சித்திரக்குள்ளர்களின் கண்ட்ரோலில் இருக்கும் காத்தாடிப்பாறை?! - ஆண்டிபட்டி விசித்திரம் #MyVikatan | Kathadi parai in antipatti is known for Chitira kullargal 

வெளியிடப்பட்ட நேரம்: 19:16 (09/05/2019)

கடைசி தொடர்பு:12:24 (10/05/2019)

சித்திரக்குள்ளர்களின் கண்ட்ரோலில் இருக்கும் காத்தாடிப்பாறை?! - ஆண்டிபட்டி விசித்திரம் #MyVikatan

ஆன்மிகத்தில் இருக்கும் சில மர்மங்களில் ஒன்றுதான் சித்திரக் குள்ளர்கள். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பிரசித்திபெற்ற வேலப்பர் கோயிலுக்கு இன்றும் சித்திரக்குள்ளர்கள் வருவதாக நம்பப்படுவது விசித்திரமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

சித்திரகுள்ளர்

ஆண்டிபட்டியில் இருந்து வேலப்பர் கோயில் செல்லும் சாலையில், தெப்பம்பட்டி விலக்கிலிருந்து பிரியும் ஓர் சாலையில் சென்றால் வருகிறது ஒற்றைப்பாறை. அதைக் காத்தாடிப் பாறை என்று அழைக்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். தனியாக அந்தரத்தில் பாறை நிற்பது போல அமைந்துள்ளதால், இப்பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். இது ஒருபுறம் என்றால், மாதத்தில் ஒவ்வொரு பௌர்ணமி நாளில், இந்த காத்தாடிப்பாறைப் பகுதியை ஒட்டிய மலைப்பகுதியில் வசிக்கும் சித்திரக்குள்ளர்கள், மலை வழியாகவே, வேலப்பர் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டுச் செல்வதாக இன்றளவும் நம்பப்படுகிறது. 

காத்தாடிப்பாறை

சித்திரக் குள்ளர்களை இதுவரை யாரும் நேரில் பார்த்ததில்லை என்று கூறும் அப்பகுதி மக்கள், சித்திரக்குள்ளர்கள் நடந்துசென்ற சிறிய கால் தடம் மற்றும் அவர்கள் வசிக்கும் சிறிய அளவிலான மணல் வீடுகளைப் பலர் பார்த்திருப்பதாகவும், இந்த மலைப்பகுதி முழுவதும் சித்திரக் குள்ளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி என்றும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். மேலும், எவ்வளவு மலை, இடி, புயல் அடித்தாலும், சித்திரக் குள்ளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும், வேலப்பரை தரிசிக்க அங்கே வந்துவிடுவார்களாம். அந்தரத்தில் நிற்பதுபோல காட்சியளிக்கும் அந்தக் காத்தாடிப்பாறைகூட சித்திரக் குள்ளர்களின் சக்தியால் தான் இருப்பதாகக் கூறுகிறார்கள். காட்டுக்குள்ளே இருக்கும் வேலப்பர் கோயில் மலைப் பகுதியில் இருக்கும் பளியர்கள்கூட இந்தச் சித்திரக் குள்ளர்கள் பற்றிய கதைகளில் அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஒரு நாள் நாமும் சித்திரக் குள்ளர்களைப் பார்த்துவிட வேண்டும்.