சுடுகாட்டை நந்தவனமாக மாற்றிய கடலூர் கூலித் தொழிலாளி! - நெகிழவைக்கும் பின்னணி #MyVikatan | this Cuddalore man really done a good job

வெளியிடப்பட்ட நேரம்: 17:21 (09/05/2019)

கடைசி தொடர்பு:12:17 (10/05/2019)

சுடுகாட்டை நந்தவனமாக மாற்றிய கடலூர் கூலித் தொழிலாளி! - நெகிழவைக்கும் பின்னணி #MyVikatan

ஓர் ஊரைச் சபிக்க வேண்டும் எனில் அந்த ஊர் சுடுகாடாக மாற வேண்டும் எனக் கூறுவது வழக்கம். ஆனால் ஒரு சுடுகாட்டையே அழகிய பூங்காவாக மாற்றியிருக்கிறார் ஒரு விவசாய கூலித் தொழிலாளி.

அர்சுணன்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்சுணன். இவர் மிகவும் ஏழ்மையான விவசாய கூலித் தொழிலாளி. இவர் தனது தந்தை, தாயார், மகன் இறந்த போது அடக்கம் செய்யப்பட்ட சுடுகாடு முட்புதர்கள் மண்டி காணப்படுவதை கண்டு வருத்தப்பட்டு அதைச் சீர் அமைக்க விரும்பினார்.

அர்சுணன்
 

இதையடுத்து அந்தச் சுடுகாட்டை அழகுபடுத்த சுற்றிலும் வேலி அமைத்தார். பின்னர் அங்குத் தென்னை, மா, பலா, வாழை எனப் பலன் தரும் மரங்களை நட்டார். மேலும் வாசனை வீசும் பூஞ்செடிகள், மூலிகைச் செடிகளை நட்டார். இதைக் கடந்த 12 வருடங்களாகத் தனது சொந்தச் செலவில் பராமரித்தும் வருகிறார்.

அர்சுணன்

சுடுகாட்டின் முகப்புச் சுவரில் ``இதயம் இயங்க மறுத்து நின்றுபோன மனிதர்களின் புகலிடம்" என்ற அழகிய வாசகத்தையும் எழுதி வைத்துள்ளார். சுடுகாட்டிற்கு வருபவர்கள் அமர்வதற்கு சிமென்டால் திண்ணையும் அமைத்துள்ளார். இந்தச் சுடுகாட்டில் உடலை எரிப்பவர்கள் அதன் பின்பு எரிந்த பாகங்களை அவர்கள் செலவிலேயே அப்புறப்படுத்த வேண்டும். உடலைப் புதைப்பவர்கள் வரிசையாகப் புதைக்க வேண்டும் எனவும் கட்டளை இட்டு அதைக் கண்காணித்து வருகிறார். சொந்த வீட்டையே சுத்தமாக வைத்துக்கொள்ளாத மனிதர்கள் மத்தியில் சுடுகாட்டை பூங்கா போல் பராமரிக்கும் இந்தக் கூலித் தொழிலாளியின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.