`அரவக்குறிச்சி அவ்வளவுதான்; சூலூரையாவது தக்கவையுங்க!' - எச்சரித்த எடப்பாடி பழனிசாமி  | CM EPS upset over IB report on 4 constituency by election: sources

வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (09/05/2019)

கடைசி தொடர்பு:18:22 (09/05/2019)

`அரவக்குறிச்சி அவ்வளவுதான்; சூலூரையாவது தக்கவையுங்க!' - எச்சரித்த எடப்பாடி பழனிசாமி 

செந்தில் பாலாஜியை வீழ்த்த எடப்பாடி பழனிசாமி பிளான்

தமிழகத்தில் நடைபெற உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து உளவுத்துறை உடனுக்குடன் கொடுக்கும் முடிவுகளைப் பார்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்செட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தேர்தல் பொறுப்பாளர்களிடம் சூலூரையாவது தக்கவைத்துக்கொள்ளுங்கள் என்று ஓப்பனாகவே கூறியுள்ளதாகக் கட்சியினர் தெரிவித்தனர். 

39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும் தி.மு.க கூட்டணி கட்சியினரும் 4 தொகுதிகளில் முகாமிட்டுள்ளனர். 

ஆளுங்கட்சியினருக்கு கடும் சவாலாக இருக்கும் தொகுதியாக அரவக்குறிச்சி பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க-விலிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு முகாம் மாறி தி.மு.க-வுக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிதான் ஆளுங்கட்சியினருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினருக்கும் பெரும் தலைவலியாக மாறியிருக்கிறார். அரவக்குறிச்சியில் வெற்றி பெற்று செந்தில்பாலாஜிக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என ஆளுங்கட்சியினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் வியூகம் அமைத்து வேலை பார்த்துவருகின்றனர். ஆனால், அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக உளவுத்துறை ஆரம்பத்திலிருந்தே ரிப்போர்ட் அனுப்பிவருகிறது.

எடப்பாடி பழனிசாமி

அதைப் பார்த்த அ.தி.மு.க தலைமை, கட்டாயம் அரவக்குறிச்சியில் வெற்றி பெற வேண்டும் என்று தேர்தல் பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டது. அப்போது களநிலவரத்தைத் தலைமையிடம் கூறிய தேர்தல் பொறுப்பாளர்கள், செந்தில்பாலாஜியின் ப்ளஸ், மைனஸ் குறித்த விவரங்களைத் தெரிவித்துள்ளனர். இதனால், செந்தில்பாலாஜியை வீழ்த்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுவரும் ஆளுங்கட்சியினர் மறைமுகமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினருடன் கைகோத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்தநிலையில், தி.மு.க தரப்பினர், அரவக்குறிச்சியில் வெற்றி நிச்சயம் என்று முழுமையாக நம்புகின்றனர். தேர்தல் அறிவிப்பதற்கு முன்பிருந்தே தொகுதியில் வேலையைத் தொடங்கிய செந்தில்பாலாஜி, ரேஸில் முன்னிலையில் இருந்துவருகிறார். அவருக்கு பள்ளப்பட்டி ஓட்டுகள் ப்ளஸாக உள்ளன. ஆனால், பள்ளப்பட்டிக்குள் அ.தி.மு.க-வினரால் ஓட்டுகூட கேட்க முடியாத சூழல் நிலவுகிறது. 

பள்ளப்பட்டி ஓட்டுகளை கவர அ.தி.மு.க-வில் உள்ள முஸ்லிம் நிர்வாகிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனால், பா.ஜ.க-வுடன் அ,தி.மு.க கூட்டணி அமைத்ததுதான் அவர்களுக்கு மைனஸாக இருக்கிறது என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இது தவிர, அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி, நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சிறப்பாகக் கவனித்துவருகிறார். இதனால் தி.மு.க-வுக்கு ஓட்டுக்கேட்க அதிகளவில் கூட்டம் கூடுகிறது. ஆனால், எதிரணியில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. 

 ஸ்டாலின்

அரவக்குறிச்சி தொகுதியின் தி.மு.க தேர்தல் அலுவலகத்தில் 4 மணி நேரம் ஆஜரானாலே போதும். அவரின் பெயர் டிக் செய்யப்பட்டுவிடுகிறது. அதோடு அ.தி.மு.க-வில் உள்ளவர்கள், அ.தி.மு.க-வுக்கு ஓட்டு கேட்க செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தினால் போதும். அவர்கள் தி.மு.க-வினரால் சிறப்பாகக் கவனிக்கப்படுவதாகத் தகவல் உள்ளது. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரவக்குறிச்சி தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்கள், ``அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜிக்கு அறிமுகம் தேவையில்லை. செந்தில்பாலாஜிக்கு உதயசூரியன் சின்னம் கூடுதல் ப்ளஸாக உள்ளது. செந்தில்பாலாஜியின் தேர்தல் வியூகத்தை எதிரணியரால் சமாளிக்க முடியவில்லை. உளவுத்துறையும் அரவக்குறிச்சி தி.மு.க-வுக்கு சாதகமாக இருப்பதாகத் கூறியுள்ளனர். இதனால் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கிறோம்" என்றனர். 

செந்தில்பாலாஜியை வீழ்த்த எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``எங்கள் கூட்டணி வலுவாக இருந்தாலும் அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜியின் இமேஜை மக்கள் புரிந்துகொள்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகிறோம். அரவக்குறிச்சி தொகுதியின் களநிலவரம் குறித்து கட்சித் தலைமை தேர்தல் பொறுப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தியது. அப்போது தேர்தல் பொறுப்பாளர் ஒருவர், அரவக்குறிச்சியில் அ.தி.மு.க-வினரின் உள்ளடி வேலைகள் குறித்து ஓப்பனாகப் பேசினார். அதைக்கேட்ட முதல்வர், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அரவக்குறிச்சி அவ்வளவுதானா என்று கேட்டார். அதற்கு நாங்கள் விளக்கமளித்தோம். அதன் பிறகு சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடந்தது. அப்போது சூலூரில் இறுதிக்கட்ட தேர்தல் டிரெண்ட் மாறியிருப்பதாகத் தேர்தல் பொறுப்பாளர்கள் கூறினர். அதோடு கொங்கு ஈஸ்வரனின் தேர்தல் வேலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதைக் கேட்ட முதல்வர், சூலூர் அ.தி.மு.க-வின் கோட்டை. அதைக் கண்டிப்பாகத் தக்க வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரத்திலும் மல்லுக்கட்டும் சூழல் நிலவுகிறது" என்றார். 

 செந்தில்பாலாஜியை வீழ்த்த எடப்பாடி பழனிசாமி

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, ``நிறத்துக்கு நிறம் மாறுவதைப்போல செந்தில்பாலாஜி, கட்சி மாறிக்கொண்டிருக்கிறார். அவரின் சுயரூபம் மக்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தத் தேர்தல் செந்தில்பாலாஜிக்கு ஒரு பாடமாக அமையும். பதவிக்காக அவர் கட்சி மாறியிருக்கிறார். அவரின் எண்ணம் ஒருநாளும் நிறைவேறாது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டனர். டி.டி.வி.தினகரன் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அரவக்குறிச்சியில் வெற்றிபெறுவது உறுதி" என்றனர். 

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தாலும் அரவக்குறிச்சியில் தேர்தலை நிறுத்த காரணத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.