`கண்ணைக் கட்டிக்கொண்டு 29 விநாடிகளில் க்யூப் கட்டங்களை ஒண்றிணைந்து சாதனை!' - சென்னை சிறுவன் அசத்தல் | Chennai boy achieves a record in Rubik's Cube

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (09/05/2019)

கடைசி தொடர்பு:17:10 (09/05/2019)

`கண்ணைக் கட்டிக்கொண்டு 29 விநாடிகளில் க்யூப் கட்டங்களை ஒண்றிணைந்து சாதனை!' - சென்னை சிறுவன் அசத்தல்

குழந்தைகளின் கவனிப்புத் திறனை அதிகரிக்க ஒரே நேர்கோட்டில் நிறங்களை ஒன்றிணைக்கும் ரூபிக்ஸ் க்யூப் (Rubik's Cube) விளையாட்டை பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தியிருப்பார்கள். அத்தகைய க்யூப் விளையாட்டில் சென்னையைச் சேர்ந்த சக்திவேல் என்ற நான்கு வயது சிறுவன், கடந்த வாரம் மூன்று உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இது குறித்து சக்தியிடம் பேசினோம்.

சிறுவன்

``சின்ன வயசில் இருந்தே 'க்யூப்' விளையாட்டுனா ரொம்பப் பிடிக்கும். ஏன்னா அதை விளையாடுறப்ப மூளை சுறுசுறுப்பா இயங்குற மாதிரி ஃபீல் பண்ணுவேன். ஆரம்பத்தில் நிறங்களை ஒன்று சேர்க்க முடியலைனா சோர்ந்து போயிடுவேன். அதற்கப்புறம் ஒவ்வொரு நிறத்தையும் எனக்குப் பிடிச்ச ஒரு கார்டூன் கேரக்டர் பெயரை வைச்சு அதையெல்லாம் ஒன்று சேர்க்க முயன்றேன். ஆரம்பக்கால பயிற்சியின்போது 45 விநாடிகள் வரை நேரம் செலவழித்தேன். கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு, 28.73 விநாடிகளில் நிறங்களை ஒரே நேர்கோட்டில் ஒன்று சேர்த்து `யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', `இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', `தமிழ்நாடு ரூபிக் க்யூப் அசோஷியேஷன் ரெக்கார்டு' என மூன்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன். கண்களைக் கட்டிக்கொண்டும் கியூபின் நிறங்களை ஒருங்கிணைப்பேன். அடுத்தபடியாக இன்னும் குறைந்த நேரத்தில் நிறங்களை ஒன்று சேர்த்து லிம்கா சாதனை புரிய பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்'' என்றார் நம்பிக்கையுடன்.