கடவூர் மலை கதவுக்கு இந்தப் பக்கம் திண்டுக்கல்; அந்தப் பக்கம் கரூர்! - செம த்ரில் ஸ்பாட்#MyVikatan | Door made up of rare stones found in kadavur hill 

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (09/05/2019)

கடைசி தொடர்பு:12:22 (10/05/2019)

கடவூர் மலை கதவுக்கு இந்தப் பக்கம் திண்டுக்கல்; அந்தப் பக்கம் கரூர்! - செம த்ரில் ஸ்பாட்#MyVikatan

'வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்' என்று 'பழைய' கார்த்திக் நடித்த படத்தின் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். அதைக் கேட்ட நண்பர் ஒருவர், ``இது என்னங்க பிரமாதம். கடவூர் ஜமீன்காரங்க, கடவூர் மலை மேலே கரூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு வாசலா பிரமாண்ட கருங்கல்லாலான நிலை அமைச்சு, அம்மாம் பெரிய கதவு போட்டவங்க" என்று கூறி, நமக்குள் ஆவலைத் தூண்டினார்.  `அந்த இடத்தை உடனே பார்த்தாகணுமே' என்ற பேராவல் ஏற்பட்டது. பாட்டை நிறுத்திவிட்டு, கடவூர் மலைக்குப் புறப்படும் `பாட்டை' பார்த்தோம்.

கடவூர் மலை
 

கடவூர் மற்றும் 34 குக்கிராமங்களைச் சுற்றி, இயற்கை எழில் கொஞ்ச, வட்டவடிவில் மலை அமைத்திருக்கிறது. அந்தக் கிராமங்களுக்கு வெளியில் இருந்து உள்ளே வந்து போக நான்கே நான்கு வழிகள்தான் உள்ளன. கிழக்குப் பக்கமாக இருக்கும் பொன்னணியாறு அணை வழியாகப் போகும் ஒரு வழி. பாலவிடுதி வழியாகச் செல்லும் வழி. மூன்றாவது வழியாக, சேவாப்பூர் வழியாகத் திண்டுக்கல் மாவட்டத்துக்குப் போகும் வழி. இதைத்தவிர, திண்டுக்கல் மாவட்டத்துக்கு மலையேறி நடந்தே போகும், இந்தக் கதவு கணவாய் வழி. 

கடவூர் மலை
 

வண்டிவாகனம் பெருகிவிட்ட இந்த நவீன யுகத்தில், இப்போது யாரும் நடக்கப் பிரியப்படுவதில்லை. அதனால், இந்த வழியை ஒருசிலரைத் தவிர யாரும் இப்போது பயன்படுத்துவதில்லை. ஆனால், 500 அடிகள் உயரத்தில் மலைமீது, இரண்டு மாவட்டங்களுக்கும் இடையில் பெரிய  நிலை அமைத்து, கதவு போட்டு, பாதுகாப்புக்கு ஆள்களை நிறுத்தி, இந்தக் கதவு கணவாய் அமைக்கப்பட்டதின் அபூர்வம் வரலாற்று எச்சமாக இன்றும் உள்ளது சிறப்பு. காலபெருவெள்ளத்தில், கதவுகள் அழிந்துவிட்டன. கருங்கல்லாலான நிலை மட்டும் எஞ்சி இருக்கிறது. அந்தக் கணவாய்க்கு அந்தப் பக்கம் போனால், திண்டுக்கல் மாவட்ட எல்லை தொடங்கிவிடுகிறது. இந்தப்பக்கம் வந்தால், கரூர் மாவட்ட எல்லை ஆரம்பித்துவிடுகிறது. தவிர, அந்தக்காலத்தில் பாண்டிய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் எல்லையாகவும் இந்த மலை இருந்திருக்கிறது.

கடவூர் மலை
 

நம்மிடம் பேசிய, பெரியவர் ஒருவர், ``இந்த 34 குக்கிராமங்களும் கடவூர் ஜமீன் ஆளுகையின் கீழ் இருந்திருக்கிறது. ஆரம்பத்தில், இந்த மலைவழியான கணவாய் வழியும், பாலவிடுதி வழியாக வரும் வழியும்தான் இருந்திருக்கிறது. மீதமுள்ள இரண்டு வழிகள் 50, 60 வருடங்களுக்குள்ள அமைக்கப்பட்டவைதான். மத்த எல்லா பகுதிகளிலும் மலை ஆயிரக்கணக்கான அடிகள் உயரத்தில் இருக்கு. இந்தக் கதவு கணவாய் உள்ள பகுதியில் மட்டும் 500 அடியில் மலை உள்ளது. அதனால், இந்த வழியாகக் கொள்ளையர்களும், தவறான ஆள்களும் மலையேறி, கடவூர் பகுதிகளுக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று ஜமீன் கட்டிய பிரமாண்ட வாசல்தான் இது. இங்கே பத்துக்கு மேற்பட்டவர்களை வேல்கம்புகளோடு காவலுக்கும் வைத்திருந்திருக்கிறார்கள். யார் இந்த வழியாக வந்தாலும், இந்தக் கதவில் செக்கப் செய்துவிட்டுதான் அனுப்பி இருக்கிறார்கள். வண்டிவாகனம் வந்து, எல்லோரும் `பறக்க' ஆரம்பித்தபிறகு, இந்தக் கதவு கணவாய்க்குப் பயன் இல்லாம போயிடுச்சு. அதனால், கதவுகள் சிதிலமாயி, அழிஞ்சுட்டு. இந்தக் கருங்கல் நிலைகள் மட்டும் ஓங்குதாங்கா இன்னமும் இங்க காட்சிப்பொருளா கம்பீரம் குறையாமல் நிக்குது" என்றார்.