அரசியல் காழ்ப்புணர்ச்சி? - நீதிமன்ற உத்தரவால் 2 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட அரசு மருத்துவமனை | Kumbakonam government hospital opened after 2 years after court order

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (09/05/2019)

கடைசி தொடர்பு:22:30 (09/05/2019)

அரசியல் காழ்ப்புணர்ச்சி? - நீதிமன்ற உத்தரவால் 2 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட அரசு மருத்துவமனை

கும்பகோணத்தில் ரூ.60 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட அரசு மருத்துவமனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, மருத்துவமனையை உடனே திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இன்று மருத்துவமனை திறக்கப்பட்டது.

கும்பகோணம் மேலக்காவிரி பகுதியில் அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளது. 80 ஆண்டுகள் பழைமையான இந்த மருத்துவமனையில் இருந்த கட்டடங்கள் இடியும் தருவாயில் இருந்தது. இதையடுத்து, மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சரும், அப்போது எம்.பி-யாகவும் இருந்த மணிசங்கர் அய்யர் முயற்சியால் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மருத்துவமனைக்கு ரூ.60 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தமிழக அரசு மருத்துவமனையைத் திறக்கவில்லை.

பின்னர் மருத்துவமனையை உடனடியாக திறக்க வேண்டும் என கும்பகோணம் பொதுமக்களும், சமூக அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் இந்த மருத்துவமனையைத் திறக்க நகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் ஆர்வம் காட்டாமல் அலட்சியம் காட்டின. இதையடுத்து, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கும்பகோணம் நகரத் தலைவர் கண்ணன், மேலக்காவேரி மருத்துவமனை திறக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த 8-ம் தேதி விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், இன்று மருத்துவமனையை உடனே திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இதன் பிறகு இன்று மேலக்காவேரி அரசு மருத்துவமனை நகராட்சி அதிகாரிகளால் திறக்கப்பட்டது. பின்னர் நிலைய மருத்துவ அலுவலர் ஆனந்தி தலைமையில் பெண்களுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கண்ணனிடம் பேசினோம், ``கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படவில்லை. ஏன் என்று கேட்டதற்கு சரியான காரணமும் சொல்லப்படவில்லை. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், சுகாதராத்துறை, ஆணையர் என பலருக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிசங்கர் அய்யர் முயற்சியில் கட்டப்பட்டதால் அ.தி.மு.க அரசு இதை திறப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது. பின்னர் மருத்துவமனை கட்டடத்தை திறக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். இதை விசாரித்த நீதிமன்றம் உடனே திறக்க உத்தரவிட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திறக்கப்படாமல் இருந்த மருத்துவமனையை நீதிமன்றம் திறக்க வைத்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க