`கரும்பைப் போல் சக்கையாகக் கசங்கி கஷ்டப்படுகிறோம்!' - கண்கலங்கும் விவசாயிகள் | sugarcane farmers files complaint with thanjavur collector

வெளியிடப்பட்ட நேரம்: 21:35 (09/05/2019)

கடைசி தொடர்பு:21:42 (09/05/2019)

`கரும்பைப் போல் சக்கையாகக் கசங்கி கஷ்டப்படுகிறோம்!' - கண்கலங்கும் விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு தனியார் சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்குத் தெரியாமல் விவசாயிகள் பெயரிலே ரூபாய் 360 கோடி கடன் வாங்கி ஏமாற்றிய சர்க்கரை ஆலை உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அண்ணாதுரையிடம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு கொடுத்தனர்.

அப்போது ஒரு கரும்பு விவசாயி, `எங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடிக்கும் நிர்வாகம், எங்கள் பெயரில் வங்கியில் கடன் வாங்கி மோசடியும் செய்து பலனை அனுபவித்து வருகிறது. ஆனால், நாங்கள் கரும்புச் சக்கையாக பிழியப்பட்டு வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்'' என கண்கலங்கினார். 

கரும்பு விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் திருஆரூரான், அம்பிகா சர்க்கரை ஆலையில் விவசாயிகளின் பெயரில் ரூ.360 கோடி வங்கிக் கடன் வாங்கி ஏமாற்றிய ஆலையின் உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் மற்றும் கரும்பு விவசாயிகள் தஞ்சாவூர் கலெக்டர் அண்ணாதுரையிடம் மனு கொடுத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் ரவீந்திரன் கூறியதாவது, ``தஞ்சாவூரில் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் திருஆரூரான் சர்க்கரை ஆலையும், திருவிடைமருதூர் அருகே கோட்டூரில் அம்பிகா என்ற சர்க்கரை ஆலையும் உள்ளது. இந்த இரண்டு சர்க்கரை ஆலைகளும் ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த இரண்டு சர்க்கரை ஆலையிலும் கடந்த இரண்டு வருடங்களாக விவசாயிகள் அறவை செய்த கரும்புக்கான பாக்கித் தொகை ரூபாய் 82 கோடியை இதுவரை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். இதற்காக கரும்பு விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்தியும் இதுவரை நிலுவைத் தொகையைக் கொடுக்கவில்லை.

இதற்கிடையில் இந்த ஆலைகளின் நிர்வாகம், விவசாயிகள் கரும்பைப் பதிவு செய்யும்போது, அவர்களிடம் பல்வேறு படிவங்களில் கையெழுத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். பின்னர் அதை வைத்து கும்பகோணத்தில் உள்ள பல வங்கிகளில் விவசாயிகளுக்குத் தெரியாமல் விவசாயிகளின் பெயரிலேயே கடன் பெற்றுள்ளனர். பல விவசாயிகளின் பெயரில் இதுவரை சுமார் ரூ.360 கோடி கடனை ஆலை நிர்வாகங்கள் பெற்றுள்ளது. இந்தக் கடன் தொகையை விவசாயிகளுக்கும் கொடுக்கவுமில்லை தெரிவிக்கவும் இல்லை. இந்த நிலையில், வங்கிகளிலிருந்து கடந்த சில மாதங்களாக அசலும், வட்டியும் செலுத்த வேண்டும் என ஒவ்வொரு விவசாயி பெயருக்கும் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை ஆலை நிர்வாகம் கொஞ்சம்கூட கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக கரும்பு விவசாயிகள் தஞ்சாவூர் கலெக்டரிடம் பலமுறை புகார்  கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேபோல் கடலூர் மாவட்டம் சித்தூரில் இதே நிர்வாகத்துக்குச் சொந்தமான சர்க்கரை ஆலையிலும் விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.80 கோடி வரை கடன் பெற்றுள்ளனர். அதில் விவசாயி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 8-ம் தேதி கடலூர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் சர்க்கரை ஆலையின் உரிமையாளர் தியாகராஜனைக் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.360 கோடியை வங்கியில் வாங்கி கரும்பு விவசாயிகளை ஏமாற்றியுள்ள ஆலையின் உரிமையாளரை தஞ்சாவூர் கலெக்டர் கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதோடு, வங்கியில் பெற்ற தொகையை ஆலை நிர்வாகமே செலுத்த உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும், ஆலை நிர்வாகம் இதுவரை வழங்காமல் உள்ள கரும்புக்கான நிலுவைத் தொகையை உடன் வழங்க நடவடிக்கை வேண்டும்'' என்றார்.

கபிஸ்தலம் கரும்பு விவசாயி ராமகிருஷ்ணன் கூறியதாவது, ``நான் என் வயலில் செய்யப்படும் கரும்பு சாகுபடியை திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு அறவைக்கு அனுப்புவது வழக்கம். இந்த நிலையில், எனக்கு கும்பகோணம் கார்ப்பரேசன் வங்கியின் கிளையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதில் நான் வங்கியில் ரூ.23 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும், தற்போது வட்டியோடு சேர்த்து  28 லட்சம் உள்ளதாகவும் அதை செலுத்த வேண்டும் எனக் கூறியிருந்தனர். ஆனால், வங்கியில் ஒரு பைசாகூட நான் எந்த ஒரு கடனும் பெறவில்லை. நான் ஆலையில் கரும்பைப் பதிவு செய்தபோது, அதன்  ஊழியர்கள் பல்வேறு படிவங்களில் என்னிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டனர். அதைப் பயன்படுத்தியே வங்கியில் கடன் பெற்றிருப்பது தெரியவந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். என்னைப் போல் பல விவசாயிகள் ஆலை நிர்வாகத்தால் ஏமாற்றப்பட்டுள்ளோம். கரும்புக்கான நிலுவைத் தொகையும் கொடுக்கவில்லை. ஆலை நிர்வாகம் இப்படி செய்து கரும்பு சாறை போல் பலனை அனுபவித்து வருகின்றனர். ஆனால், நாங்கள் கரும்பு சக்கையைப் போல் வாழ்வில் கசங்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம்'' என கண் கலங்க கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க