`அம்பு மாட்டிக்கொண்டது; எய்தவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியவேண்டும்!' - முத்தரசன் அதிரடி | Change TN Chief election commissioner, urges CPI

வெளியிடப்பட்ட நேரம்: 22:08 (09/05/2019)

கடைசி தொடர்பு:22:08 (09/05/2019)

`அம்பு மாட்டிக்கொண்டது; எய்தவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியவேண்டும்!' - முத்தரசன் அதிரடி

`தமிழக தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் அல்லது கூடுதலாக ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து, 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலையும், தொடர்ந்து நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையும் நடத்த வேண்டும்' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்தார்.

முத்தரசன் பேட்டி

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து இன்று மாலை பிரசாரம் மேற்கொள்ள கரூர் வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், `தேர்தல் ஆணையம் குறித்து பல்வேறு ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையம் ஒரு கட்சிக்கு, ஆட்சிக்குக் கட்டுப்பட்டது அல்ல. அரசியல் அமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட, அது ஒரு பொது அமைப்பு, தன்னிச்சையாக இயங்கக்கூடிய ஒரு நியாயமான அமைப்பாகும். ஆனால், யாருக்கோ ஐயப்பட்டு, யாருக்கோ கட்டுப்பட்டு, யாருடைய நிர்பந்தமும் பணிந்து செயல்படுவதாகத் தற்போது அமைந்துள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நிறைவடைந்தபோது, தமிழக தேர்தல் அதிகாரி தர்மபுரி தொகுதியில் 8 வாக்குச் சாவடிகளுக்கும், கடலூர் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்கும், திருவள்ளூர் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்கும் என 10 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருப்பதாக செய்தி வெளியிட்டு, அனைத்து பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வெளியே வந்தது. ஆனால், நேற்றைய தினம் தமிழக தேர்தல் அதிகாரி திடீரென, '46 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்' என அறிவித்திருப்பது ஏற்கெனவே 10 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு செய்ய கடிதம் எழுதிவிட்டு தற்போது திடீரென 36 வாக்குச்சாவடிகளைச் சேர்த்து, 46 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவித்து இருப்பதில் மிகப்பெரிய ஐயப்பாடு எழுந்துள்ளது. 

முத்தரசன்

எந்த ஒரு அரசியல் கட்சியும் 46 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு கோரிக்கை வைக்காத சூழ்நிலையில், திடீரென தமிழக தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது ஆச்சர்யமாகவும் விந்தையாகவும் உள்ளது. அதேபோல, நேற்று முன்தினம் கோவையிலிருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரிகள், 'இது ஒரு சாதாரணமான நிகழ்வுதான்' என அறிவித்திருப்பது, சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. இது ஒரு சாதாரண நிகழ்வுதான் என்றால், அதை வெளிப்படையாகச் செய்திருக்க வேண்டியதுதானே. மாறாக, ரகசியமாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற ஐயம் எழுந்துள்ளது.

அதேபோல, மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் ஆவணங்கள் இருந்த அறையில் தாசில்தார் ஒருவர் உள்ளே நுழைந்த சம்பவம் நடைபெற்றது. இந்த நிகழ்வு 3 மணி நேரம் நடை பெற்றதாக சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்து, அவர் தற்போது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு தாசில்தார் தனிப்பட்ட முறையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறையில் நுழைய முடியாது. நிச்சயம் மேலதிகாரி ஆணையிட்டுதான் நடைபெற்று இருக்க வேண்டும். தாசில்தார் தன்னிச்சையாகச் செயல்பட்டு இருக்க முடியாது இது நடைமுறை சாத்தியமல்ல. இதுபோன்ற நேரத்தில் உயர் அதிகாரிகள் தப்பித்துக்கொள்வதும் கீழ்மட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டு பழிவாங்கப்படுவதாக உள்ளது. அம்பு மாட்டிக்கொண்டது அம்பை செய்தவர்கள் யார் என்பதை மக்களுக்குத் தெரிய வேண்டும். அம்பை எய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக தேர்தல் அதிகாரி மீது படிப்படியாக நம்பிக்கை குறைந்து நம்பகத்தன்மையை இழந்து உள்ள சூழ்நிலையில், நடைபெற உள்ள நான்கு சட்டமன்ற இடைத்தேர்தலையும், மே 23-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையையும் கூடுதலாக ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் அல்லது தமிழக தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையாகும்'' என்றார் அதிரடியாக.