`என் கணவர் இறந்தது கமலுக்குத் தெரியாதா?' - சூலூர் பிரசாரத்துக்கு வர மனைவி எதிர்ப்பு | Woman files Petition to Coimbatore collector over Kamal haasan's visit

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (09/05/2019)

கடைசி தொடர்பு:16:20 (09/05/2019)

`என் கணவர் இறந்தது கமலுக்குத் தெரியாதா?' - சூலூர் பிரசாரத்துக்கு வர மனைவி எதிர்ப்பு

கமல்ஹாசன் சூலூர் வருவதைத் தடை செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பாலமுருகன்

திருப்பூர் மாவட்டம், பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்.  கூலி வேலை செய்து வந்த பாலமுருகனுக்கு விஜயகுமாரி என்கிற மனைவி, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இணைந்த பாலமுருகன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்லடம் பூத் கமிட்டி உறுப்பினராகத் தேர்தல் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் 18-ம் தேதி, பாலமுருகன் பூத் கமிட்டி  அலுவலகத்தில் உயிரிழந்தார். ஆனால், இதற்கு அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சூலூர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக கமல்ஹாசன் நாளை சூலூர் வருகிறார். இதையடுத்து கமலின் வருகையைத் தடை செய்ய வேண்டும் என்று பாலமுருகனின் மனைவி விஜயகுமாரி மற்றும் அருந்ததியர் முன்னேற்றக் கழகம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கமல்ஹாசனுக்கு எதிராக மனு

இது குறித்து விஜயகுமாரி கூறுகையில், ``என் கணவர் கட்சிக்காகப் பணியாற்றியபோதுதான் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியாகியும், கமல்ஹாசனோ, மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்தவர்களோ இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. கமலுக்கு இந்தத் தகவல் தெரியவில்லையா, இல்லை  யாரும் சொல்லவில்லையா... நாங்கள் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்துக்காகப் புறக்கணிக்கிறார்களா என்று தெரியவில்லை. எங்களைப்போல இன்னொரு அருந்ததியர் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. எனவே, கமல்ஹாசன் சூலூர் வருவதைத் தடை செய்ய வேண்டும்” என்றார்.