடுவார்கள். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் குருவாயூர் அருகே ஒரு வீடு கிரகப்பிரவேசத்துக்காக தெச்சிக்கோட்டுகாவு ராமச்சந்திரன் என்ற யானை வரவழைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த யானைக்கு மதம் பிடித்து ஓடியதில் இரண்டுபேர் இறந்தனர். இதை காரணம்காட்டி திருச்சூர் பூரம் விழாவுக்கு ராமச்சந்திரன் யானைக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

 யானை

யானை உரிமையாளர்கள் ஒன்றுகூடி வர 11-ம் தேதி முதல் எந்த விழாவுக்கும் யானைகளை அனுப்புவதில்லை என அதிரடியாக முடிவெடுத்துள்ளனர். எனவே, வரும் 13-ம் தேதி நடக்கும் திருச்சூர் பூரம் விழாவுக்கு யானைகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை மற்றும் தேவசம்போர்டு அமைச்சர்கள் யானை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.